புதுடில்லி, ஆக.29 லாபம் ஈட்ட பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் மக்களை குறிவைத்து, இலவச ஆலோசனை வழங்கு வதாகக் கூறி மோசடி செய்த கும்பல் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் கும்பல் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப் பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாரணாசியில் இரண்டு கால்சென்டர் நிறுவனங்களை நடத்தி வந்த இந்தக் கும்பல், முதலீட்டாளர்களுக்கு இலவச பங்குச் சந்தை ஆலோசனை வழங்குவதாகக் கூறி, அவர்களை தங்கள் வலையில் விழ வைத்துள்ளது. முதலீட்டாளர்கள், லாப ஆசையில் தங்கள் வங்கி மற்றும் டிமேட் கணக்குகளின் அனைத்து விவரங்களையும், பாஸ்வேர்டுகளையும் கொடுத் துள்ளனர்.
முதலில் சில நாட்களுக்கு அவர்களுக்கு லாபம் காட் டுவது போல் செய்து, பிறகு அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தைத் தங்கள் கணக்குகளுக்கு மாற்றி மோசடி செய்துள்ளனர். பணம் மாற்றப்பட்ட பிறகு, முதலீட்டாளர்களின் கைப்பேசி எண்களை பிளாக் செய்து விடுகின்றனர்.
தேசிய அளவிலான விசாரணை
ஏமாற்றப்பட்ட முதலீட்டா ளர்கள் தேசிய சைபர் கிரைம் புகார் தளமான என்.சி.சி.ஆர்.பி.(NCCRP)யில் புகார் அளித் துள்ளனர். இவ்வாறு நாடு முழுவதும் பதிவான புகார்களை ஆராய்ந்ததில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து 27 புகார்கள் வந்துள்ளது. அதில் பங்குச் சந்தை முதலீட்டின் பெயரில் சுமார் ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த புகார்களை விசாரிக்க வாரணாசி காவல்துறையின் சைபர் பிரிவு, துணை ஆணையர் டி.சரவணன் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது.
இந்த குழு, வாரணாசியின் சிக்ரா மற்றும் சேத்கஞ்ச் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, 2 மற்றும் 3 மாடி வீடுகளில் பதுங்கியிருந்த 14 பெண்கள் உட்பட 43 பேரை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 90 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து வாரணாசி துணை ஆணையர் டி.சரவணன், “இந்த வழக்கில் மேலும் 200 பேரைத் தேடி வருகிறோம். இதுவரை வங்கிகளில் ரூ.33 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலின் தலைவன், பல விருதுகளைப் பெற்ற பங்குச் சந்தை நிபுணர் அம்பர் மவுரியா என்பவராவார். அவர் தலைமறைவாக உள்ளதால் அவரைத் தேடி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக, பங்குச் சந்தை பயிற்சி என்ற பெயரில் இளம் பட்டதாரிகளுக்கு இவர் வலை விரித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த 27 புகார்களில் 4 புகார்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்துள்ளது என்றும், இந்த மோசடிக் கும்பல் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மோசடி செய்துள்ளதாகவும் டி.சரவணன் குறிப்பிட்டார்.