முதல் நாளே நாடாளுமன்றம் முடங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்

Viduthalai

புதுடில்லி, ஜூலை. 22- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விவாதிக்கக்கோரி,முதல் நாளிலேயே எதிர்க் கட்சிகள் முழக்கங்கள் எழுப்பிய தால் நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து 25 மணிநேர விவாதத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

விமான விபத்து பலி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

மக்களவை கூடியவுடன், அண்மையில் மறைந்த மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 260 பேர் பலியானவர்களுக்கும், ஆமதா பாத் விமான விபத் தில் 260 பேர் பலியானதற்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

விவாதம் நடத்தக்கோரி அமளி

பின்னர், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. அப்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று முழக்கங்கள் எழுப்பினர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, “அனைத்து பிரச்சினைகள் பற்றியும் விவாதம் நடத்த அனுமதி அளிக்கிறேன்”. இப்போது கேள்வி நேரத்தை நடத்த விடுங்கள். விதிமுறைப்படிதான் அவை இயங்க வேண்டும்” என்று கூறினார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்றும் கூறினர்.

ஒத்திவைப்பு

அதை ஏற்காமல், எதிர்க்கட்சி உறுப் பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதையடுத்து, அவையை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்.

மக்களவை மீண்டும் கூடிய போது, மக்களவை உறுப்பினர் இருக்கையில் பா.ஜனதா உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் இருந்தார். அப்போதும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களின் செயலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இருக்கைக்குத் திரும்பிச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை மக்களவையை ஜெகதாம்பிகா பால் ஒத்திவைத்தார்.

நான்கு முறை ஒத்திவைப்பு

பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியபோதும், அமளி தொடர்ந்தது. எனவே, மக்களவைத் தலைவர் இருக்கையில் இருந்த சந்தியா ரே, மாலை 4 மணி வரை சபையை ஒத்திவைத்தார்.

4 மணிக்கு மக்களவை கூடியபோதும் அமளி நீடித்தது. மக்களவைத் தலைவர் இருக்கையில் இருந்த திலீப் சைக்கியா, கோவா சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு மசோதாவை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளாததால், மக்களவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார். முதல் நாளிலேயே சபை 4 தடவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை

மாநிலங்களவையில், சுழிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், “பஹல்காம் தாக்குதல் குறித்தும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து போரை நிறுத்தியதாக டிரம்ப் உரிமை கோருவது குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீசை வழங்கினர்.

பதில் அளிக்க
வேண்டும்

பஹல்காம் தாக்குதலை நினைவு கூர்ந்த கார்கே, தாக்குதலில் ஈடு பட்ட பயங்கரவாதிகள் யாரும் இதுவரை பிடிபடவோ, அழிக்கப்படவோ இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். பஹல்காமில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக காஷ்மீர் ஆளுநர் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அவர் பேசும்போது, “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சில ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதுதவிர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போர் நிறுத்தம் ஏற்பட உதவியதாக அறிக்கை வெளியிட்ட பின்பும் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை விளக்கவில்லை. ஏனெனில் அவர் ஒருமுறையல்ல, இதுவரை அவர் மீண்டும் மீண்டும் 24 முறை போர் நிறுத்தம் தன்னால் ஏற்பட்டதாக கூறி விட்டார். இது இந்தியாவுக்கு அவமானகரமானதாகும். இது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

வெளிநடப்பு

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பதில் அளித்த அவை தலைவர் ஜெகதீப் தன்கர் இந்த விவகாரம் குறித்து உறுப்பினர்கள் விரும்பும் அளவுக்கு முழுமையான விவாதத்தை உறுதி செய்வதாக கூறினார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

மதியம் 12 மணிக்கு திட்டமிட்டபடி, கேள்வி நேரத்திற்காக மாநலங்களவை  கூடிய போது, காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தப் பிரச்சினையை எழுப்பியது, தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

25 மணி நேர
விவாதத்துக்குச் சம்மதம்

பின்னர், மக்களவை மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தாங்கள் கேட்டுக் கொண்டபடி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம், இந்த வார நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை என்று எதிர்ப்பு தெரிவித் தனர்.

அதற்கு ஒன்றிய அரசின் பிரதிநிதிகள், பிரதமர் மோடி வெளிநாடு செல்வதாகவும், அவர் அவையில் இருக்கும்போது விவாதம் நடத்த வேண்டும் என்றால், அடுத்த வாரம்தான் விவாதம் நடத்த முடியும் என்றும் கூறினர்.

மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பஹல்காம் தாக்குதல் ஆகியவை குறித்து மக்களவையில் 16 மணி நேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் என மொத்தம் 25 மணி நேரம் விவாதம் நடத்த ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டது. இந்த விவாதம் அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஆனால், இந்த வாரமே விவாதத்தை தொடங்கவேண்டும், பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

விவாதத்தின்போது, உள்துறை அமைச்சரும்ம், பாதுககா அமைச்சரும் அவையில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விவாதத்தின்போது, பிரதமர் மோடி பேசுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டம் முடிவடைந்த பிறகு, பிரதமர் மோடி, மூத்த ஒன்றிய அமைச்சர்களை அழைத்துப் பேசினார். அதைத்தொடர்ந்து, மூத்த ஒன்றிய அமைச்சர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *