நியூயார்க், நவ.13 இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய ஜாதிவெறி, பன்னாட்டு எல்லைகளைக் கடந்து, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அதிர்ச்சியையும், நாட்டிற்கு பெருத்த அவ மானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புரையோடிப் போயிருக்கும் ஜாதிய மனப்பான்மை!
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யான பூஷன் ராமகிருஷ்ணா கவாய்க்கு எதிராக ஜாதி இந்துக்கள் நடத்திய போராட்டம், புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் ஜாதிய மனப்பான்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களின் ஒளிப்படத்தின் மீது செருப்புகளை வீசியும், அவரது படத்தில் அவரது கை செருப்புகளைப் பிடித்து இருப்பது போன்றும், அவருக்கு எதிரான இழிவான பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தியுள்ளனர். முக்கியமான அறிவிப்புகள் மற்றும் வாழ்த்து செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் திரையில், தலைமை நீதிபதியின் படத்தின் மீது செருப்பை வீசும் காட்சியை படமாகக் காட்டியுள்ளனர்.
ஜாதி வெறி கடல் கடந்தும் அழியவில்லை
இந்தப் போராட்டம், பார்ப்பதற்கு அரு வருப்பாக இருப்பதுடன், ஜாதி வெறி கடல் கடந்தும் அழியவில்லை என்பதைக் காட்டு கிறது.
ஜாதிவெறி எவ்வளவு ஆழமானது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது
இந்தியாவிலிருந்து சென்று, மேலை நாடுகளில் வாழும் போது தங்களை நவீன மாகவும், முற்போக்குவாதிகளாகவும் காட்டிக்கொள்ளும் உயர்ஜாதியினர், தலைமை நீதிபதி பதவி வரை உயர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை இவ்வாறு குறிவைப்பது, அவர்களது ஜாதிவெறி எவ்வளவு ஆழமானது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த அவலமான கொடூர நிகழ்வு, ‘‘ஜாதிவெறுப்பு இந்திய மண்ணில் மட்டு மல்ல’’ என்பதைத் தெளிவாக உணர்த்து கிறது. வெளிநாடுகளில் இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்பவர்கள், உண்மையில் நவீன இந்தியா அழித்தொழிக்கப் போராடி வரும் ஜாதி, தீண்டாமை போன்ற சமூகக் கொடிய நோய்களை உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
புலம் பெயர்ந்தோரிடையே ஜாதியத்தின் ஆதிக்கம்!
புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தி னரிடையே, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான ஜாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு, பிரவுன் உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களும், கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழக அமைப்பும் ஜாதிய பாகுபாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இதுவே, புலம் பெயர்ந்தோரிடையே ஜாதியத்தின் ஆதிக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதற்குச்
சான்று.
இதுவே
ஓர் எடுத்துக்காட்டு!
இந்தியாவில் நடக்கும் ஜாதிவெறித்தனம், தங்களை முற்போக்காளர்கள் எனக் கூறி, உயர்கல்வி கற்று வெளிநாட்டில் வாழ்கி றோம் என்று சொல்பவர்களிடையே அழுக்கேறிப் போயுள்ளது என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையான பாபாசாகேப் அம்பேத்கர் கூறிய தொலைநோக்கை இந் நிகழ்வு நினைவு படுத்துகிறது. ‘‘இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தால், இந்திய ஜாதி ஓர் உலகளாவியப் பிரச்சினையாக மாறும்’’ என்பது இன்று அமெரிக்க மண்ணில் உண்மையாகியுள்ளது.
நிகழ்வின் பின்னணி
இந்தந் போராட்டம், ‘‘Stop Hindu Genocide’’ என்ற இந்து குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. நவம்பர் 8, 2025 அன்று தொடங்கி நவம்பர் 12 வரை டைம்ஸ் சதுக்கத்தில் டிஜிட்டல் பில்போர்டுகள் மூலம் நடத்தப்பட்டது. செப்டம்பர் 6, 2025 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த) கூறிய கருத்துக்கு இது எதிரானது.
கஜரோஹோ கோயிலில் உள்ள விஷ்ணு சிலையை சீரமைப்பது தொடர்பான வழக்கில், ‘‘கடவுளிடம் நேரடியாக வேண்டுகோள் விடுங்கள்’’ என்று அவர் கூறியது சிலரால் ‘‘ஸநாதன தர்மத்திற்கு இழிவு’’ என்று விமர்சிக்கப்பட்டது. போராட்டத்தில் கவாயின் படத்திற்கு எதிராக செருப்பு வீசும் காட்சிகள் காட்டப்பட்டன; இந்திய உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாயை நோக்கி செருப்பு வீசினர் என்றால், அமெரிக்காவில் வாழும் இந்தியாவைச் சார்ந்த ஜாதி வெறிக்கும்பல் அவர் படத்தின் மீது செருப்பை வீசியுள்ளது எத்தகைய கேவலம்.
