மணிகண்ட ராஜன்- தமிழ்ச்செல்வி மணவிழா!

viduthalai
4 Min Read

நெய்வேலி, ஜூலை 9 திருவாதிரை மகன் பொறியாளர் மணிகண்ட ராஜன்- தமிழ்ச்செல்வி ஆகியோரின் மணவிழா கடந்த 6.7.2025 அன்று மாலை மந்தாரக்குப்பம் கஸ்தூரி திருமண மண்டபத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் மணவிழாவை நடத்தி வைத்தார். கழகக் காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மாவட்டத் தலைவர் தண்டபாணி, துரை மருதமுத்து, வழக்குரைஞர்  மார்பன்,  வழக்குரைஞர் தாமரைச்செல்வன், வழக்குரைஞர் தேவகிருஷ்ணன், மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி, பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், இடிமுழக்கம் இந்திரஜித், கோடையிடி குணசேகரன், வடலூர் முருகன் மற்றும் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவாக திருவாதிரை நன்றி கூறினார்.

வலசக்காடு சுயமரியாதை வீரர்
தங்க நாகரத்தினம்
நினைவேந்தல்- படத்திறப்பு!

சிதம்பரம், ஜூலை 9 சிதம்பரம் கழக மாவட்டம் வலசக்காடு சுயமரியாதை வீரர் தங்க நாகரத்தினம் கடந்த 21.6.2025 அன்று மறைவுற்றார். அவரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 6.7.2025 அன்று காலை 11 மணி அளவில் திமுக பொறியாளர் அணி செயலாளர் துரை.கி. சரவணன் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறைந்தவரின் படத்தை திறந்து வைத்துப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பெரியவர் பு.தா. அருள்மொழி ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.

நிகழ்வில் திமுக முன்னோடிகள் மருதூர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோவி பெரியார் தாசன், அரங்க வீரமணி, மாவட்டத் துணைச் செயலாளர் முருகன், மழவராயநல்லூர் கழகத் தோழர் ஆறுமுகம் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். வலசக்காடு சந்திரசேகர் நன்றி கூறினார்.

பேராவூரணியில் விதிகளை மீறி சாலையின் நடுவே  கோயில் கட்டும் பணியை தடுத்திட

தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை

பட்டுக்கோட்டை, ஜூலை 9 பட்டுக்கோட்டை மாவட்ட  கழகச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், தஞ்சை மாநகரச்செயலாளர் இரா.வீரகுமார் மற்றும் பேராவூரணி அனைத்துக் கட்சியினருடன் 7.7.2025 அன்று  காலை  மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்துப்  பேரா வூரணியில் விதிகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் நடுவே கோயில் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் என மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்   பிரியங்கா பங்கஜம்  நெடுஞ்சாலை துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்

இந்த சந்திப்பின்போது, மன்னார்குடியில் வெளியிடப்பட்ட ‘‘கொள்கை வீராங்கனைகள்’’ என்ற திராவிடர் கழக வெளியீடு புத்தகத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு  கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர்.

ஆத்தூர் கழக இளைஞரணி மாணவர் கழகத் தோழர்கள் – கல்லூரி மாணவர்களுக்குத் துண்டறிக்கை வழங்கல்

சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ. 2533 கோடி; தமிழ் உள்ளிட்ட 5 தென்னாட்டு மொழிகளுக்கு ரூ.147 கோடி  மட்டுமே! யாருக்குப் போகுது நிதி? ஆர்எஸ்எஸ், பாஜக சூட்சமத்தைப் புரிந்துகொள்வீர்! என்ற துண்டறிக்கையை ஆத்தூரில் உள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி நுழைவாயிலில்  மாணவர்களுக்கு நேற்று ( 8.7.2025) காலை பத்து மணிக்கு, மாவட்ட தலைவர் அ. சுரேஷ் தலைமையில், மாவட்ட செயலாளர் நீ. சேகர், இளைஞரணி மாவட்ட தலை வர் இரா. கார்முகிலன், மாவட்ட மாணவர் கழக செயலாளர்
ச. அஜித்குமார்  ஆகியோர் வழங்கினர்.

கடவுள் அண்ணாமலையின் சக்தியை பார்த்தீர்களா?

கிரிவலம் சென்ற  பக்தரின் கழுத்தை கத்தியால் கிழித்து பணம் பறிப்பு!

திருவண்ணாமலை, ஜூலை 9- தெலங்கானா மாநிலம்  அய்தராபாத் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா மகன் வித்யாசாகர் (வயது 32) என்பவர் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் (7.7.2025) இரவு கிரிவலம் சென்றார்.

நேற்று (8.7.2025) அதிகாலையில் போளூர் சாலை தற்காலிக பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு தனியார்  விடுதி முன்பு உள்ள சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வித்யாசாகரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

பணத்தைத் தர மறுத்ததால் அடையாளம் தெரியாத அந்த நபர்கள் வித்யாசாகரின் கழுத்தில் கத்தியால் கிழித்து உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து சுமார் ரூ.5 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த வித்யாசாகர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

‘வந்தே பாரத்’ ரயிலில்
புகை வந்ததால், பயணிகள் அச்சம்!

நெல்லை, ஜூலை 9 நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. இந்தப் புகைமூட்டத்தைப் பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை  அருகே வந்தே பாரத் ரயில் நிறுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *