நிதி நிலை அறிக்கையில் எதுவுமே இல்லை ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திண்டிவனம், பிப்.5 ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது என்று திண்டிவனத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சமூக பாதுகாப்புத் திட்டங்களில் 1,82,967 பேருக்கு ஓய்வூதியம் மற்றும் ‘என் கனவு என் எதிர்காலம்’ இணையதளம் தொடக்க விழா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமம் சிப்காட் வளாகத்தில் நேற்று  (4.2.2026) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா வரவேற்றார்.

13,879 பேருக்கு ரூ.43.75 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.390.40 கோடியில் முடிவுற்ற 199 பணிகளை திறந்து வைத்தும், ரூ.254.29 கோடியில் 24 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் அறிக்கையில் வழங் கிய வாக்குறுதிகளில் பெரும் பாலானவற்றை நிறைவேற்றியும், வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்களை, முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்து, தமிழ்நாடு மக்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். சட்டங்களையும், பெரிய பெரிய திட்டங்களை நிறைவேற்றுவது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக 2021-இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன்பாக 234 தொகுதிகளிலும் உங்களின் குரலை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றேன். மனுக்களை மட்டும் வாங்காமல், மக்களின் நம்பிக்கையும் பெற்று, திராவிட மாடல் அரசை அமைத்தோம். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையை உருவாக்கி, மக்களிடம் இருந்து பெறப்பட்ட 4.57 லட்சம் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம்.மேலும் ‘முதலமைச்சரின் முகவரி’ என்ற புதிய துறையை உருவாக்கி, 2021 மே மாதம் முதல் இப்போது வரை 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். அரசு என்பது மக்களுக்காக 24 மணிநேரமும் செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்கக் கூடாது. நிர்வாகம் எளிமையாகவும், விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். இதனை மனதில் கொண்டு மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தை நவம்பர் 2023 முதல் மார்ச் 2025 வரை 4,835 முகாம்களை நடத்தி, 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு வழங்கியிருக்கிறோம்.

இத்திட்டமும் மக்களிடம் வரவேற்பை பெற்றதால் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி 10 ஆயிரம் முகாம்களை நடத்தி 38.50 லட்சம் மனுக்களை பெற்று 38.44 லட்சம் மனுக்களை இறுதி செய்திருக்கிறோம்.

திராவிட மாடல் அரசின் வரலாற்றில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.13 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இத்திட்ட விதிகளில் தளர்வு செய்து கூடுதலாக இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரம் சகோதரிகள் உட்பட 16,94,339 பெண்களுக்கு கடந்த இரு மாதங்களாக உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் குரலையும் கேட்டு, நிறைவேற்றி வருகிறோம். டிஜிட்டல் யுகத்தில் ஏஅய் கோலோச்சும் காலத்தில் அரசு சேவைகளை இருந்த இடத்திலேயே பெறும் வகையில், ‘நம்ம அரசு’ என்ற பெயரிலான ‘வாட்ஸ் ஆப்’ சேவையை கடந்த மாதம் தொடங்கினோம். 78452 52525 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பினால், 16 துறைகளின் 51 சேவைகளை செல்போனிலேயே பெற முடியும்.முன்னோக்கி செல்லும் திராவிட மாடல் அரசு, ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தையும் தொடங்கியது. மேலும் இளைய தலைமுறையின் எண்ணங்களை அறிந்து, அவர்களது கனவுகளை சேகரிக்க, இந்நிகழ்ச்சி மூலமாக ‘என் கனவு என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கிறது

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு திட்டமிட்டு வந்தால், மற்றொரு பக்கம் ஒன்றிய பாஜக அரசும், அதன் கூட்டாளிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதற்கு அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்கின்றனர். இதற்கு உதாரணமாக, ஒன்றிய அரசின் பட்ஜெட்டை சொல்லலாம். தமிழ்நாட்டிற்கு எதுவுமே இல்லை. ஒப்புக்கு திருக்குறளாவது சொல்லியவர்கள், அதையும் மறந்துவிட்டனர். பெயருக்குக்கூட தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டமும் கிடையாது. நம்முடைய பல்லாண்டு கால கோரிக்கைகள் எதுவும் கிடையாது. தேர்தல் நடைபெறுகின்ற மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவது பாஜக அரசின் தந்திரமாகும். பீகார், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அப்படித்தான் நிதியை ஒதுக்கினார்கள். செயல்படுத்தினார்களா? என்று கேட்டால், இல்லை. தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது. பிற மாநிலங்களில் வழக்கமாக செய்யக்கூடிய நிலையைக் (ஸ்டேண்ட்-அய்) கூட தமிழ்நாட்டிற்குச் செய்யவில்லை. அந்தளவுக்கு தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் வெறுப்பு. இந்தியாவில் 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு நாம் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு புதிய நெடுஞ்சாலைகள், ரயில் வழி தடங்கள், மெட்ரோ ரயில்கள் என ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசுக்கு வரி வருவாயை வாரி வழங்குகிறது தமிழ்நாடு. ஆனால், சொற்பமான பங்கை தருகின்றனர். 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கின்றனர்.

தேர்தல் முடிவு

ஒருவேளை தேர்தல் முடிவு பாஜகவுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதனால்தான், எப்படியும் தோற்கத்தான் போகிறோம், இவர்களுக்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். அதுதான் உண்மை. நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. மக்களின் ஆதரவுடன் திராவிட மாடல் 2.0 அரசு அமையப் போகிறது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக முன்னேற்றுவோம். வெல்வோம் ஒன்றாக” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்பிக்கள் ரவிக்குமார், தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிகண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

முன்னதாக, செஞ்சி சாலையில் திரண்டிருந்த மக்களை முதலமைச்சர் சந்தித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *