டில்லி, ஆக.15 பீகாரில் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு (Bihar SIR) எதிரான வழக்கில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விரும்பும்போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக வைத்து முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. முன்பு தேர்தல் ஆணையம் இந்த ஆவணங்களை ஏற்க மறுத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதை ஏற்க அறிவுறுத்தியுள்ளது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாக அங்கு எஸ்.அய்.ஆர். எனப்படும் சிறப்புச் சீர்திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் பீகார் வாக்காளர்கள் 11 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை முடிந்து சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
65 லட்சம் பேர் நீக்கம்
இந்தப் பட்டியலில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதேநேரம் தேர்தல் ஆணையம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களைத் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட மறுத்திருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கடந்த 3 நாட்களாக இந்த வழக்கு நடந்து வந்த நிலை யில், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணைய இணையத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், வாக்காளர் அடையாள அடையாள அட்டை நம்பரை பதிவிட்டுத் தேடினாலே இந்த விவரங்களைக் கண்டறியும் வகையில் அது இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆதார்
இது தவிர ஆதார் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது தவறான காரணங்களால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர், இறுதிப் பட்டியலில் சேர்ப்பதற்கான கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் போது, தங்கள் ஆதார் அட்டை களையும் வழங்கலாம் என்பதைத் தேர்தல் ஆணையம் குறிப்பிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
11 வகையான ஆவணங்கள்
அதாவது முன்பு தேர்தல் ஆணையம் ஒருவர் தனது உரிமையை நிரூபிக்க 11 வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் எனக் கூறியிருந்தது. இருப்பினும், அந்த ஆவணங்களில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சேர்க்கப்படவில்லை. இது பேசுபொருள் ஆனது. கிட்டத்தட்ட எல்லாச் சேவைகளும் ஆதார் கோரப்படும் நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க முடியாது எனச் சொல்வது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். உச்சநீதிமன்றத்தில் கூட இது தொடர்பாகவே மனுதாரர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்திருந்தனர்.
முன்னதாக கடந்த ஜூலை 10ஆம் தேதி விசாரணையில், ஆதாரையும் ஆவணமாகப் பரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணை யத்திற்கு வாய்மொழியாக உத்தரவிட்டது. இருப்பினும், தேர்தல் ஆணையத்தால் குறிப் பிடப்பட்ட 11 ஆவணங் களின் பட்டியலில் அது சேர்க்கப் படாததால், வாக்காளர் களுக்கு அது தெரியாமல் போகலாம் என உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
ஆதாரை சேர்க்க உத்தரவு
நீதிபதிகள் மேலும் கூறுகையில் “உங்கள் 11 ஆவணங்களின் பட் டியல் மக்களுக்குச் சாதகமாகவே இருக்கிறது. ஆனால் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மக்களிடம் பரவ லாக இருக்கும். எனவே, இதுவரை ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்கள், தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கப்படும் ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்” என்றார்.