கத்துவா, ஆக. 15 ஜம்மு – காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில், ‘புனித’ யாத்திரை சென்ற பக்தர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 167 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
2 சிஅய்எஸ்எஃப் வீரர்கள் உள்பட 46 பேர் பலி
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சசோட்டி கிராமம், மச்சைல் சண்டி மாதா கோயிலுக்கு செல்லும் புனித யாத்திரையின் தொடக்கப் புள்ளியாகும். ஜூலை 25 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் இந்த யாத்திரையில் பங்கேற்க வந்த பக்தர்கள், நேற்று (14.8.2025) சசோட்டி கிராமத்தில் குழுமியிருந்தனர். அப்போது பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்தத் திடீர் வெள்ளத்தில், பக்தர்களுக்கான சமூக சமையலறை, குடியிருப்புகள், கடைகள் மற்றும் ஒரு பாதுகாப்பு புறக்காவல் நிலையம் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன. இந்த சோகமான சம்பவத்தில் 2 சிஅய்எஸ்எஃப் வீரர்கள் உள்பட 46 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கியவர்களில், சுமார் 167 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 38 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக மச்சைல் மாதா யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் உமர் அப்துல்லா ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உதம்பூர் தளத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சர்மா ஆகியோர் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளனர்.