ஏழுமலையானுக்கு ‘டிரோன்’ பாதுகாப்பாம்!

viduthalai
3 Min Read

திருப்பதி தேவஸ்தானம், உலகிலேயே பணக்கார இந்துக் கோவிலான திருமலை கோவிலின் பாதுகாப்பிற்காக ஆளில்லா விமான எதிர்ப்புத்
(anti-drone) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருப்பது எதைக் காட்டுகிறது?

“கடவுள் நம் அனைவரையும் காப்பாற்றுவார்” என்று  நம்பிக் கொண்டிருக்கும்போது, அதே கடவுளைக் காப்பாற்ற ஓர் அறிவியல் சாதனத்தின் உதவி தேவைப்படுவது, அறிவியலின் இன்றியமை யாமையையும், அதன் மேன்மையையும்தானே பறைசாற்றுகிறது!

கோவில்களில் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறி தினமும் பெரும் கூட்டம் வந்து செல்லும் இத்தகைய  இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றுதான்.

காலம் மாற மாற, அச்சுறுத்தல்களின் தன்மையும் மாறுகிறது. நவீன காலத்தில், ஆளில்லா விமானங்கள் (drones) என்பவை தனிநபரின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாகவும், பாதுகாப்புச் சிக்கல்களை உருவாக்கும் ஒரு கருவியாகவும் உருவெடுத்துள்ளன. வேவு பார்த்தல், வெடிகுண்டு வீசுதல், சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல தவறான நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.

இத்தகைய சூழலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்திருக்கும் இந்த முடிவு ஏழுமலையான் சக்தியைக் கேலிக்கு உள்ளாக்கி யுள்ளது. கடவுளின் பாதுகாப்பு என்பது குருட்டு நம்பிக்கை என்றாலும் நிஜ உலகில் உள்ள அச் சுறுத்தல்களிலிருந்து கோவிலையும், சொத்தையும், பக்தர்களையும் பாதுகாப்பது என்பது மனிதனின் கடமையாகி விட்டது.

‘‘தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்’’ என்பது எல்லாம் புஸ்வாணம் ஆகி விட்டது.

இங்கேதான் அறிவியல் தன்னுடைய வல்லமையை நிரூபிக்கிறது. ஆளில்லா விமான எதிர்ப்புத் தொழில்நுட்பம் என்பது, குறிப்பிட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழையும் ஆளில்லா விமானங்களைக் கண்டறிந்து, அவற்றின் செயல்பாட்டை முடக்கும் அல்லது தரையிறக்கும் திறன் கொண்டது. இது ஒரு முன்னெச்சரிக்கை செயலில் ஈடுபடும் பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

பக்தி என்பது தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு, பொது நலன் போன்ற அம்சங்களில் அறிவியல் சார்ந்த அணுகுமுறை அவசியமாகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள், பெரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்போது, அறிவியலின் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நமக்குப் பேருதவியாக இருக்கின்றன.

திருமலை தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கை, சர்வசக்திமான் என்று கூறிக்கொள்ளும் கடவுள் சக்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கி நவீன காலத்தின் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ள அறிவியலை திறம்படப் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கோவில்களில் அங்கு வரும் மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் அறிவியலின் துணையின்றி முழுமை பெறாது, அறிவியலே சிறந்தது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.

உண்மையிலேயே திருப்பதி ஏழுமலையான் சக்திமீது நம்பிக்கை இருக்குமானால், பக்தர்களே இந்த ஏற்பாட்டை எதிர்த்து இருக்க வேண்டும்.

திருச்சியில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாட்டில் உரையாற்றியபோது கனிமொழி எம்.பி., ஒரு தகவலைச் சொன்னார்.

எம்.பி.க்கள் குழு ஒன்று திருப்பதி சென்றது. அதில் கனிமொழியும் இடம் பெற்று இருந்தார்.

ஏழுமலையான் கோயில் உண்டியலுக்குப் பக்கத்தில் துப்பாக்கியுடன் ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்ததை, உடன் வந்த எம்.பி.களுக்குச் சுட்டிக் காட்டி, புன்னகைத்தார். இந்த செய்தியை திருச்சி மாநாட்டில் கனிமொழி எம்.பி., சொன்ன நிலையில் பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் துள்ளிக் குதித்தன.

பக்தியினால் புத்தியை இழந்தவர்களுக்கு ஆத்திரம் வரத்தானே செய்யும்!

இப்போது டிரோன் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருப்பது – ஏழுமலையானைக் கேலி செய்வ தல்லாமல் வேறு என்னவாம்? இது ஒரு நாத்திக செயல்தானே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *