புதுடில்லி, ஜூலை 8 காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களின் இறப்பை, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் முறையை அமல்படுத்திய, முதல் மாநிலம் என்ற அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.
காசநோய்
‘மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்’ என்ற பாக்டீரியாவால் காசநோய் ஏற்படுகிறது. இது, ஒருவரின் நுரையீரலை பாதித்தாலும், பிற உடல் உறுப்புகளையும் பாதிக்கும் தன்மையுடையது. சளி, இருமல், தும்மல் போன்றவை வாயிலாக, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்நோய் பரவும். காசநோய் தீவிரமடைந்தால் உயிரிழப்பு ஏற்படும்.
தீவிர காசநோயால் பாதிக்கப்படுவோரை இணைய செயலி வாயிலாக கண்டறியும் முறை, தமிழ்நாட்டில், 2022 இல் அறிமுகமானது.
தற்போது, இந்நோயால் ஏற்படும் இறப்புகளை தடுக்கும் வகையில் புதிய முறையை, அய்.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின், தேசிய தொற்றுநோயியல் மய்யம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, தீவிர நோய் பாதித்தவர்களை எளிதில் கண்டறிந்து, உடனடி சிகிச்சை அளிக்கக்கூடிய வாய்ப்பு உரு வாகியுள்ளது.
இறப்பு விகிதம் குறைவு
இதுகுறித்து தமிழ்நாடு காசநோய் தடுப்புப்பிரிவு அதிகாரி மருத்துவர் ஆஷா பெட்ரிக் கூறியதாவது:
நோயாளிகள் இடையே தீவிர காசநோய் பாதிப்பை கண்டறிவதன் வாயிலாக, மருத்துவ மனைகளில் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும். இதன் வாயிலாக இறப்பு விகிதத்தை குறைக்கும் நோக்கத்தில், புதிய கணக்கீடு முறை தமிழ்நாட்டில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இணைய செயலியுடன் இந்த முறை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காசநோய் பாதிக்கப்பட்டவரின் உடல் எடை, ஊட்டச்சத்து குறைபாடு, சுவாசக் கோளாறு, கால் மற்றும் கணுக்காலில் வீக்கம், ஆக்சிஜன் குறைபாடு, தானாகவே எழுந்து நிற்பது உள்ளிட்ட அய்ந்து அடிப்படை காரணிகளை வைத்து, அவர்களின் தீவிர பாதிப்பை சுகாதார பணியாளர்களால் அறிய முடியும்.
தமிழ்நாடு முன்மாதிரி!
இதற்காக, தமிழ்நாட்டில் 2022 ஜூலை முதல் 2023 ஜூன் வரையில் பொது சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட 56,000 காச நோயாளிகளின் உடல்நிலை விபரங்களைக் கண்காணித்து, இந்த கணக்கீட்டு முறை உரு வாக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில், தமிழ்நாட்டில் மட்டுமே இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. காச நோயாளிகளின் உடல்நலனில் அய்ந்து அடிப்படை பிரச்சினைகளைக் கண்காணித்து, அதற்கேற்ப அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
காச நோயால் ஏற்படும் இறப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, இதுபோன்ற கணக்கீடும் முறை, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தொற்றியியல் மய்ய விஞ்ஞானிகள் பாராட்டியுள்ளனர்.