நீதியரசர், மூத்த வழக்குரைஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை இசைக் கலைஞர்கள் பங்கேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்
பெங்களூரு, மார்ச். 4- ‘‘மொழிகள் நம்மைப் பிரிக்கலாம். சுயமரியாதை மற்றும் சமூக நீதி நம்மை இணைக்கும்” என்றும், ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்றும், ”சுயமரியாதை என்பது தமிழர்களுக்கோ, திராவிடர்களுக்கோ மட்டும் உரியதன்று. உலகளாவியது” என்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் உரையாற்றினார்.

மாநாட்டில் தமிழர் தலைவரால் பாராட்டப் பெற்ற பூசி.இளங்கோவன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்.
கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு ஒரு நாள் மாநாடு 28.02.2026 சனிக்கிழமை அன்று, காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, டி.மில்லர்ஸ் சாலை வசந்த் நகர் பெங்களூருவில் தேவராஜ் அர்ஸ் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கட்டட வாசலில் சமூக நீதிப் போராளி ஹேவனூர் அவர்களின் மார்பளவு சிலை வடிவில் நம்மை வரவேற்றார். அரங்க வாசலில் இடது பக்கம் கழகத் தலைவர் ஆசிரியர் கையில் கொடியுடனும், வலது பக்கம் தந்தை பெரியார் கைத்தடியுடனும் நம்மை அரங்கினுள் வருக! வருக! என்று இணைந்து வரவேற்றனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையின் மேலே, பசவண்ணா, சர்வக்ஞர், ஜோதிராவ் ஃபூலே, சாவித்திரிபாய் ஃபூலே, அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, வேமண்ணா, சாகுமகராஜ், தேவராஜ் அர்ஸ் ஆகிய சமூகநீதிப் போராளிகளின் படங்கள் அலங்கரித்து நடைபெற்ற நிகழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை கட்டியம் கூறின. அந்தக் கட்டிடத்தைச் சுற்றி கழகக் கொடிகள் மாநிலம் தாண்டிச் சென்று என்னைப் பார்! என்னைப் பார்! என்று அழைத்தன. நிகழ்ச்சி நிரலின் தொடக்க விழா, முதல் அமர்வு நடைபெற்றது. மதிய இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் அமர்வு மற்றும் நிறைவு விழா கருத்தரங்கம் என்று பிரிக்கப்பட்டு, அதன்படியே நடைபெற்றது. இத்தகைய சிறப்புகளுடன் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு ஒரு நாள் மாநாடு தொடங்கியது. தொடக்கத்தில், ’பெரியார்’, ’அம்பேத்கர்’, ’தேவராஜ் அர்ஸ்’, ’ஹேவனூர்’ ஆகிய நான்கு சமூகநீதிப் போராளிகளின் படங்களை, கருநாடக ஆளுமைகள், மும்பை, தமிழ்நாடு, கருநாடக கழகத் தோழர்கள், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பலத்த கைதட்டல்களுக்கிடையில் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு கடந்து பிற மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஆசிரியருடன் பங்கேற்பது என முடிவு செய்து மும்பைத் தோழர்கள், 28.02.2026 அன்று பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்றனர். மும்பை பெரியார் பாலா இயக்க நன்கொடையாக ரூ.5000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
தொடக்கத்தில் கருநாடக மொழி வாழ்த்து பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து, தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டது. தொடர்ந்து கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் குணவேந்தன் அனைவரையும் முறைப்படி வரவேற்று மகிழ்ந்தார். கருநாடக மாநிலத் தலைவர் ஜானகிராமன் முன்னிலை வகித்து உரையாற்றினார். செயலாளர் முல்லைக்கோ தொடக்க உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கருநாடக மாநிலத்தின் மேனாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா குமார் கன்னடத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையில், மனுஸ்மிருதி எவ்வளவு மோசமான சிந்தனைகளை வலியுறுத்துகிறது என்றும் தமிழ்நாட்டில், திராவிடர் கழகமும், கருநாடகாவில் ’விசாரம்’ அமைப்பும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்கிற பொருளில் பேசினார். கருநாடக மாநிலத் தலைவர் ஜானகிராமன் முன்னிலையேற்று சுருக்கமாக உரையாற்றி அமர்ந்தார். அதற்கு அடுத்து, கருநாடக அரசு மேனாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்மக்குமார், தந்தை பெரியாரின் கருத்துகள் கருநாடகாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, தந்தை பெரியாரின் கேள்விகள் வியப்புக்குரியவை என்றும், தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை பின்பற்றி 1000க்கும் மேற்பட்ட திருமணங்களை நான் செய்து வைத்திருக்கிறேன் என்றும் உரையாற்றினார். தொடர்ந்து, நாத்திகம் சிறீதர், ’பெரியார் ஒருவர்தான் பெரியார்’ என்னும் பாடலை ராகத்துடன் பாடி அனைவரையும் மகிழ்வித்தார். அடுத்து கருநாடக மாநிலத்தின் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் நாக மோகன் தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பெரியார் போல நாம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், புத்தர், பசவண்ணா, பெரியார், நாராயண குரு, அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் இதற்காகத்தான் போராடியுள்ளனர் என்றும் பேசி அமர்ந்தார். அடுத்து, சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத் உரையாற்றினார். கழகத் தலைவருக்கு கருநாடக திராவிடர் கழகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. கழகத் தலைவர் மேடையில் இருக்கும் ஆளுமைகளுக்கு மரியாதை செய்து நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கினார். ஊடகவியலாளருக்கான சமூக நீதி அமைப்பின் தலைவர் முத்துமணி நன்னன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மாநாட்டில் கருநாடக மாநில பெரியார் பிஞ்சுகளின் இசை நிகழ்ச்சி…
நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையை, “பெரியார் மண்ணிலிருந்து வந்து தேவராஜ் அர்ஸ் மண்ணில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறோம்” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தொடங்கினார். அடுத்து, “சுயமரியாதை என்பது தமிழர்களுக்கோ, திராவிடர்களுக்கோ மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடியது” என்றும், ”மொழிகள் நம்மை பிரிக்கலாம்; சுயமரியாதை நம்மை இணைக்கும்” என்றும், ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற திராவிடர்களின் உயர்ந்த பண்பை சுட்டிக்காட்டிவிட்டு, “சுயமரியாதை இயக்கம் ஏன் தேவைப்பட்டது? என்றொரு கேள்வி கேட்டு, இந்தியாவில் நிலவிய பிறவிபேத நோயை சுட்டிக்காட்டினார். அது எவ்வளவு கொடிய நோய் என்பதை, “நிறபேதம் உள்ள நாடுகளில் கூட எளிய மக்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. ஆனால், 78 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில், பிறவி பேதமான சுடுகாட்டிலும் ஜாதி இருக்கிறது. ஜாதியின் காரணமாகத்தான் நமக்கு அனைத்தும் மறுக்கப்பட்டன” என்று கூறி, நோயின் தன்மையை விளக்கினார். அடுத்து, “இதை உருவாக்கியது யார்?” என்று மற்றொரு கேள்வி கேட்டார். அதற்கு, “மனுதர்மம்” தான் என்று பதிலளித்தார். அடுத்து அந்த மனுதர்மம் வந்த மூலத்தை, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘இந்துமதம் எங்கே போகிறது?’ எனும் புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் படித்துக் காட்டினார். அதன்பின்னர், ‘அசல் மனுதர்மம்’, ’இந்திய அரசியல் சட்ட புத்தகம்’ இரண்டையும் கைகளில் வைத்துக் கொண்டு, மனுதர்மத்தை ‘ஆரியம்’ என்றும், அரசியல் சட்டத்தை ‘திராவிடம்’ என்றும் ஒப்பிட்டுப் பேசினார்.



கலை நிகழ்ச்சிகள் நடத்திய பெரியார் பிஞ்சுகளுக்கு தமிழர் தலைவர் பாராட்டு. டவுன் ஹால் அருகே தொழிலாளர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்பு.
கோலார் தங்க வயல் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினர்.
தொடர்ந்து, அந்த மனு தர்மத்திற்கு எதிராக, இந்திய அரசியல் சட்டத்தின் கூறு 51AH என்ன சொல்கிறது என்பதை விவரித்தார். தொடர்ந்து, மனித சமுதாயத்தில் சரிபாதி இருக்கிற பெண்களை மனுதர்மம் ’நமோ சூத்திரர்கள்’ என்று கேவலமாக வரையறுத்துள்ளதை வேதனையுடன் சுட்டிக்காட்டிய அவர், திராவிடம் – திராவிட மாடல் அரசு சொத்துரிமை உள்ளிட்ட பெண்களுக்கு செய்த சாதனைகளைப் பட்டியல் இட்டார். அதில், ”சுயமரியாதைத் திருமணம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று” என்றார். அதேபோல் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கருநாடகாவில் அமலில் உள்ளதைக் குறிப்பிட்டு, மற்றவைகளில் தமிழ்நாடு வழிகாட்டுகிறது என்றும், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைப் பொறுத்தவரையில், கருநாடக அரசுதான் வழிகாட்டுகிறது” என்று புகழாரம் சூட்டினார். இறுதியாக, “சுமார் 5000 ஆண்டுகளாக நிலவிவந்த சமூக அடிமைத்தனத்தை மறுபடியும் கொண்டு வந்து, பழைய நிலையை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முயல்கிறது” என்று கடுமையாகக் குற்றம் சாட்டி, “திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு இந்த அவல நிலையில் இருந்து மாற்ற முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார். கழகத் தலைவர் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து, கருநாடகாவைச் சேர்ந்த ஆ.கமலக்கண்ணன் பெரியார் உலகம் நன்கொடையாக கழகத் தலைவரிடம் ரூபாய்
1 லட்சம் வழங்கி மகிழ்ந்தார்.
அடுத்ததாக, முதல் அமர்வு ‘இந்திய நாத்திகச் சங்கங்கள்’ கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் தலைமையில் நடைபெற்றது. கருநாடக தலித் சங்கத் தலைவர் மாவலி சங்கர், லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் குமணராசன், தினேஷ் அமின்மாட்டு, நாகேஷ் அரலி கொப்பே ஆகியோர், ‘சுயமரியாதை இயக்கம் – இன்றும், நாளையும்’ எனும் தலைப்பில் முன்னிலை வகித்து சிறப்பான கருத்துகளை கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் முன்வைத்து உரையாற்றினர். ஊடகவியலாளருக்கான சமூக நீதி அமைப்பின் தலைவர் முத்துமணி நன்னன் இணைப்புரை வழங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார். நிகழ்வில் தங்க வயலில் இருந்து ஆதித்தன், அறிவழகன், செவத்தம்மா, கிருபாநிதி, நாத்திகம் சிறீதர், பிரபுராம், திருமுருகன், கருணாகரன், இளங்கோவன், நிர்மலா அறிவழகன், பொற்செழியன் மற்றும் மும்பையைச் சேர்ந்த தோழர்கள் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன், பெரியார் பாலா, அந்தோணி மற்றும் சென்னையைச் சேர்ந்த தங்கமணி தனலட்சுமி, கழகக் காப்பாளர் வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், மோகன்ராஜ், தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் தாமோதரன், போளூர் பன்னீர்செல்வம் கருநாடக மாநிலத் தோழர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஏ.புகழேந்தி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினர். விழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கருநாடக மாநில தி.மு.க. அமைப்பாளர் ந.ராமசாமி, ‘போர்முரசு’ கதிரவன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
கலை நிகழ்ச்சிகள் நடத்திய பெரியார் பிஞ்சுகளுக்கு தமிழர் தலைவர் பாராட்டு. டவுன் ஹால் அருகே தொழிலாளர்கள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்பு. கோலார் தங்க வயல் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த வி.ஏ.புகழேந்தி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினர். விழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கருநாடக மாநில தி.மு.க. அமைப்பாளர் ந.ராமசாமி, ‘போர்முரசு’ கதிரவன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
