புதுடில்லி, ஆக.14– கேரளாவில் 2 பல்கலைக் கழகங்களுக்கு இடைக்கால துணைவேந்தர்களை நியமனம் செய்த ஆளுநரின் முடிவு தன்னிச்சை-யானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் உச்ச-நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டுள்ளதாகவும், எனவே, அவர் பிறப்பித்த துணைவேந்தர் கள் நியமன ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று (13.8.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுகுழுவை அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது என்றும், ஆனால் ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு தனிக் குழுவை அமைப்பதாகவும் கேரளா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, துணைவேந்தர்கள்தேர்வுக்கான தேடுதல் குழுவை அமைக்கும்அதிகாரம் யு.ஜி.சி விதிப்படி ஆளுநருக்கு இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்வுக் குழுவை அமைப்பதில் அரசுக்கும், ஆளுநருக்கு இடையே பிரச்சினை இருப்பதால் தேர்வுக் குழுவை உச்சநீதிமன்றமே அமைக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். குழு உறுப்பினர்கள் குறித்த பெயர்களை வழங்குமாறு கேரளாஅரசுக்கு உத்தரவிட்டனர்.
கேரளா அரசும், ஆளுநர் தரப்பும் நேற்று ஆலோசனை நடத்தி தலா 4 பெயர்கள் வீதம் 8 பெயர்களை இரு தரப்பும் வழங்க வேண்டும். அதன் பிறகு குழுவை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.