புதுடில்லி, அக்.3- ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் டில்லியில் 1.10.2025 அன்று தொடங்கியது. இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார். இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா சிறீனேட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது;-
“ஏன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு புகழ்ந்து பேசப்படு கிறது? பிரதமர் மோடி ஏன் அந்த அமைப்பை பாராட்டுகிறார்? சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு நகத்தைக் கூட அவர்கள் வெட்டவில்லை என்பதற்காவா? ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதியதற்காகவா? சக இந்தியர்களைப் பற்றி தகவல் தெரிவித்ததற்காகவா? அல்லது சுதந்திரப் போராட்டத்தை எவ்வாறு அடக்குவது என்று பரிந்துரைத்ததற்காகவா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் பாராட்ட வேண்டும்?
நாதுராம் கோட்சே காந்தியாரை கொன்றார். சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தார். அதற்காக அவர்களை பாராட்ட வேண்டுமா? அல்லது பி.ஆர். அம்பேத்கரின் ஒளிப்படங்களை எரித்ததற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாராட்ட வேண்டுமா? அந்த அமைப்பில் பெண்களுக்கு இடமில்லை என்பதற்காகவோ, அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர் இல்லாததற்காகவோ அவர்களைப் பாராட்ட வேண்டுமா? அவர்களின் தலைவர்கள், ஜின்னாவுடன் இணைந்து, சுதந்திர போராட்டத்தின்போது வடக்கு வங்காளத்தின் நிர்வாகத்தை நடத்தினர். அவர்கள் நமது தேசிய வீரர்களை அவமதித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைகளில் காந்தியாரின் ரத்தக்கறை படிந்துள்ளது. பிரதமர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சட்டப்பூர்வமாக்குவதில் பிரதமர் மோடி தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் வரலாறு தெளிவாக உள்ளது, தேசபக்தர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினர், மற்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தனர்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.