சிங்டாவ், ஜூலை 21- சீனாவின் சிங்டாவ் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டில், உணவுக்காக வாங்கி வந்த முட்டைகள் தானாகவே பொரித்து கோழிக்குஞ்சுகளாக மாறியுள்ளன. சிஙடாவ் நகரத்தில் 30 வயது பெண் 90 முட்டைகளை வாங்கியிருந்தார். அதனை வீட்டில் வைத்துவிட்டு விடுமுறையைக் கழிக்க அருகில் உள்ள ஊருக்கு சுற்றுலா சென்றார்.
விடுமுறை முடிந்து வீடு திரும்பியதும், வீட்டிற்குள் இருந்து ‘கீச் கீச்’ என்ற கோழிக்குஞ்சுகளின் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர் கதவைத் திறந்து பார்த்தபோது, 40 முதல் 50 கோழிக்குஞ்சுகள் வீட்டிற்குள் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். இறுதியில், வாங்கிய 90 முட்டைகளில் 70 முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிந்ததாக அவர் தெரிவித்தார்.
தற்போது சீனாவை வாட்டி வதைக்கும் கடுமையான கோடை வெப்பமே, முட்டைகளின் அடைகாத்தல் நேரத்தைக் குறைத்து, அவை தானாகவே பொரியக் காரணம் என்று அந்தப் பெண் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
திடீரெனப் பொரிந்த குஞ்சுகளைப் பராமரிக்க, அந்தப் பெண் குஞ்சுகளுக்கான ஸ்ராட்ச் திரவத்தை ஊசிக்குழல் மூலம் ஊட்டினார். மேலும், பழைய துணிமணிகளைக் கொண்டு அவற்றுக்குத் தற்காலிக உறைவிடத்தையும் ஏற்படுத்தினார். பொரிந்த குஞ்சுகளில் இரண்டை அவரது மகன்கள் தத்தெடுத்துள்ளனர். மீதமுள்ள குஞ்சுகளை அப்பெண் தனது சொந்த ஊரில் வசிக்கும் குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், பேசுபொருளையும் கிளப்பியுள்ளது. உலகம் முழுவதும் சில பகுதிகளில் கடுமையான வெள்ளம் சில பகுதிகளில் வெப்பம் என்ற கலவையான சூழல் தற்போது இருந்து வருகிறது. தைவான் நாட்டில் பல நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருக்க மத்திய சீனாவின் வெப்பம் கடுமையாக உள்ளது.