நம்முடைய திராவிடர் கழகத் தளபதி வீரமணி அவர்கள். இங்கே சில இயக்கங்கள் தோன்றுகின்ற அந்த அபாயத்தை எடுத்துக் காட்டினார்.
இது வரையிலே தமிழ் நாட்டில் கடந்த 4,5 ஆண்டு களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஏதோ மின்னலைப் போல தெரிந்து கொண்டிருந்தது.
ஆனால் இன்றைக்கு கடந்த 4, 5 ஆண்டு காலமாக ஆர்.எஸ் எஸ். இயக்கம் தமிழ்நாட்டு மண்ணிலே பல இடங்களில் வேருன்ற ஆரம்பித்திருக்கிறது.
என்ன காரணம்?
நாட்டை ஆளுகின்ற முதலமைச்சரே ஒரு சமயம் சொன்னார். முஸ்லீம்கள் தங்களுக்கென்று முஸ்லீம் லீக்கை வைத்துக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவர் கள் தங்களுக்கென்று ஒரு முன்னணியை வைத்துக் கொண்டிருக்கும்போது ஏன் இந்துக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வைத்துக்கொள்ளக்கூடாது? என்று என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டார்கள்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் நியாயமான கேள்வியாகக் கூடத் தெரியும். ஆனால் உண்மை என்ன?
முஸ்லிம்கள் சிறுபான்மையோர்: அதைப்போல கிறிஸ்துவர்கள் சிறுபான்மையோர்; சிறுபான்மையாக இருக்கின்ற மக்கள் தங்களுக்கென்று நிறுவனத்தை ஒரு ஸ்தாபனத்தை வைத்துக்கொள்கிறார்கள்.
அப்படி வைத்துக்கொண்டிருக்கின்ற மக்கள் ஆயுதமேந்தி போரிடக்கூடிய படைகளை நடத்தி னால், அணி வகுப்புகள் நடத்தினால், அதை திராவிடர் கழகமும் சரி, திராவிட முன்னேற்றக் கழகமும் சரி; கண்டிக்கத் தயாராக இருக்கிறது.
ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது? கிறிஸ்தவர்கள் யாரும் ஆயுதம் தாங்கிப் போரிடு வதற்கான பயிற்சியை, அதற்கான மாணவர்களுடைய பட்டாளத்தை குண்டர்களுடைய பட்டாளத்தைத் தயாரிக்க வில்லை.
அதைப் போலவே, இஸ்லாமியர் சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் தாங்கிப் போரிடக் கூடிய அணிவகுப்பை எங்கேயும் தயார்படுத்திக் கொண்டிருக்கவில்லை
ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இன் றைக்கு தமிழகத்திலே அங்கிங்கெனாதபடி, ‘எங்கெங்கும் போரிடுவதற்கான ஆயத்தங்கள் ஆட்சியாளர் களுடைய மறைமுகமான ஆதரவோடு நடை பெறுவதை என்னால் காணமுடிகிறது.
எனவேதான் ஆட்சியாளர் இன்றைக்கு மன்னார் குடியிலே பெரியார் அவர்களுடைய சிலைத் திறப்பு விழாவிலே நான் சொல்வதைக்கவனித்தாக வேண்டும். ஒரு மாத காலத்திற்குள்ளாக இந்த ஆர்.எஸ் எஸ். இயக்கத்தினுடைய அணிவகுப்புக்களை அவர் களுக்கு ஆயுதந்தந்து ஆங்காங்கே தேகப் பயிற்சி என்ற பெயரால் எதிர்காலத்திலே மற்ற மதங்களின் மீதும், பகுத்தறிவு இயக்கங்களின் மீதும் பாய்வதற்காகத் தயார்படுத்துகின்ற அந்தப் பாசறைகளையெல்லாம் தமிழ்நாட்டு சர்க்கார் தடுத்து நிறுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மாதத் திற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் அப்படிப்பட்ட படைகளை அப்படிப்பட்ட பாசறை களை’ நாங்களும் அமைக்கத் தயாராகி விடுவோம் என்பதை மாத்திரம் நான் அவர்களுக்குக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
(மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து மானமிகு கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து 11.4.1982, (‘விடுதலை’ 14.4.1982, பக். 2)