கண் உயர் நீர் அழுத்த நோய் (Glaucoma)

Viduthalai

மற்றவை

மருத்துவர்
அ.பிரபாகரன்
கண் மருத்துவர், திருச்சி

மூப்பு காரணமாக கண் பார்வை குறைவுக்கு முக்கிய காரணமாக இருப்பது கண் புரை, கண் அறுவை சிகிச்சை மூலம் உள் விழி ஆடி (IOL – Intraocular lens) பொருத்துவதன் மூலம் மீண்டும் பார்வை பெறலாம். ஆனால் நிரந்தரமாக பார்வையை குறைக்கும் கண் உள் உயர் நீர் அழுத்த நோயை (Glaucoma) பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இந்நோயை உலகில் பார்வை இழந்து குருட்டுத் தன்மை அடையும் காரணங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதனால் இதனை முன்கூட்டியே, ஆரம்ப நிலையில் கண்டறிவது அவசியம். கண் உள் உயர் நீர் அழுத்த நோய் எந்தவித தொந்தரவும் கொடுக்காமலும் நம்மை அறியாமலும் பார்வையை நிரந்தரமாக குறைத்துவிடும். அதனால்தான் இதனை “பார்வையின் திருடன்” (Thief of sight) என்று அழைப்பர்.

35 வயதிற்கு மேல் கண் பரிசோதனை செய்யும் அனைவரும் கீழ்கண்ட பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம்.

  1. கண் உள் உயர் நீர் அழுத்தம் (Intraocular pressure)
  2. கண் பார்வை நரம்பு (Optic Nerve Cupping)
  3. உள் நீர் வெளியேறும் பாதை (Anterior Chamber and Angles).

இது தொற்று நோய் அல்ல. பரம்பரையாக வரும் உயர் இரத்த அழுத்தம் (Hypertension), சர்க்கரைநோய் (Diabetes) போன்றது. இந்நோய் ஆரம்பத்தில் விளிம்புப் பார்வையை (Side /Peripheral vision) பாதித்து, நாள்பட முற்றிய நிலையில் முழு பார்வையையும் பாதித்து குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அதனால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கட்டுப்படுத்துவது அவசியம் “விழித்திரை நரம்பு இழை அடுக்கின் அளவு” (OCT : RNFL thickness) என்ற பரிசோதனை மிக ஆரம்ப நிலையில் இந்நோயை கண்டறிய உதவுகிறது.

மருந்தின் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்

கண் உள் உயர் நீர் அழுத்த நோய் பிரச்சினை இருக்கும் கண்களுக்கான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதன் மூலமாக இந்த பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம். எப்படி உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு மருந்துகள் எடுத்து அதனைத் தொடர்ந்து கட்டுக்குள் வத்திருக்கிறோமோ, அதேபோல இந்தக் கண் சொட்டு மருந்தை மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப வாழ்நாள் முழுவதும் சரியாகப் பயன்படுத்தி வர வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள Intraocular pressure அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

கண் அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?

10 முதல் 21 mm Hg வரை சராசரியாக கண் அழுத்தம் இருக்கலாம். 21 mm Hg-க்கு மேல் சென்றால், கண் உள் உயர் நீர் அழுத்தம் என்று அறியும் பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

யாருக்கெல்லாம் Glaucoma வாய்ப்பு அதிகம்?

35 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Glaucoma பாதிக்கப்பட்ட குடும்பப் பின்னணி கொண்டவர்கள்

கண் அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள்

இரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடிய நோய்களான ஒற்றைத் தலைவலி, சர்க்கரைநோய், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

புகை பிடிப்பவர்கள்

கிட்டப்பார்வை உள்ளவர்கள்

ஸ்டீராய்டு சொட்டு மருந்தை அதிக நாட்கள் பயன்படுத்திவருபவர்கள்

இவர்களுக்கெல்லாம் Glaucoma ஏற்ப அதிக வாய்ப்புள்ளது. கிளாக்கோமாவால் பச்சிளங்குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இது மிக அரிதாகவே நடக்கும்.

சர்க்கரை நோயாளிகள் கண்ணில் கொஞ்சம் அதிக கவனம் வையுங்கள்….

சர்க்கரை நோய்க்கும் கண்ணிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரையின் அளவை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வரவேண்டும். இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை அளவையும், ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு விழித்திரையை பாதிக்கும் ‘டயபடிக் ரெட்டினோபதி’ எனும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அலட்சிய மனப்பான்மையைத் தவிர்த்து கவனம் செலுத்தி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்நோய் பற்றி அறிந்துகொள்வதும் ஊடகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி பார்வை குறையாமலும் இழக்காமலும் பார்த்துக்கொள்வோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *