தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!

viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை, ஜூன் 7  தொகுதி மறுவரையறை பிரச்சினை வஞ்சகம் நிறைந்தது – தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.6.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு:–

ஆபத்து நம் வாசற்படி வரை…

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன.

அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது.

ப.சிதம்பரம் விளக்கமாக
கூறியுள்ளார்!

இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களும், பா.ஜ.க. எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்ட வேண்டிய வேண்டிய தருணம் இது.

1971 ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகளுக்குப் பின், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவு கள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க. நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும்.

தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே!

ஜம்மு காஷ்மீரில்
பா.ஜ.க. வாக்குறுதி என்னாயிற்று!

பிரிவு 370-அய் நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் இலட்சணம் புரிந்துவிடும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது. தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது.ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறு வரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும்.

அ.தி.மு.க. போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க. முன் மண்டியிட்டாலும், தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்! நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *