பாட்னா, ஆக.6 பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்) 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். இங்கு முதலாம் ஆண்டு படித்து வருபவர் தானு பிரியா. இவரும் நர்ஸிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர்.
மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், தந்தைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மகளின் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
தானுவின் தந்தை பிரேம்சங்கர் மருத்துவ மனை விடுதிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் தானுவும், அவரது கணவரும் இருந்துள்ளனர். மேலும், ராகுல் குமாருடன் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர்.
பிரேம்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுல் குமாரை சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராகுல் குமார் உடன் படிக்கும் சக மாணவர்கள் பிரேம்சங்கரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு காவல்துறையினர் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை நேற்று (5.8.2025) மாலை அணுகி யுள்ளார். பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.
என் கண்முன்னே
துப்பாக்கியால் சுட்டார்
‘‘எனது தந்தை துப்பாக்கி வைத்திருந்தார். எனது கணவர் மார்பில் என் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டார். ராகுல் என் மடியில் சாய்ந்தார்’’ என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார்.
மேலும், எனக்கு அல்லது எனது கணவருக்கு என்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தை நாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.