முரளி மனோகர் ஜோஷி போர்க்கொடி!
புதுடில்லி, செப்.7 ‘பா .ஜ.,விற்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் பிரச்சினை’ என, டில்லி அரசியல் வட்டாரங்க ளில் தொடர்ந்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. ’75 வயதில் அரசியலிலிருந்து தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியது – பிரதமர் மோடிக்கும் பொருந்தும்’ என பேசப்பட்டது. ஆனால், இதை மறுத்த மோகன் பகவத், ‘எங்கள் இயக்கத்திற்கும், பா.ஜ.,விற்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை; 75 வயது குறித்து நான் பேசியதை தவறாகப் புரிந்து கொண்டனர்’ என கூறினார்.
‘ஒரு வழியாக பிரச்சினை ஓய்ந்துவிட்டது’ என நினைத்த வர்களுக்கு அதிர்ச்சி.
ஆர்.எஸ்.எசுக்கு நெருக்கமான மேனாள் ஒன்றிய அமைச்சரும், பா.ஜ.க.வின் தேசிய தலைவராகப் பணியாற்றிய முரளி மனோகர் ஜோஷி பிரச்சினையைக் கிளப்பி யுள்ளார்.
அண்மையில்,
ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகள் குறித்து, நாக்பூரில் ஒரு ரகசிய கூட்டம் நடந்தது. இதில், 80க்கும் மேற்பட்ட மூத்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பங்கேற்றனர். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் குறித்து ஜோஷி பேசினார். ‘ஒரு நாட்டின் முன்னேற்றத்தை, மக்களின் வருமானத்தை வைத்து மட்டும் எடை போட முடியாது; தற்போதைய பொருளாதார வளர்ச்சியால், மக்களின் நலன் முழுமை அடையவில்லை’ என, அமர்த்தியா சென் கொள்கையை சுட்டிக் காட்டியுள்ளார் ஜோஷி.
அமர்த்தியா சென்னிற்கும், பா.ஜ.,விற்கும் எப்போதுமே ஆகாது. மோடிக்கு எதிராக பேசி வருபவர் அமர்த்தியா சென். இந்நிலையில், ஜோஷி பேசியது, பா.ஜ.,வில் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
‘எங்கள் அமைப்பிற்கும், பா.ஜ.,விற்கும் எந்த சண்டையும் இல்லை’ என, பகவத் சொல்வ தற்கு ஒரு வாரத்திற்கு முன், இந்த ரகசிய கூட்டம் நடந்தது. ஆனால், இந்த செய்தி இப்போது வெளியாகியுள்ளது. வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் இதைக் கசிய விட்டனரா அல்லது ஜோஷியே இதை வெளியிட்டாரா என தெரியவில்லை.
ஆனால், ‘பா.ஜ., – ஆர்.எஸ்.எஸ்., பிரச்சினை தொடர வேண்டும்’ என, உள்ளே இருப்பவர்களே இதை செய்துள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். ‘பிரச்சினை முடியவில்லை; தொடர்கிறது’ என்பது தான் டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சூடான செய்தி.
(ஆதாரம்: ‘தினமலர்’, 7.9.2025, பக்கம் 9)