தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து, தன்னாட்சி உரிமை வழங்கிடுவது அவசியம் – இந்திய அரசு இதனை வலியுறுத்தவும் வேண்டும்!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழர்கள் வாழ்வில் மாற்றமில்லை;

* இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது!

இலங்கைத் தீவில் ஆட்சிகள் மாறினாலும், தமிழர்களுக்கான வாழ்வுரிமையில் மாற்றம் ஏற்படவில்லை. தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து அவர்களுக்குத் தன்னாட்சி உரிமையை இலங்கை அரசு வழங்கிடவேண்டும். இந்த வகையில், இந்திய அரசும், இலங்கை அரசை வலி யுறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால் ஒற்றையாட்சி முறையையே மீண்டும் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதைக் குறித்துத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு, இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம், உரிய காலத்தில் உரிய வகையில் மிக முக்கியமான பிரச்சி னையை எழுப்பியுள்ளது. அண்டை நாட்டின் அமை தியை நாடவேண்டிய பொறுப்புமிக்க இந்திய ஒன்றிய அரசு தனது தூதரக நடவடிக்கைகள் மூலமாக.இதனை வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சரியான முறையில் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமராக இருந்த ஜெயவர்த்தனே அதிபர் ஆனார்!

1948 ஆம் ஆண்டு விடுதலை அடைந்த இலங்கை, இதுவரை மூன்று முறை தனது அரசிய லமைப்புச் சட்டங்களை ஏற்றுள்ளது. 1948-இல் ஏற்றது வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி எனப்படும் நாடாளு மன்றத்திற்கு அதிகாரம் மிக்க அரசியலமைப்பு – ஆகும். டொமினியன் நாடாக 24 ஆண்டுகள் நீடித்த பின்னர் 1972 அரசியலமைப்பின் மூலம் இலங்கை குடியரசு நாடானது. 1978 ஆம் ஆண்டு மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தைஅப்போது பிரதம ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் இலங்கை, அதிபர் ஆட்சி நாடாக மாறியது. பிரதமராக இருந்த ஜெயவர்த்தன அதிபரானார்.

எனினும், இம் மூன்றும் ஒற்றையாட்சியை அடிப்ப டையாகக் கொண்டவையே! அதில் அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்கிய அரசியலமைப்பு அதன் பின்னர் 22 முறைகள் திருத்தப்பட்டு, மேலும் மேலும் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதன் விளைவாக, கோத்தபய ராஜபக்சேவின் அதீதமான செயல்பாடுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டு கடுமையான பொருளாதார அரசியல் நெருக்கடியைச் சந்தித்தது.

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம்!

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து, இலங்கை குடிமக்கள், இன வேறுபாடின்றி வாக்களித்து, ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அநுர குமார திசநாயக்கவை அதிபராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த தேர்தல் பரப்புரையின் போது, அதிக அதிகாரமிக்க அதிபர் தலைமையிலான ஆட்சி முறையை மாற்றி அமைப்போம் என்று அநுர வாக்களித்திருந்தார். அனைத்து குடிமக்களுக்கும்.சம உரிமையை வழங்கக்கூடிய, ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்றும் அது நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் அமையும் என்றும் உறுதிமொழி வழங்கியிருந்தார்.

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்காவின் உறுதிமொழி எப்படி பின்பற்றப்படும், என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து பலரும் கருத்துரைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பும் முந்தை ஆட்சியாளர்களால் பலமுறை, பல தேர்தல்களில் இத்தகைய உறுதிமொழிகள் வழங்கப்பட்டு, பின்னர் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இலங்கையில் ‘ஒற்றையாட்சி முறை’ என்பது அங்குள்ள இனச் சிக்கல்களுக்கு உரிய முக்கியத்துவம் தராத, தர முடியாத ஒன்றாகவே அமையும். கடந்த 78 ஆண்டுகளில் இலங்கையின் வரலாறு நமக்குச் சொல்வது இதுவே!

இலங்கையில் ஒற்றையாட்சி முறை அங்குள்ள இனச் சிக்கலுக்குத் தீர்வாகாது!

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தமிழர்களின் தாயகமாக அங்கீகரித்து, அவர்க ளுக்கு மொழி, பண்பாட்டு, சமூகநீதி உரிமைகளை வழங்குவதும், மலையகத் தமிழர்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதும், அந்நாட்டின் தனித்த அடையாளத்துடன் வாழும் இஸ்லாமியர் உரிமைகளைக் கவனத்தில் கொள்வதும், அந்நாட்டின் பெரும்பான்மை மக்களாக இருக்கும் சிங்கள மக்களுக்கும் நன்மை பயப்பதாகும்.

1995-ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் போன்றோர் வழிகாட்டலில் சந்திரிகா குமாரதுங்க முன்மொழிந்த சில தீர்வுகளையும் மறவாமல் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இலங்கையின் அரசியல் சூழலை உற்றுநோக்குவோர் பலரும் வலியுறுத்துகின்றனர்.

இந்திய அரசின் கடமை!

தனிநாடு கோரி கடும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு களுக்கும், இப்போது எடுக்கப்பட வேண்டிய முடிவுகளுக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. உலக அரசியல் சூழலையும், போக்கையும் கருதி, இலங்கையின் இனச் சிக்கல்களிலிருந்து அனைவரும் கற்ற பாடங்களையும் கருத்தில் கொண்டு, மீண்டும் அத்தகைய பாரபட்சங்களோ, ஒடுக்குமுறைகளோ, அதற்கான எதிர்வினைகளோ ஏற்படா வண்ணம் கவனமாக கையாள வேண்டியது அந்நாட்டின் புதிய அதிபர் அனுரகுமார திசநாயக்கவின் பொறுப்பும், அதை நோக்கி வலியுறுத்த வேண்டியது இந்திய அரசின் கடமையும் ஆகும்.

இலங்கையின் மீள் கட்டமைப்பில் பங்கேற்ற இந்திய அரசு, அண்டை நாடு ஒன்றின் அரசியல் சிக்கல் என்றில்லாமல், அங்கே நடக்கும் பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்ற வரலாற்று உண்மையையும் புரிந்துகொண்டு இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை அரசின் கடமை!

கடும் போர் முடிவுற்று.16 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்னும்.தமிழர்கள் முழுமையான உரிமைகளைப் பெறவில்லை.

அவர்களது ‘புண்கள்’ ஆறவில்லை.

இழப்புகளின் தாக்கம் மனதில் நிலை கொண்ட பரிதாபம் இன்னமும் நீடிக்கிறது!

தமிழர்களின் தாயக நிலங்கள்.புதிய சிங்கள குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்து நிறைந்தி ருப்பதைத் தொடர்ந்து, அங்குள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் எச்சரித்து வருகிறார்கள். சம உரிமையும், அமைதியான வாழ்க்கையும் கிடைக்கும்பட்சத்தில், எந்த ஒரு இடமும் போராடுவதற்கான அவசியம் நேராது. உலகங்கும் புலம்பெயர்ந்து, அகதிகளாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினாலும், இன்று தங்களது அறிவாலும், திறத்தாலும், தொழிலாலும் அந்தந்த நாடுகளில் சிறந்துள்ள ஈழத்தமிழர்கள் கூட, இலங்கையின் முன்னேற்றத்திற்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முடியும். அதற்கான நம்பிக்கை அவர்களுக்கு வழங்க வேண்டியது இலங்கை அரசின் கடமையாகும்.

இதை மனிதநேயத்தோடு இலங்கை ஆட்சியாளர்கள் அணுகவேண்டும்; இதில் அதிகாரப்பார்வை வேண்டாம்!

அன்பு, அரவணைப்புமூலம் நல்லிணக்கப் பார்வையே தேவை!

தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து, அவர்க ளுக்குத் தன்னாட்சி உரிமை வழங்கிடுவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
13.1.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *