ஆஸ்லோ, மே 16 தமிழ் சினி மாவின் முன்னணி இயக்குநரான பாலாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் சுபாஷ் பாரதி. பல குறும்படங்களை இயக்கி இருக்கிறார்.
இவர் இயக்கிய போர் பறவைகள் என்ற குறும்படம், நார்வே நாட்டில் உள்ள உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஏராளமான குறும்படங்கள் திரை யிடப்பட்ட அந்த விழாவில் ‘போர் பறவைகள்’ சிறந்த குறும்படத்துக்கான விருது பெற்றுள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட ஈழப் போர் குறித்த விவரங்களையும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை சொல்லும் இந்த படத்தின் தயாரிப்பாளரான ஜெகன் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இதுகுறித்து இயக்குநர் சுபாஷ் பாரதி கூறுகையில், ‘வெளிநாட்டில் ஒரு தமிழரின் குறும்படம் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த நார்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் உள்ளிட்டோருக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்’, என்றார்.
நார்வே தவிர, அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் ‘போர் பறவைகள்’ குறும்படம் திரையிடப்பட இருக்கிறது.