பெங்களூரு, செப்.19 பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா மூர்த்தி (55). கருநாடக யோகா வளர்ச்சி ஆணைய செயலாளராக உள்ளார். பெங்களூருவில் பல்வேறு இடங்களில் சன் ஷைன் யோகா என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஜராஜேஸ்வரி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “யோகா குரு நிரஞ்சனா மூர்த்தியிடம் பயிற்சி பெற்ற போது கடந்த 2023இல் தாய்லாந்து சென்றோம்.
அப்போது 17 வயது சிறுமியாக இருந்த என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நிரஞ்சனா மூர்த்தியை கைது செய்தனர்.
தமிழ்நாட்டை தலைகுனிய
விட மாட்டோம் என்ற தலைப்பில் நாடெங்கும் தி.மு.க. சார்பில் இரண்டு நாட்கள் பொதுக்கூட்டம்
சென்னை, செப்.19– தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. மேற்கொண்டது. இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அண்ணா பிறந்தநாளில் இந்த இயக்கம் மூலம் இணைந்தவர்கள் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பாக தீர்மானமும் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் இந்ததீர்மான ஏற்பு கூட்டங்கள் தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில் வருகிற 20-ஆம் தேதி (அதாவது நாளை), 21-ஆம் தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பேசுபவர்கள் பட்டியலை தி.மு.க. நேற்று (18.9.2025) வெளியிட்டது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-
20-ஆம் தேதி, காஞ்சிபுரம் வடக்கு- நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சென்னை வடக்கு- கவிஞர் மனுஷ்யபுத்திரன், திருவள்ளூர் மத்திய மாவட்டம் – சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் பேசுகிறார்கள். 21-ஆம் தேதி, காஞ்சிபுரம் தெற்கு- ஆர்.எஸ்.பாரதி. சென்னை தென்மேற்கு- சுப.வீரபாண்டியன், சென்னை கிழக்கு- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் திருவள்ளூர் கிழக்கு-அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு- அமைச்சர் கோவி. செழியன், திருவள்ளூர் மேற்கு- நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி சென்னை வடகிழக்கு- சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை தெற்கு-நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் பேசுகிறார்கள்.
இந்த கூட்டங்களில் உள்ளூர் பேச்சாளர்களையும் பயன்படுத்தி சிறப்பாக நடத்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.