பீகாரில் மாபெரும் பொதுக்கூட்டம்: “வாக்காளர் உரிமைப் பேரணி” நிறைவு
நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப் போன்று வெடிக்கும்; அதன்பின் பா.ஜ.க.வின் உண்மை முகம் முழு நாட்டிற்கும் தெரியும்!
பாட்னா, செப்.2 நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப் போன்று வெடிக்கும்; அதன்பின் பாஜகவின் உண்மை முழு நாட்டிற்கும் தெரியும்! குறிப்பாக மோடியால் தனது முகத்தை வெளியில் காட்ட முடியாது என்று “வாக்காளர் உரிமைப் பேரணி” நிறைவு நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார்.
பீகாரில் பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்)” மற்றும் நாடு முழுவதும் அரங்கேற்றப்பட்ட “வாக்குத் திருட்டு” ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி ஆகிய இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், விகாஷீல் இன்ஸான் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் முன்னிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி “வாக்காளர் உரிமைப் பேரணியைத்” தொடங்கினர்.
14 நாள்கள், 20–க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், 1,300 கி.மீ-க்கும் அதிகமான தூரத்தில் பீகார் முழுவதும் இந்த “வாக்காளர் உரிமைப் பேரணி” வலம் வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி ஆளும் மாநில முதலமைச்சர்களும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் உள்ளிட்ட மேனாள் முதலமைச்சர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். இந்த வாக்காளர் உரிமைப் பேரணிக்கு பீகார் மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், நேற்று (1.9.2025) பீகார் தலைநகர் பாட்னாவில் பிரமாண்ட பொதுக்கூட்ட நிகழ்வுடன் “வாக்காளர் உரிமைப் பேரணி” நிறைவு பெற்றது. பாட்னாவில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற நிறைவு பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஅய் பொதுச் செயலாளர் து.ராஜா மற்றும் மூத்த தலைவர் ஆனி ராஜா, சிபிஅய்(எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சிவசேனா (தலைவர்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் (சரத்) செயல் தலைவர் சுப்ரியா சுலே,விகா ஷீல் இன்ஸான் தலைவர் முகேஷ் சஹானி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யூசுப் பதான், லலிதேஷ் திரிபாதி, ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் (காங்கிரஸ்) உள்ளிட்ட தலைவர்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தொடர்ந்து காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘பீகார் வாக்காளர் உரிமைப் பேரணி குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. பேரணியை சீர்குலைக்க பல்வேறு தடைகளை பாஜக உரு வாக்கியது. ஆனால் ராகுல் காந்தி, தேஜஸ்வி இதற்கு அஞ்சவில்லை. தடைகளைத் தகர்த்து தொடர்ந்து கம்பீரமாக பேரணியை மேற்கொண்டனர். நாட்டில் வாக்குகளையும், பணத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். பீகாரில் வாக்குகளைத் திருடி வெற்றி பெற மோடி விரும்புகிறார். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் மோடியும் அமித்ஷாவும் உங்களை (பீகார் மக்கள்) மூழ்கடிப்பார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட வாக்குரிமையை இழக்கக்கூடாது. இழக்கவும் விட மாட்டோம். இன்னும் 6 மாதங்களில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கவிழும்” என அவர் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,”மகாராட்டிராவில் தேர்தல் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய வாக்குகள் அனைத்தும் பாஜகவின் கணக்கிற்குச் சென்றன. ஏனெனில், தேர்தல் ஆணையமும், பாஜகவும் சேர்ந்து வாக்குகளைத் திருடின. ஒரு பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதை நாங்கள் தெளிவாகக் காட்டினோம். நான்கு மாதங்கள், 16-17 மணிநேரம் வேலை செய்து, அதற்கான ஆதாரத்தை நாட்டின் முன் வைத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வழங்கவில்லை. சிசிடிவியைக் காட்டவில்லை. ஹைட்ரஜன் குண்டு அணு குண்டை விட சக்தி வாய்ந்தது. பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நான் வெளியிட உள்ள ஆதாரம் ஹைட்ரஜன் குண்டைப் போன்று வெடிக்கும். அதன்பின் பாஜகவின் உண்மை முகம் முழு நாட்டிற்கும் தெரியப்போகிறது. குறிப்பாக மோடியால் தனது முகத்தை வெளியில் காட்ட முடியாது” என அவர் கூறினார்.