பாட்னா, அக்.16– இந்திய அரசியலில் வதந்தி களை ஆயுதமாக்கி எதிர்க்கட்சிகளை அழிக்கும் உத்தியை பா.ஜ.க. தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாடு அரசு, பொது இடங்களில் ஹிந்தி பேசுவதைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர உள்ளது என்ற பொய்யான செய்தியை, பா.ஜ.க. தொடர்புடைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வரு கின்றன.
இது, இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. இதே போல், 2023ஆம் ஆண்டு திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற பழைய வதந்தியையும் மீண்டும் உயிர்ப்பித்து, தமிழ்நாட்டை ஹிந்தி விரோத மாநிலமாக சித்தரிக்கும் முயற்சி நடக்கிறது.
ஹிந்தி பேசத் தடை
வதந்தியின் பின்னணி
‘எகனாமிக் டைம்ஸ்’, ‘இந்தியா டுடே’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற முன்னணி ஊடகங்கள் 15.10.2025 அன்று அதிகாலை, ‘‘தமிழ்நாடு அரசு ஹிந்தி படங்கள், பாடல்கள், விளம்பரப் பலகைகளைத் தடை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வர உள்ளது’’ என்ற செய்தியை வெளியிட்டன. இவை, பா.ஜ.க. உறுப்பினர்களுக்குச் சொந்த மான ஊடகங்கள். அம்பானி தொடர்புடைய இந்த ஊடகங்களால் விஷமத்தனமாக அச்செய்தி பரப்பப்பட்டது.
பீகாரில், ஹிந்தி மற்றும் ஆங்கில ஊட கங்களால், ‘‘ஸ்டாலின் (தமிழ்நாடு அரசு) ஹிந்தி பேசுபவர்களைத் தமிழ்நாட்டில் வாழவிடமாட்டார்’’ என்று சித்தரிக்கப்பட்டது.
ஆனால், இந்தச் செய்திக்கு எந்த சான்றும் இல்லை. தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர், ‘‘இதுபோன்ற எந்த மசோதாவும் பெறப்படவில்லை’’ என்று தெளிவுபடுத்தினார். தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புப் பிரிவு (TN Fact Check) இதை ‘‘முழுக்க முழுக்க பொய்’’ என்று அறிவித்தது. 15.10.2025 அன்று மாலை, தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ தன்னிலை விளக்கம் வெளியிட்டது.
‘‘ஹிந்தி தடைக்கு எந்தத் திட்டமும் இல்லை!’’
இந்த வதந்தி, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே திட்டமிட்டு வெளியிடப்பட்டது. பீகாரில், இது சமூக வலைதளங்கள் முதல் உள்ளூர் ஊடகங்கள் வரை வேகமாகப் பரவியது,
இந்தியா கூட்டணியை ‘‘ஹிந்தி விரோத’’ என்று சித்தரித்தது – 2020 பீகார் தேர்தலில் திமுகவை ‘‘ஹிந்து விரோதி’’ என்று சித்தரித்து பா.ஜ.க. பரப்பிய வதந்தியை நினைவூட்டுகிறது.அப்போது, ஹிந்து கோவில்களின் பணத்தைத் தி.மு.க. தவறாகப் பயன்படுத்துவதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் அது அதிமுக ஆட்சி காலமாகும்.
திருப்பூர் வதந்தி:
பழைய ஆயுதத்தை
மீண்டும் உபயோகித்தல்
இதே போல், 2023 ஆம் ஆண்டு திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்ற பொய்யான வதந்தி, பா.ஜ.க.வால் பரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் பீகார் அதிகாரிகள் விசாரித்தபோது, இது போலியான காட்சிப்பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. மனீஷ் கஷ்யப் என்ற பீகார் நபர் போலி காட்சிப்பதிவுகள் பகிர்ந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்கில் திடீரென்று பல தவணைகளாக 40 லட்சம் ரூபாய் சென்றுள்ளது. இவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் சில மாதம் இருந்தார். பின்னர் பிணை கிடைத்து பீகார் சென்றுவிட்டார். அந்த நபர் தற்போது பா.ஜ.க.விற்காக பீகாரில் பரப்புரை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, இந்த பழைய வதந்தியை மீண்டும் கலந்து, பாஜக தமிழ்நாட்டை ‘‘வட இந்தியர் விரோத’’ மாநிலமாக சித்தரிக்கிறது. ஆனால் உண்மை: திமுக ஆட்சியில் (2021 முதல்), தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்து, வட இந்திய தொழிலாளர்கள் (குறிப்பாக பீகார், ஜார்கண்ட்) அதிகம் வருகின்றனர். சென்னை, மும்பைக்கு அடுத்த படியாக வட இந்திய கூலி தொழிலாளர்களின் இரண்டாவது பெரிய இடமாக மாறியுள்ளது. மும்பை, புனே, சூரத், பெங்களூருவில் உள்ளூர் அமைப்புகளால் தாக்கப்படுவதால், அவர்கள் தமிழ்நாட்டை நோக்கி திரும்பியுள்ளனர்.
பா.ஜ.க.வின் அரசியல் சதி: ஒடிசா முதல் பீகார் வரை
இது பாஜகவின் பழக்கமான உத்தி. ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்க, அமித் ஷா தமிழர்களை ‘‘திருடர்கள்’’ என்று சித்தரித்தார். இப்போது பீகாரில், இந்தியா கூட்டணியை ‘‘தேச விரோத கூட்டணி’’ என்று காட்டி வெற்றி பெற முயல்கிறது. பீகார் கிராமங்களில் இந்த வதந்தி பரவியுள்ளது, ஆனால் தமிழ்நாடு அரசின் விளக்கம் அங்கு காட்டப்படாது.
பா.ஜ.க.வின் இந்த விஷமத்தனமான பிரச்சாரம், இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கிறது. தேர்தல் வெற்றிக்காக மொழி, இன வெறுப்பை தூண்டுவது ஜன நாயகத்துக்கு அச்சுறுத்தலாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சியால் நாட்டுக்கு பங்களிக்கும்போது, இத்தகைய வதந்திகள் தேசிய பொருளாதாரத்தையும் பாதிக்கும். பாஜக இதை நிறுத்த வேண்டும்; இல்லையெனில், மக்கள் இதை அம்ப லப்படுத்தித் தண்டிப்பார்கள்.