சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு

viduthalai
5 Min Read

(2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (13)

குடிஅரசு இதழில் வெளியான கட்டுரை தொடர்பாக  ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று “குடிஅரசுக்குப் பாணம்” என்று தலைப்பிடப்பட்டு வெளியான  தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தலையங்கத்தையும் முழுமையாக வெளியிட்டிருந்தோம்.  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே குடிஅரசு இதழுக்கு ஜாமீன் கேட்கப்பட்டு இதழ்  நிறுத்தப்பட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து “புரட்சி” என்னும் பெயரில் புதிய வார இதழ் வெளியானது. அந்த இதழ் முதல் தலையங்கத்தில் இதழின் நோக்கம் பற்றி மிக சிறப்பாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தலையங்கத்தில் குறிப்பிடுள்ளதாவது:-

‘குடிஅரசை’ ஒழிக்கச் செய்த முயற்சியால் ‘புரட்சி’ தோன்ற வேண்டியதாயிற்று.

உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய ‘குடிஅரசு’க்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆகவேண்டும். அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் புரட்சியைப் புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை.

நமது முதலாளி வர்க்க ஆட்சியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியிருப்பதால் குடிஅரசை அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும் என்ற ஞானபோதத்தை உறுதிப்படுத்திவிட்டது.

ஆதலால் நமது புரட்சியானது குடிஅரசைக் காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப் பிரச்சார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவர வேண்டியதாகிவிட்டது.

புரட்சி

1.தோற்றம்:

குடிஅரசு ஏட்டில் தந்தை பெரியார் அவர்கள் ‘இன்றைய ஆட்சி ஒழியவேண்டும் – ஏன்?” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்காக தந்தை பெரியாரும், எஸ்.ஆர்.கண்ணம்மா அவர்களும் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறை தண்டனை அளிக்கப்பட்டனர். அவர்களுக்கு முன்பே குடிஅரசு அடக்கு முறைக்கு ஆளான நிலையில் அதே வடிவமைப்புடன் 26.11.1933 அன்று முதல் ‘புரட்சி’ ஏடு வெளிவந்துள்ளது.

2.காலமுறை:

வார ஏடாக குடிஅரசு போன்றே அதே அளவுடனும் பக்கங்களுடனும் வெளிவந்தது. 17.06.1934 வரை வெளிவந்தது. பின்னர் அரசின் அடக்குமுறை காரண மாக நிறுத்தப்பட்டு ‘பகுத்தறிவு’ என்னும் பெயரில் வெளிவந்தது. 01.04.1934 முதல் முதற்பக்கத்தில் ஆசிரியர் ஈ.வெ.கிருஷ்ணசாமி என்றும், கடைசிப்பக்க அடிப்பகுதியில் ‘Published and edited at Unmai vilakkam press by Krishnasamy’ என்று போடப்பட்டு இருந்தது.

3.ஆசிரியர்:

பெரியார் கைது செய்யப்படும் (24.12.1933) வரை புரட்சி ஆசிரியராக ஈ.வெ.ராமசாமி என்று பெயர் போடப்பட்டு இருந்தது. ஏடு உண்மை விளக்கம் பதிப்பகத் தில் அச்சிடப்பட்டு சா.ரா.கண்ணம்மாள் அவர்களால் வெளியிடப்பட்டது. கைது செய்யப்பட்டபின் ஆசிரியராக 31.12.1933 முதல் ஈ.வெ.கிருஷ்ணசாமி விளங்கினார்.

4. கட்டுரையாளர்கள்:

தோழர் ஜீவானந்தம், செ.தெ.நாயகம், சென்னியம்மாள், நீலாவதி, எஸ்.எம்.ஏ.நரசிம்மன், தோழர் அ.இராகவன், ம.சிங்காரவேலர், உடுமலை கனராஜன், அப்துல் ஹமீது, கே.ஆர்.ராமகிருஷ்ணன், கைவல்யம், எஸ்.வி.லிங்கம், ரத்தினசபாபதி, டி.என்.இராமச்சந்திரன், மதுரை செய்யது அகமது, பாரதிதாசன் (கவிதை), சித்தர்காடு ராமையா, சாமி.சிதம்பரனார், கோ.சாரங்கபாணி, ஏ.பி.சீனிவாசன், பொன்னம்பலம்.

குறிப்பிடத்தக்க தகவல்கள்

• இந்தியாவில் முதல் நாஸ்திகர் மாநாடு எழும்பூரில் ஒயிட்ஸ் மெமோரியல் ஹாலில் நடந்த செய்தியை பதிவு செய்துள்ளது. (31.12.1933)
• 02.06.1934 அன்று புரட்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானார். வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.
• ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிட்டமைக்காக கண்ணம்மா அவர்கள் ரூ.100 ஒறுப்புத் தொகை கட்டினார்.
• புரட்சி வார இதழ் 26.11.1933 முதல் 17.06.1934 வரை வெளிவந்தது.

இதன் காரணமாய்ப் புரட்சி எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும் படலாம் எந்த விநாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம் ஆனால் சுயமரியாதைப் புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது அது வெற்றி பெறும்வரை ஒரு கணமும் ஓய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி

காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும். மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டார்.

மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை, மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல் மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காத வனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின் பேரிலேயே புரட்சித் தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம்.

ஆதலால் மனிதசமுகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டு பிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம். சோம் பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம். பதவி. அதிகாரம். செல்வம் ஆகியவைகள் அடையக்கருதி சுயமரியாதை இயக்கப்போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர்களுடையவும் ஆதரவு நம் புரட்சிக்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே “புரட்சி” தோன்றியிருக்கிறது. ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினியாயும் சமூக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது.

வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று ‘புரட்சி’ வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றியதல்ல. அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை நிறுத்த ‘புரட்சி’ வெளிவரவில்லை. சகல முதலாளி வர்க்கமும், சர்வசமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவ மாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியி ருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில், ஆர்வமுள்ள மக்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

சகல முதலாளி வர்க்கமும், சர்வசமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது.

புரட்சி – தலையங்கம் – 26.11.1933

– தொடரும்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *