புவனேஸ்வர், ஜூலை 12– ஒடிசாவில் நேற்று (11.7.2025) நடந்த அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும். மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகாராட்டிராவைப் போல பீகார் சட்டமன்றத் தேர்தலையும் அபகரிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
நாடு முழுவதும் நமது அரசமைப்பு சட்டம் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது.
இங்கு நேற்று முன்தினம் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பீகார் தேர்தலை பா.ஜ.க. திருடுவதை தடுத்து நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையம் தனது பணியை செய்யவில்லை. மாறாக பா.ஜ.க.வின் நலன்களுக்காக பணியாற்றுகிறது. பாஜகவின் ஓர் அணியாக அது செயல்படுகிறது.
பா.ஜ.க. 5 முதல் 6 முதலாளிகளுக்காக மட்டுமே அரசை நடத்துகிறது. சாதாரண மக்களுக்காக செயல்படவில்லை.
நீர். காடு மற்றும் நிலம் பழங்குடியினருக்கானது. தொடர்ந்து அவர்களிடமே இருக்கும்.
பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம் 1996-2அய் ஒடிசா பா.ஐ.க. அரசு அமல்படுத்தவில்லை. பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள் வழங்கப்படவில்லை.
பிஜு ஜனதா தள அரசைப் போலவே பா.ஜ.க. அரசும் ஒடிசாவை கொள்ளையடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வியட்நாமில் நடந்த
ஊழல் வழக்கில் 30 பேருக்கு சிறைத்தண்டனை
ஹோனாய், ஜூலை 12– வியட்நாம் வரலாற்றில் நடந்த மிகபெரிய ஊழல் வழக்கில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் ஒரு தொழிலதிபர் உட்பட 30 பேருக்கு வியட்நாம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு
அரசுப் பணிக்கான ஒப்பந்தங்களைப் பெறுவது தொடர்பாக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வியட்நாமின் புஹ் சோன் Phuc Son Group, குழுமத்தில் தலைவர் நவ்யென் வன்ஹாவு கையூட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து வியட்நாமின் ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது, விசாரணையில் அரசாங்கத்திற்கு மிகவும் நெருங்கிய பிரபல நிறுவனத்தின் தலைவர் அரசு ஒப்பந்தங்களைப் பெற அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்தது.
இதனால் அரசுக்கு சுமார் 45 மில்லியன் டாலர் (இந்திய ரூ மதிப்பில் சுமார் 400 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணை அமைப்பு கூறியுள்ளது. இந்த ஊழல் வழக்கில் மேனாள் அரசு அதிகாரிகளும், தொடர்புடையது உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர், மற்றும் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் உட்பட 30 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
30 பேருக்கு சிறை தண்டனை
இந்த வழக்கை விசாரித்த வியட்நாம் ஹனோய் நீதிமன்றம் அரசுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியதற்காகவும், அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்ததற்காகவும் பிரபல தொழிலதிபர் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட30 பேருக்கும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதே வழக்கில் தொடர்புடைய ஆளும் கட்சி தலைவர் ஒருவர் 2 மில்லியன் டாலர் (ரூ20 கோடி) லஞ்சம் பெற்றதாகவும் விசாரணை அமைப்புகளின் சோதனையின் போது கையூட்டுப்பணம் டிராவல் பேக்கில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது. இது அரசியல்வாதிக்கு எதிரான முக்கியான சான்றாக மாறியது இந்த வழக்கில் அந்தஅரசியல் வாதிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் அண்மைக் காலமாக ஊழல் சம்பவங்களை மிகக் கடுமையாகக் கையாண்டு வருகிறது. இந்த வழக்கு, நாட்டில் ஊழலுக்கு எதிரான தீவிரமான நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கிறது.
நொளம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சேவை மய்யம்
சென்னை, ஜூலை 12– நொளம்பூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த சேவை மய்யம் நேற்று (11.7.2025) திறக்கப்பட்டது. சார் – பதிவாளர் அலுவலகங்களில் பத்திரம் தயாரிப்பு, கட்டணம் செலுத்துதல், டோக்கன் பெறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளில் பதிவுத் துறை ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2024 – 25 நிதியாண்டில், 33.60 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. சென்னை மண்டலத்தில் மட்டும், 3.30 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. பதிவுத் துறையின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, நொளம்பூரில் உள்ள சார் – பதிவாளர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த சேவை மய்யம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளால் இந்த மய்யம் நடத்தப்பட உள்ளது. இதில் கிரய பத்திரங்கள் தயாரித்தல், வில்லங்க சான்றுக்கு விண்ணப்பித்தல், திருமண பதிவு சான்றிதழுக்கு விண்ணப்பித்தல், பதிவுக்கான டோக்கன் பெறுதல், சங்கங்கள் பதிவு, நிறுவனங்கள் பதிவு தொடர்பான ‘ஆன்லைன்’ சேவைகளை பெறலாம்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த மய்யத்தை, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.