திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

viduthalai
7 Min Read

சென்னை, மே 12- தேசியக் கல்வி, நீட் போன்றவை பெண் கல்வியைத் தடை செய்வதால், அவற்றைக் கைவிட வேண்டும், ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சட்டம் தேவை; பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சி அவசியம் என்பது உட்பட மாநில திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

11.05.2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் எண் 1:

முன்மொழிந்தவர்: ந.தேன்மொழி

(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

 பெண் கல்விக்கு ஆபத்தா? போராட்டக் களம் கண்போம்

பெண்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தலைவர் தந்தை பெரியார். கல்விக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்துமே முதலில் பாதிப்பது பெண்களின் கல்வியைத் தான். ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை, நீட் ஆகியவற்றின் மூலம் பெண் கல்வி அதிக பாதிப்புக்குள்ளாகும் ஆபத்துள்ளது. 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களை வடிகட்ட சி.பி.எஸ்.இ வாயிலாகத் தொடங்கியுள்ள ஆபத்து மாணவர்களின் கல்வி வாய்ப்பைப் பறித்து, பெண் குழந்தைகள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இவற்றுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதோடு, தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில் போராட்டக் களம் காணவும் திராவிடர் கழக மகளிரணியும், திராவிட மகளிர் பாசறையும் அணியமாக இருப்பதை இக் கூட்டம் உறுதிசெய்கிறது.

(இவ்வேண்டுகோளை ஏற்று, மே 20 அன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் திராவிட  மாணவர் கழகமும், திராவிட மகளிர் பாசறையும் பங்கேற்கும் என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.)

தீர்மானம் எண் 2:

முன்மொழிந்தவர்: இறைவி

(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் தேவை!

பள்ளி, கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், வன்முறைகளும் அதிகரித்து வரும் சூழலைக் காண்கிறோம். இது போன்ற பிரச்சினைகளைப் பெண்கள் துணிச்சலாக பொது வெளியில் கூறி, அதன் மூலமாக நீதி பெற விரும்புவது ஆரோக்கியமான ஒன்றாக இருப்பினும், பாதுகாப்பை வழங்க வேண்டிய கல்வி வளாகங்களில் பெண்களுக்கு எதிரான எவ்வகை பாலியல் கொடுமைகளும் நடப்பதை நாகரீக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளாது. இதனைத் தடுத்துப் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கு, முதலில் ஆசிரியர்களுக்கும், இருபால் மாணவர்களுக்கும், பணியிடங்களிலும் போக்சோ சட்டம் (POCSO), குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், பணியிடத்தில் பாலியல் சீண்டல் தடுப்புச் சட்டம் ஆகியன குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில், கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்களை ஒருங்கிணைப்பது என முடிவு செய்யப்படுகிறது. இவற்றை மற்றவர்களுக்கு வகுப்பு மூலம் பயிற்றுவிக்கும் திறனுடன் நமது மகளிரைப் பயிற்றுநர்களாகத் தயாரிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

முன்மொழிந்தவர்: வி.கே.ஆர்.பெரியார்செல்வி

(மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

பெண்களுக்குத் தேவை தற்காப்புப் பயிற்சி!

பெண்களுக்கு பொழுதுபோக்கில் நாட்டம் ஏற்படுத்தும் பயிற்சிகள் வழங்குவதை விட, தற்காப்புப் பயிற்சிகளை வழங்குவதும், பெண்ணுரிமைக்கான விழிப்புணர்வை வழங்குவதுமே முக்கியமானதாகும். பள்ளிக் கல்வி முதலே பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலையைப் பயிற்றுவிக்கத் திட்டமிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையையும், அனைத்துப் பெற்றோரையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

முன்மொழிந்தவர்: க.அம்பிகா

(மாநில துணைச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)

அறிவியல் சிந்தனையுடன் ‘பாலியல் கல்வி’ வழங்குக!

தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் சிந்தனையோடும் தொலைநோக்கோடும் வாழ்ந்து மறைந்தவர் தலைவர் தந்தை பெரியார். அவரது வழியில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களையும் வன்கொடுமைகளையும் கல்வி வளாகங்களில் தடுப்பதற்கான முதல் முன்னெடுப்பாக அறிவியல் சிந்தனையுடன் கூடிய ‘பாலியல் கல்வி’ (Sexual Education) குறித்த பாடத்திட்டத்தை குழந்தைகள் நல ஆர்வலர்கள், சட்ட அறிஞர்கள், உளவியல் நிபுணர்களைக் கொண்ட குழுவினை அமைத்து தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 5:

முன்மொழிந்தவர்:  எ.ரேவதி

(காஞ்சிபுரம் மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)

ஆணவப் படுகொலையைத் தடுக்கும் சட்டம்!

பெண்கள் தாங்கள் விரும்பிய துணையைத் தாங்களே தேர்ந்தெடுப்பதற்கான உரிமை  அற்றவர்கள் என்கிறது மநுதர்மம். அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்வோரை, மனிதத் தன்மை அற்ற ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்யும் நிலை தமிழ்நாட்டில் ஆங்காங்கே இருந்து வருகிறது. ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்திற்கும் முன்மாதிரியாக இருக்கக் கூடிய திராவிட மாடல் அரசு ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்றுவதிலும் முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்பதுடன், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி பாதுகாப்பு மய்யங்கள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறையின் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

முன்மொழிந்தவர்:  பெ.கோகிலா

(தர்மபுரி மாவட்ட திராவிட மகளிர் பாசறைச் செயலாளர்)

தேவை மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்!

மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுவதிலும், அறியாமையாலும், அச்சத்தாலும் அவற்றைப் பரப்புவதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் பெண்களே! ஆணாதிக்கச் சமூகம் ஜாதிய மத சிந்தனைகளை காப்பதற்காக அனைத்து வகை மூடநம்பிக்கைகளையும் பெண்களை முன்னிறுத்தியே செயல்பட வைக்கிறது. மூட நம்பிக்கைகளால் ஏற்படும் இழப்புகளும், மனிதத் தன்மையற்ற செயல்களும் ஏராளம். தாங்கள் அடிமைகளாக இருப்பதை மறந்து மூடத் தன்மைகளை பரப்புவதற்கு கருவியாக பயன்பெற்று கொண்டிருக்கின்றனர் பெண்கள். படித்த பெண்களும் இதற்கு விதிவிலக்க அல்ல. இந்நிலையை மாற்ற, தமிழ்நாடு போன்ற முன்னேறிய, பகுத்தறிவுச் சிந்தனை அதிகம் கொண்ட மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை இயற்றுவது காலத்தின் கட்டாயமாகும். திராவிட மாடல் அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தினை நிறைவேற்ற வேண்டுமென்று திராவிட மகளிர் பாசறை வேண்டுகோள் விடுக்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரத்தைப் பெண்கள் மத்தியில் கிராமங்களில் நடத்தி விழிப்புணர்வூட்டவும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 7:

முன்மொழிந்தவர்:  ப.திலகவதி

(கோபி மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு சட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும்

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை. தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பெண்ணுரிமை குறித்து சிந்தித்தபோது அரசியல் அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய இடம் வேண்டும் என்று முரசறைந்து வந்தார். தொடர்ந்து நமது இயக்கத்தின் போராட்டத்தாலும் அழுத்தத்தாலும் பல்வேறு நிலைகளில் தமிழ்நாட்டில் பெண்களை அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வரும் முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறோம். ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு பெண்களின் நலனைப் பற்றி கவலையின்றி இதனையும் அரசியல் நோக்கோடு அணுகக்கூடிய காலகட்டத்தில், ஏதாவது காரணங்களைக் கூறி பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்றும், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

முன்மொழிந்தவர்:  லால்குடி செல்வி

(லால்குடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணித் தலைவர்)

தொகுதி மறுசீரமைப்பில் உரிமை காக்கப்பட
குழந்தைப் பேறு தீர்வாகாது!

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதிக்கும் வண்ணம் இடங்களைப் பறிக்க ஒன்றிய அரசு திட்டமிடுவது எப்பாடுபட்டாவது தடுக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் அதற்காக அதிகம் குழந்தைகளைப் பெறுதல் என்பது சரியான தீர்வாகாது. தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் சீரிய பிரச்சாராத்தினாலும், அரசின் முன்னெடுப்பாலும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய காரணத்தினால் பெண்கள் முன்னேற்றம் பெருகியுள்ளது. உரிமைக் குரலாலும், சட்ட வழிமுறைகளாலும் தடுக்கப்படவேண்டிய நாடாளுமன்ற இடங்கள் பறிப்பு போன்ற பிரச்சினையில், குழந்தைகள் அதிகம் பெற வேண்டும் என்று பரப்புவது எவ்வகையிலும் வளர்ச்சி ஆகாது. பெண்ணுரிமை பெற்ற சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சிகள் கூடாது என்பதை இக் கூட்டம் கவனத்துடன் சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் எண் 9:

முன்மொழிந்தவர்:  எ.அகிலா

(மாநில பொருளாளர், திராவிடர் கழக மகளிரணி)

இரயிலில் பெண்கள் பயணிக்கும் பெட்டிகள்
அதிகரிக்கப்பட வேண்டும்

தொடர்வண்டியில் பெண்கள் பயணிக்கும் முன்பதிவற்ற பெண்கள் பெட்டி, அவர்களின் பாதுகாப்பு கருதி தொடர்வண்டியின் நடுப்பகுதிக்கு மாற்றி அமைக்க வேண்டும். பெண்கள் மட்டுமே பயணிக்கும் தொடர்வண்டிப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். இரயில் நிலையங்களிலும்,பேருந்து நிலையங்களிலும் அவற்றின் அருகில் உள்ள பகுதிகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறை மய்யங்கள் 24-மணி நேரமும் இயங்க வேண்டும் என்றும் இக் கூட்டம் ஒன்றிய, மாநில அரசுகளை  கேட்டுக் கொள்கிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *