அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. பிரதமர் மோடி ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் நகரான திருப்பூர் தவிக்கிறது.
குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ர;Zய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?
நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவண செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, ‘விஸ்வகுரு’ எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.
இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்
தி.மு.க. குறும்படம் வெளியீடு
சென்னை, செப். 3- திமுகவின் ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘சமூக நீதி எனும் பெரு நெருப்பு’ என்ற தலைப்பில் ஏ.அய். தொழில்நுட்பத்தில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் ஏற்றிய சமூக நீதி எனும் பெரும் நெருப்பு இன்னும் சுடர்விட்டு எரிந்துக்கொண்டு தான் இருக்கிறது. பெரியாரோடு இந்த பெரும் நெருப்பு அணைந்துவிடும் என இன எதிரிகள் நினைத்தார்கள். ஆனால் சமூக நீதி சுடரை பெரியாரிடம் இருந்து அறிஞர் அண்ணா பெற்று ஆட்சி அமைத்தார்.
அண்ணாவின் ஆட்சி விரைந்து முடிந்து விட்டது. இனி நெருப்பு அணைந்துவிடும் என அதே இன எதிரிகள் நினைத்தனர். அவர்களின் எண்ணத்தை தனது சமூக நீதி ஆட்சி மூலம் சுக்கு நுாறாக உடைத்தார் கருணாநிதி. எளியவர்களுக்கு நம்பிக்கை ஒளியாகவும், எதிரிகளுக்கு எரிக் கல்லாகவும் எரிந்தது கருணாநிதி கையில் அண்ணா தந்த சமூக நீதி சுடர்.
பெரியாரின் திராவிட கருத்தியலை ஏந்தி, அண்ணா வழியில், கலைஞர் கருணாநிதி தந்த சமூக நீதி சுடரை அடுத்தக்கட்டத்திற்கு சமூக நீதி 2.0 என எடுத்துச் சென்று உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டின் சமூக நீதி சுடரை முன்னின்று பாதுகாத்து, இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இவ்வாறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
ராகுல் காந்தியின் மனிதநேயம் தொண்டருக்கு புதிய மோட்டார் சைக்கிளை பரிசளித்தார்
பாட்னா, செப்.3- காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தில் வாக்காளர் அதிகாரம் என்ற தலைப்பில் யாத்திரை நடத்தினார்.
இதில் தர்பங்காவில் நடந்த மோட்டார் சைக்கிள் பேரணியில் ராகுலுடன் ஏராளமான தொண்டர்களும் பங்கேற்றனர். அதில் சுபம் சவுரப் என்ற தொண்டரும் ஒருவர்.
இந்த பேரணியின்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை, ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கு வந்தவருக்கு கொடுத்துள்ளார். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் தொலைந்து விட்டது. இதனால் சவுரப் கவலை அடைந்தார்.
இதுபற்றி அறிந்த ராகுல் காந்தி, சவுரப்புக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித்தருவதாக அறிவித்தார். அதன்படி அவருக்கு புதிய மோட்டார் சைக்கிள் ராகுல் காந்தி சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த சவுரப், தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.