சென்னை, மே. 21- சென்னையில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள்
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற் காக சென்னையில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை பொது மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, பேருந்து நிலையம், பூங்கா, பள்ளி, கல்லூரி மற்றும் சந்தை பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பணிகளை சென்னை மாநகராட்சி சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது.
முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. மேற்கண்ட தகவல்களை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
குடிநீர் எந்திரங்களில் 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என 2 அளவுகளில் குடிநீர் கிடைக்கும். மக்கள் பாட்டில் களில் தண்ணீரை பிடித்துக் கொள்ளலாம்.
தாகம் தீர்க்கும்
முதல்கட்டமாக இந்தஏ.டி. எம். எந்திரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார். இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் பெறலாம்.
ஜாதி அடிப்படையில் பிரிவினை கூடாது
சிறை விதிகளில் திருத்தம்
சென்னை, மே 21– சிறைகளில் ஜாதி அடிப்படையில் பிரிவினை கூடாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்துறைச் செயலர் தீரஜ்குமார், அரசிதழில் வெளியிட்ட அறிவிக்கை:
சிறைக்கு கைதிகள் வரும்போது, ஜாதி குறித்த தகவல்களை கேட்டுப்பெறக்கூடாது. பதிவேடு, ஆவணங்களில் ஜாதி விவரங்களை இடம்பெறச் செய்யக்கூடாது.
ஜாதி அடிப்படையில் பிரிவினைக் காட்டவோ, பிரித்து வைக்கவோ கூடாது. ஜாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது. குறிப்பாக, மனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய வைப்பதோ, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடச் செய்வதோ கட்டாயம் கூடாது.
இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.