மருத்துவத் துறையில் ஒரு மைல்கல்! கருநாடக பெண்ணுக்கு உலகில் இதுவரை கண்டறியாத ரத்த வகை ‘கிரிப்’ எனப் பெயரிடப்பட்டது!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

கோலார், ஜூலை 31 கருநாடக மாநிலம் கோலாரைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு, உலகில் இது வரை கண்டறியப்படாத புதிய ரத்த வகை இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. இந்த அரிய கண்டு பிடிப்பு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த வகை என்ன?

கடந்த ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்ட அப்பெண், கோலாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்கு முன் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவரது ரத்த வகை ‘ஓ பாசிட்டிவ்’ என குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். ஆனால், ரத்தப் பரிசோதனையில் அவரது ரத்த வகை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. அவசர நிலை யைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

பன்னாட்டு ரத்தப் பிரிவு ஆய்வகத்திற்கு…

இதற்கிடையில், அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கும் அவரது ரத்த வகை புதுமையாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள அய்.பி.ஜி.ஆர்.எல். (IBGRL) எனப்படும் பன்னாட்டு ரத்தப்பிரிவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

உலகில் யாருக்கும் இல்லை!

ரோட்டரி பெங்களூரு டி.டி.கே. ரத்த மய்யத்தைச் சேர்ந்த மருத்துவர் அங்கித் மாத்தூர் இது குறித்துக் கூறியதாவது:  ‘‘கோலார் பெண்ணுக்கு இருப்பது புது வகை ரத்தம் என அய்.பி.ஜி.ஆர்.எல். அங்கீக ரித்துள்ளது. உலகிலேயே இந்த ரத்தம் வேறு யாருக்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் இந்த வகை ரத்தம் இல்லை. கோலார் பெண்ணின் ரத்தம் குறித்து, பிரிட்டனில் 10 மாதங்களாக விரிவான ஆராய்ச்சி செய்யப்பட்டது. மூலக்கூறு பரிசோதனையில் இது புதிய ரத்த வகை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்த புதிய ரத்த வகைக்கு, சி.ஆர்.அய்.பி. (‘கிரிப்’) (C.R.I.B.) என அய்.பி.ஜி.ஆர்.எல். பெயரிட்டுள்ளது. இதில், சி.ஆர். என்பது குரோமர் (Cromer) என்பதையும், அய்.பி. என்பது இந்தியா, பெங்களூரு (India, Bengaluru) என்பதையும் குறிக்கும்.

கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் மிலனில் நடந்த பன்னாட்டு ரத்த மாற்ற சங்கத்தின் (ISBT) 35 ஆவது மண்டல மாநாட்டில், இந்த புதிய வகை
ரத்தம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அய்.பி.ஜி.ஆர்.எல். வெளியிட்டது. இந்த கண்டுபிடிப்பு ரத்தவியல் துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *