அது என்ன ‘பிரம்மஹத்தி தோஷம்?’

viduthalai
3 Min Read

பிரம்மஹத்தி தோஷம்பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’ (11.4.2025) என்ன கூறுகிறது?

‘‘எவ்வளவு பெரிய பிரம்மஹத்தி தோஷம் இருந்தாலும் பசுவைத் தானமாகக் கொடுத்து விட்டால், அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வணவேதம் சொல்லியிருக்கிறது.

ராஜராஜ சோழன் சில பிராமணர்கள் உளவாளி களாக இருந்த காரணத்தால் அவர்களைத் தண்டித்தான். அதனால் ராஜராஜ சோழனை பிரம்மஹத்திதோஷம் பிடித்தது. அதற்குப் பரிகாரமாக பொன்னால் பசு செய்து, அதற்குள் நுழைந்து வெளியே வந்து, அந்தப் பொன் பசுவை தானமாகக் கொடுத்ததால் ராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட தோஷம் விலகியது. அதன் பிறகுதான் அவன் பெரிய கொடிய நோயில் இருந்து விடுபட்டதாக கூறும் சான்றுகள் உள்ளன.

ராஜராஜசோழன் எல்லாக் கலைகளிலும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டான். அதுபோலத்தான் பரிகார பூஜைகள் எல்லாம் ராஜசோழன் மூலமாகத் தான் உயிர்த்தெழுந்தது’’

(ஆர்.எஸ்.எஸ்.வார இதழான
‘விஜயபாரதம்’ 11.4.2025 பக்கம் 28,29)

இந்த 2025ஆம் ஆண்டிலும் ஆர்.எஸ்.எஸ். வார இதழ் பார்ப்பனர்களின் ‘பெருமையைத் தூக்கிப் பிடிப்பதைப் பார்க்கத் தவறக் கூடாது.

உளவாளிகளாக அதாவது காட்டிக் கொடுப்பவர் களாக  இருப்பவர்கள் பார்ப்பனராக இருந்தால் என்ன, மற்றவர்கள் யாராக இருந்தால்தான் என்ன?

அவன் மகாமகா குற்றவாளிதானே. தண்டிக்கப்பட வேண்டியவன்தானே!

அந்த வகையில் நாட்டைக் காட்டிக் கொடுத்த உள வாளியாக செயல்பட்ட பார்ப்பனர்களை அரசனாகிய ராஜராஜசோழன் தண்டித்ததில் என்ன குற்றம்?

பார்ப்பான் காட்டிக் கொடுத்தது குற்றமில்லையாம். காட்டிக் கொடுத்த அந்தப் பார்ப்பனக் குற்றவாளிகளை தண்டித்த அரசன்தான் குற்றவாளியாம்.

எப்படி இருக்கிறது? குற்றவாளியாக இருந்தாலும் பார்ப்பானைத் தண்டித்ததால் ராஜராஜ சோழனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டதாம் – அதனால் அரசன் பெரிய நோய்க்கு ஆளானானாம்!

அதற்குப் பரிகாரம் என்ன தெரியுமா? தங்கத் தினால் பசு செய்து, அதற்குள் அரசன் நுழைந்து வெளியே வந்து அந்தப் பொன்னாலான பசுவை காட்டிக் கொடுத்த குற்றவாளியான பார்ப்பானுக்கு தானமாகக் கொடுத்தானாம்!

எப்படிப்பட்ட ராஜராஜசோழன் இவன்? அருள் மொழித் தேவன் என்ற தனது தமிழ்ப் பெயரை ராஜ ராஜன் என்று சமஸ்கிருதத்தில் மாற்றிக் கொண்டவன்.

நான்கு வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு சதுர்வேதி மங்கலம் என்ற பெயராலும் மூன்று வேதங்களைப் படித்தறிந்த  பார்ப்பனர்களுக்குத் திரிவேதி மங்கலம் என்ற பெயராலும் கிராமங்களைத் தானமாகக் கொடுத் தவன் ஆயிற்றே!

தஞ்சையில் பெரு உடையார் கோயிலை (பிறகு பிரகதீஸ்வரர் கோயிலாயிற்று) பார்ப்பனரல் லாதார் உழைப்பைச் சுரண்டிக் கட்டி முடித்த இந்த ராஜ ராஜன்தான் வடக்கே இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து கோயில்்களில் அர்ச்சகர்களாக் கியவன், சமஸ்கிருதத்தைக் கோயிலுக்குள் நுழைய விட்டவன் – பார்ப்பனர்கள் பாராட்டாமல் என்ன செய்வார்கள்?

பார்ப்பனர்கள் ஒருவரைப் பாராட்டுகிறார்கள் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற தந்தைபெரியார்தம் கூற்றின் அருமையை இந்த இடத்தில் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

‘‘பிராமணனுக்கு தலையை முண்டிதம் செய்வது (தலை மயிரை நீக்குவது) கொலைத் தண்டனையாகும் என்பதாகும். மற்ற வருணத்தார்க்கு கொலை தண்டனை உண்டு.

(மனு தர்ம சாஸ்திரம் அத்தியாயம் –8 சுலோகம் 379)

புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பான் மயிரும் மற்றவர்கள் உயிரும் சமமாகும்.

உடையார்குடி கல்வெட்டில் ஒரு தகவல் உண்டு.

முதலாம் ராஜராஜனின் தமையன் சுந்தரசோழன் மகன் ஆதித்த கரிகாலனை பார்ப்பனர்கள் ரவிதாசன், பரமேசுவரன், சோமன், தேவதாசன் ஆகியோர் கொலை செய்தனர். அவர்களைத் தண்டிக்க பார்ப்பனர்கள் மட்டும் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோயிலில் கூடியது. என்ன ‘தண்டனை’ தெரியுமா? 32 பசுக்கள் 12 குடம் பொன் மற்றும் பணியாட்கள், ஆடைகள் கொடுக்கப்பட்டு, எல்லை வரையில் பல்லக்கில் வைத்து அழைத்துச் சென்று விடப்பட்டான். (தஞ்சைக் கல்வெட்டுகள் சென்னை அருங்காட்சியகத்தில்) பல நூற்றாண்டுகளுக்கு முன் போவானேன்? நமது காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு விஸ்கி பாட்டிலுக்காக பாகிஸ்தானுக்கு இரகசி யத்தைக் காட்டிக் கொடுத்த பாலக்காட்டுப் பார்ப்பான் கூமர் நாராயணனுக்கு கிடைத்த தண்டனை என்ன?

டில்லியில் தோட்டப் பங்களாவில் சாய்வு நாற்காலி யில் காலாட்டிக் கொண்டு வசந்தமாக வாழ்ந்தது தான் அவனுக்குரிய தண்டனை!

ஆர்.எஸ்.எஸ். வார இதழ் இந்த 2025லும் பார்ப் பானுக்குத் தண்டனை கொடுத்தால் ‘பிரம்மஹத்தி தோஷம்’’ என்று எச்சரிக்கிறது!

அவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் அதுதானே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *