புதுடில்லி, டிச. 23- சமீப ஆண்டுகளில் இந்தியக் குடிமக்கள் தங்கள் குடியுரிமையைத் துறப்பது அதிகரித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்த தரவுகள்படி, கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு விலகியுள்ளனர்.
2011 முதல் 2019 வரை, மொத்தம் 11,89,194 இந்தியர்கள் குடியுரிமை துறந்ததாக இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார். கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் 9 லட்சம் பதிவாகியுள்ளதால், இப்போக்கு சமீபத்தில் தீவிரமடைந்துள்ளது.
இந்தியர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான முக்கியக் காரணிகள்: இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை ஒரு முதன்மைக் காரணம். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் வழங்கும் சலுகையுள்ள வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற பலர் இந்தியக் குடியுரிமையை விடுவிக்கின்றனர்.
குடியுரிமைச் சட்டம், 1955, பிரிவு 9 இன் படி, வெளிநாட்டுக் குடியுரிமையைச் சுயமாகப் பெறும் எந்த இந்தியரும் குடியுரிமையை இழப்பார்.
வெளிநாடுகளில் நீண்டகாலம் வசிப்பவர்கள், அங்கு முழுமையான சமூக, சட்ட மற்றும் தொழில்முறை உரிமைகளைப் பெற அந்நாட்டுக் குடியுரிமை பெறுவது இன்றியமையாதது.
பொருளாதார ஏற்றத்தாழ்வும் வெளியேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணி. முதல் 5 சதவீத பணக்காரர்கள் நீக்கப்பட்டால், தனிநபர் வருமானம் கூர்மையாகக் குறைந்து, செல்வச் செறிவு குறிப்பிட்ட சில கைகளில் குவிந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை 2026இன் படி, செல்வச் செறிவில் இந்தியா உலக அளவில் பின்தங்கி யுள்ளது. தேசிய வருமானத்தில் முதல் 10 சதவீதம் பேர் 58 சதவீதத்தையும், பின்தங்கிய 50 சதவீதம் பேர் 15 சதவீதத்தையும் பெறுகின்றனர்.
மேலும், நாட்டின் செல்வத்தில், முதல் 10 சதவீதம் பேர் 65 சதவீதத்தையும், முதல் 1 சதவீதம் பேர் தனித்து 40 சதவீதத்தையும் வைத்துள்ளனர். இப்புள்ளிவிவரங்கள் ஏற்றத்தாழ்வின் தீவிரத்தை காட்டுகின்றன.
இந்தியாவில் வாழ்க்கைத் தரம் குறித்த அதிருப்தியும் வெளி நாடுகளை நாடத் தூண்டுகிறது. நாட்டின் தலைநகர் புதுடில்லியில் கூட சுத்தமான காற்று அரிது; குளிர்காலத்தில் ஏ.க்யூ.அய் (AQI) 500-அய்த் தாண்டி, நகரம் வாயு அறையாக மாறுகிறது.
சுத்தமான குடிநீர், திறமையான போக்குவரத்து, எளிதான வாழ்வு, உயர்தர கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை மேற்கு மற்றும் வளைகுடா நாடுகளை ஈர்க்கின்றன. மேம்பட்ட வேலைவாய்ப்புகளும், சிறந்த தொழில்முறைக் கண்ணோட் டங்களும் இந்திய நிபுணர்கள் வெளிநாடு செல்ல முக்கியக் காரணங்கள்.
இந்திய அரசு இந்தக் காரணங்கள் குறித்து வேறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில், “காரணங்கள் தனிப்பட்டவை மற்றும் அந்தந்த தனிநபர்களுக்கு மட்டுமே தெரியும்” என்றும், “பலர் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டுக் குடியுரிமையைத் தேர்வு செய்துள்ளனர்” என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் வெளியேற்றங்கள் அதிகரித்தன. பெருந்தொற்றின் போது தூதரகங்கள் மூடப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவை தளர்த்தப்பட்டதும், வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையும் குடியுரிமை துறப்போர் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்தன.
இந்தியாவிலிருந்து வெளியேறும் நிபுணர்கள் யார்? முதலீட்டு வங்கியாளர் சி.ஏ. சர்தக் அஹுஜாவின் கூற்றுப்படி, சுமார் 75,000 இந்திய மருத்துவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். 67 சதவீதம் கல்வியாளர்கள் வெளிநாட்டுப் பதவிகளை விரும்புகின்றனர், மூன்றில் ஒரு பங்கு அய்அய்டி பட்டதாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகள் அவர்களுக்கு வலுவான வாய்ப்புகள் தருகின்றன.
வெளிநாட்டுக் குடியுரிமையை அடைய, பெரும்பாலானோர் முதலில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து, பின்னர் வேலை பெற்று, நிரந்தரக் குடியுரிமைக்கான தகுதிகளைப் பூர்த்தி செய்தபின் அந்தந்த நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
குடியுரிமை துறந்த பின் இந்தியர்கள் செல்ல விரும்பும் இடங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா. ஆனால், டிரம்ப் 2025 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த பிறகு, மேற்கத்திய நாடுகளின் குடியேற்ற எதிர்ப்புச் சட்டங்களால் பலர் வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பக்கம் திரும்புகின்றனர்.
