உச்சநீதிமன்ற நீதிபதி கவாயின் கருத்தாழம்!

Viduthalai
3 Min Read

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து உச்சநீதிமன்ற வட்ட மேஜை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து சென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்பமை பி.ஆர். கவாய் ஆற்றிய உரை – சீர் தூக்கிப் பாராட்டத் தகுந்த அரிய கருத்துகளைக் கொண்ட  பொழிவாகும்.

‘நல்ல பகுத்தறிவு நீதித்துறை செயல் முறையின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். நீதிமன்ற தீர்ப்புகள் நல்ல பகுத்தறிவுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

நீதிபதிகள் ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளை மேற்கொள்வதுதான் இன்னொரு விவாதப் பொருள்’ என்று  அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 51a(h) என்ற பகுதி என்ன கூறுகிறது? அறிவியல் மனப்பான்மை, கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம், மனிதநேயம் இவற்றை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்துகிறது.

1976ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 42ஆவது  திருத்தச் சட்டத்தின் மூலம்  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் IVAஇல் இப்பகுதி சேர்க்கப்பட்டது.

குடி மக்கள் ஒவ்வொருவரின் கடமை இது என்று வலியுறுத்தப்படும் நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று கருதப்படும் நீதிபதிகள் இவற்றினை மதிக்கிறார்களா என்பது முக்கியமான கேள்வியாகும்.

மதச் சின்னங்களை அணிந்து வருதல், நீதிமன்ற வளாகங்களுக்குள்ளேயே கோயில் கட்டுதல், பார்ப்பன சங்க மாநாட்டில் கலந்து கொள்ளுதல் போன்றவற்றில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பங்கேற்பது எந்த வகையில் இந்த 42ஆவது திருத்தச் சட்டத்திற்கு உகந்ததாகும்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் பகுத்தறிவுவாதிகளைக் கேலி செய்யும் அளவுக்கு நீதிபதியின் நாக்கு நீள்கிறது. இலண்டனில் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க் கூறிய கருத்தோடு இதனை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பற்றிய வழக்கு ஒன்றில் நீதிபதி ஒருவர் ‘நான் ஜெகத் குரு சங்கராச்சாரியாரின் சீடன். எனவே, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்’’ என்று சொல்லவில்லையா?

நீதித் தேவதை கண்களைக் கட்டிக் கொண்டு இருப்பது ஏன்?

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் ‘நான் இன்னும் சில நாள்களில் ஓய்வு பெறப் போகிறேன்; அதற்குள் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குகிறேன்’’ என்று சொல்லி  நடராஜர் கோயிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியதுண்டே!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் என்ன நடந்தது என்பது ஊரும் உலகமும் அறிந்த உண்மையாகும்.

ஒரு பட்டப் பகலில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டது.

இடித்தவர்கள் யார் என்பதற்கான காட்சிப் பதிவு ஆதாரங்கள் எல்லாம் இருந்தும், ஒரே ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லையே!

என்னதான் சமாதானம் சொன்னாலும் நீதித்துறை வரலாற்றில் என்றென்றும் மறையாத கரும் புள்ளி இது.

ஒரு நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள்.

நீதித்துறையில் இருக்கும் இத்தகைய ஊழலை மனதிற் கொண்டு தான் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதித்துறைக்குள்ளும் ஊழல் நடமாடுவது பற்றிப் பேசியிருக்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் தன் பதிவேட்டில் பிறந்த தேதியைத் திருத்தி தன் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளவில்லையா?

அந்தக் குற்றவாளிமீது ஒரு தூசு, துரும்புக்கூட விழாமல், ஒரு பைசா குறையாமல் எல்லா வகையான நிதி சலுகைகளையும் பெற்று விடை பெற்றுச் சென்றதுண்டே!

ஆனால், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன் விசயத்தில் என்ன நடந்தது?

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களைக் கூட்டி, உச்சநீதிமன்ற நடப்புகள் குறித்துக் குமுறவில்லையா?

ஓய்வுக்குப் பிறகு வேறு பதவிகளுக்குச் செல்லுவது, ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டிப் போடுவது எல்லாம் எந்த வகையைச் சேர்ந்தது?

பதவி கிடைக்கும் என்பதால் அரசைச் சார்ந்து தீர்ப்புகளை வழங்கும் ஒரு மனப்பான்மைக்கு ஆளாகும் நிலை ஏற்படத்தானே செய்யும்? அதை மனதிற் கொண்டே மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் லண்டன் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு, ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து முத்துகளை உதிர்த்தது சிறப்பானதாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *