ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் ‘நீட்’ – Grok AI கொடுத்த அதிர்ச்சி
பாணன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாம் கூட்டத்தொடரில் பல கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில் ஒன்று நீட் முறைகேடுகள் தொடர்பானது.
2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு தாமதமானது. மேலும் பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கல்வி அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
கல்வி இணை அமைச்சர் பதில்
இதற்கு கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் விரிவான பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் கிட்டத்தட்ட நீட் முறைகேடுகள் பெரிய அளவில் நடக்கவில்லை என்றும், எப்போதும் போல் சில முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுவும் குற்றவாளிகள் பிடிபட்டுவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.
2025 – 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் (NEET) தேர்வு நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படவில்லை என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தேர்வுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் அல்லது ஆள்மாறாட்டம் தொடர்பாக பரவலான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி பந்தை அவர்கள் கைகளில் தள்ளிவிட்டார்.
தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நடத்தப்படும் நீட் தேர்வு, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே 5, 2024 அன்று நடைபெற்றது. “தேர்வு நடத்துவதில் எவ்வித காலதாமதமும் ஏற்படவில்லை,” என்று அமைச்சர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெளிவுபடுத்தினார். 2019 ஆம் ஆண்டு முதல் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது.
2024 நீட் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுகள்
2024ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற பின்னர், தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, முறைகேடுகள், சதித்திட்டம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் ஆகியவற்றை விரிவாக விசாரிக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் சிபிஅய்-யை அணுகியது. இதன் விளைவாக, நவம்பர் 22, 2024 அன்று, 2024 நீட் தேர்வு கேள்வித்தாள் திருட்டு வழக்கில் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒன்றிய அமைச்சர் மேலும் கூறுகையில், “கேள்வித்தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்கள் மற்றும் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்களின் பெயர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்றார்.
தேர்வின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடைபெற்றதாகக் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை,” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. என்றும் கூறினார்
கடந்த 5 ஆண்டுகளில் முறைகேடுகள்
கடந்த 5 ஆண்டுகளில் (2019 முதல் 2023 வரை) நடைபெற்ற நீட் தேர்வுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் அல்லது ஆள்மாறாட்டம் தொடர்பாக பரவலான ஆதாரங்கள் இல்லை அதாவது அமைச்சர் ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றத்தின் ஒரு வழக்கு தொடர்பான தீர்ப்பை மட்டுமே மேற்கோள்காட்டி இத்தேர்வு முறைகேடுகள் பரவலாக நடைபெறவில்லை, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு உறுதியளித்துள்ளது. என்று கூறினார்.
இது எந்த அளவிற்கு உண்மை, ஒருவேளை அமைச்சர் ஒரு ஆண்டுக்கு மட்டும் என்று எடுத்துக்கொண்டு இந்த பதிலைக் கூறினாரா என்று தெரியவில்லை.
உண்மை என்னவென்றால் நீட் தேர்வு துவங்கிய 2017 ஆம் ஆண்டு சகோதரி அனிதாவின் மரணத்தோடு தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்தது.
***
நீட் தேர்வு முறைகேடுகள்
– பத்திரிக்கைகள் தந்த செய்திகள்
கேரளா கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது: மேலும் 5 மாணவர்கள் சிக்குகிறார்கள்?
27 Sep 2019
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி கைதான மாணவர் உதித் சூர்யா அவரது தந்தை அளித்த தகவலின்பேரில் கேரள கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் நீட் தேர்வு பயிற்சி மய்யம் நடத்தி வந்த அந்த நபரை சிபிசிஅய்டி காவல் துறையினர் கைது செய்திருப்பதன் மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டாக்டர் வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் சேர்ந்தார். இதுகுறித்து தேனி மருத்துவக் கல்லூரி டீனுக்கு இ-மெயில் மூலம் அசோக் கிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார்.
தந்தை – மகன் கைது
புகாரை விசாரித்தபோது மன உளைச்சல் என மாணவர் கல்லூரியைவிட்டு நின்றுவிட்டார். விவகாரம் பெரிதாகி கல்லூரி முதல்வர் காவல் துறையில் புகார் அளித்தார். உதித்சூர்யா குடும்பத்துடன் தலைமறைவானார். அவர்களை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் வழக்கு சிபிசிஅய்டி காவல் துறைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஅய்டி காவல் துறையினர், தேனி தனிப்படை காவல் துறையினர் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் உள்ளிட்டவர்களை பிடித்து சென்னை சிபிசிஅய்டி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் தேனி அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனது மகனை மருத்துவராக்க 2 முறை நீட் தேர்வு எழுதவைத்தும் தேர்வாகததால் குறுக்குவழியில் புனேயில் வேறு நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து நானே என் மகன் கைதாகும் நிலைக்கு தள்ளி வாழ்க்கையை அழித்துவிட்டேன் என தந்தை டாக்டர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டனர்.
தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீட் பயிற்சி மய்ய நிறுவனர்
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வந்த வெங்கடேசன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசன் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் உதித்சூர்யா தேர்வெழுத உதவிய நபர் யார் என தெரிந்துள்ளது. திருவனந்தபுரத்தில் நீட் கோச்சிங் மய்யம் நடத்திவரும் ஜார்ஜ் ஜோசப் என்கிற நபர்மூலம் புனேவில் வேறொரு நபர்மூலம் தேர்வு எழுத வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட ஜார்ஜ் ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ஜார்ஜ் ஜோசப்பை தமிழ்நாடு கொண்டுவர காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீட் தேர்வில் உதித்சூர்யாவுடன் சேர்ந்து மேலும் 5 மாணவர்கள் இதேப்போன்று ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியதாகவும், அதில் ஒருவர் தேர்வாகவில்லை, மீதி 4 பேர் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.
இதேப்போன்று வலைப்பின்னலாக நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்துள்ளது என தெரிகிறது, இந்த ஆண்டு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டுகளிலும் எத்தனைப்பேர் சேர்ந்துள்ளனர்?, வேறு புரோக்கர்கள் உள்ளனரா?, இந்த புரோக்கர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கேள்விகளாக மக்கள் முன் உள்ளது.
***
In lockdown, 250 UP buses to bring home 7,000 students from Rajasthan’s Kota
Hindustan Times, Kota | ByAabshar H Quazi
Apr 17, 2020 04:56 PM IST
இராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற பகுதியிலிருந்து சுமார் 2 லட்சம் மாணவர்களை, ஊரடங்கின்போது நாடு முழுவதும் அந்த அந்த மாநிலங்கள் தனியாக பேருந்துகளை அனுப்பி தங்களது மாநிலங்களுக்கு அழைத்து வந்துள்ளன. இவர்கள் அனைவரும் யார் என்றால் அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள், வெளி நாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகள் (என்ஆர்.அய்).
இவர்கள் அனைவருமே நீட் என்ற மருத்துவ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி எடுக்க இராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு சென்றிருந்தவர்கள்.
இதில் பலர் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. இவர்கள் ஆண்டு முழுவதும் இங்கே இருந்து நீட் பயிற்சி எடுத்தார்கள் என்றால் பள்ளியில் சென்று படிப்பது யார்?
வகுப்புக்குச் செல்லவில்லை
இதற்கு விடை – 2018ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த கல்பனா குமாரி என்ற மாணவி 691 மதிப்பெண்களை பெற்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தார். கல்வியில் பின் தங்கிய மாநிலமாக உள்ள பீகார் மாநில மாணவி தேசிய அளவில் ‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த மாணவி குறித்த சர்ச்சை ஒன்று எழுந்தது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அந்த மாணவிக்கு இல்லை என்ற சர்ச்சைதான் அது. பீகார் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த அந்த மாணவி, நீட்’ தேர்விற்காக வெளிமாநிலம் ஒன்றில் தங்கி இரண்டு ஆண்டுகளாக தயார் செய்துவந்துள்ளார். வெளிமாநிலத்தில் இருந்ததால், பீகார் பள்ளியில் வகுப்பிற்கு சரியாக அவர் செல்லவில்லை. அதனால் பொதுத்தேர்வு எழுதுவதற்கான வருகைப் பதிவு அவருக்கு இல்லை. ஆனாலும் நீட் தேர்வு எழுதிய அந்த மாணவி 500க்கு 433 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த கல்பனாவின் தந்தை பீகார் மாநில பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் பேராசிரியர் குழுவின் தலைவராக உள்ளார், இவரது தாயார் அரசு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராவார்.அதுமட்டுமல்ல சிறுவயதில் இருந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த இந்த மாணவி 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பீகார் மாநில அரசு பள்ளியில் சேர்கிறார். பீகார் அரசுப் பள்ளி யில் சேர்ந்ததிலிருந்தே, வகுப்பிற்குச் செல்லவில்லை.
நாங்கள் பார்த்ததே இல்லை
இவர் குறிப்பிட்ட பள்ளியில் படித்தவர் என்று செய்தித் தாள்களில் வந்தபோது, அந்தப் பள்ளியைச் சேர்ந்த குறிப் பிட்ட வகுப்பு மாணவிகள், இவரை நாங்கள் பார்த்ததே கிடையாது என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட மாணவி படித்த அரசுப் பள்ளியில் தேர்ச்சி விகிதம் 62.3.
பள்ளிக்கே செல்லாதவர்கள் எப்படி தேர்ச்சி பெறுவார்கள்? இரண்டு ஆண்டு நீட் தேர்வு பயிற்சியில் படிக்கும் மாணவர்கள் ஒருவேளை நீட் தேர்வில் சறுக்கிவிட்டால், அதற்காகத்தான் ஆள்மாறாட்டம், தேர்வு முடிவுகளில் தலையிடுவது என பல விதங்களில் தில்லுமுல்லுகள் உண்டு.
தமிழ்நாட்டிலும் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது, அதில் சிலர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். மற்றவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. விழிப்புணர்வு உள்ள தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், வட இந்தியாவில் நீட் தேர்வு முறை வந்தபிறகு அங்கு எளியமக்கள் மருத்துவர்கள் ஆகவே முடியாது.
2019ஆம் ஆண்டு ‘த ஸ்விப்ட் இந்தியா’ என்ற ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 வடமாநிலங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் யாருமே மருத்துவக் கல்வியில் சேரவில்லை என்று புள்ளி விவரங்களோடு தெரியவந்துள்ளது,
***
கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வு முறைகேடு இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது
பீகார் அரசுத் தேர்வாணையத்தின் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விஷால் சவுராஷியா என்பவர் கைதாகிறார்.
வினாத்தாள் கசிவு
இவர் ஏற்கெனவே மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் அரசுத்தேர்வு வினாத்தாளை தேர்விற்கு முன்பே கோடிக்கணக்கில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைதாகி கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ஒடிசா மாநில அரசுத்தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக இவரை ஒடிசா காவல்துறை கைது செய்து தற்போது புவனேஸ்வர் சிறையில் உள்ளார்.
அப்போது காவல்துறையினரிடம், “2024 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான விடைத்தாள் எந்த நாட்டிலும், எந்த பாதாள அறையிலும் பிரிண்ட் ஆனாலும் என் ஆட்கள் அதனை பெற்றுவிடுவார்கள். தேர்வு நடத்தும் அனைத்துத் துறைகளிலும் (N.T.A. உட்பட) எங்களது ஆட்கள் உள்ளனர்” என்று கூறி சவால் விட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒடிசா காவல்துறை பீகார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது,
பீகார் காவல்துறை 20.03.2024 அன்று தேசிய தேர்வு முகமைக்கு (N.T.A.) “இந்த ஆண்டு நடக்கப் போகும் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்க உள்ளன. ஆகவே உடனடியாக இந்த விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கடிதம் எழுதியது.
மார்ச் மாதம் ஒரு நினைவூட்டல் கடிதம் என மார்ச், ஏப்ரல் மாதங்களில் 4 கடிதங்களை எழுதியது. மேலும் விஷால் சவுராஷியாவின் கூட்டாளியான விஜயேந்திர குப்தா என்பவர் இதுவரை கைதாகவில்லை.
பந்தயம்
முகத்தை மறைத்துக் கொண்டு ‘டைம்ஸ் ஆப் சுவராஜ்’ என்ற ஊடகத்துக்குப் பேட்டி அளிக்கும் போது “எனது கூட்டாளி சவுராஷியா எந்த மூலையில் இருந்தாலும் நீட் தொடர்பான வினாத்தாளை வாங்கிவிடுவார். வேண்டுமென்றால் பந்தயம் கட்டலாமா?” என்று கூறியுள்ளார்.
இதனையும் சாட்சியாக எடுத்துக்கொண்டு பீகார் காவல்துறை தேசிய தேர்வு முகமைக்கு எச்சரிக்கைக் கடிதம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் அனுப்பியது. இவ்வளவு நடந்தும் தேசிய தேர்வு முகமை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி உள்ளது.
பிஜேபி ஆட்சியின் நிர்வாக இலட்சணம் எந்தக் கெதியில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தான் இந்த நீட் முறைகேடுகள்.
நீட் தேர்வு தரம் குறித்து செயற்கை நுண்ணறிவுத்தளமான க்ரோக் தளத்தில் சில கேள்விகளை வைத்தபோது, முதலில் நீட் தேர்வு தரமானதா என்ற கேள்விக்கு விரிவாக பதில் கொடுத்துள்ளது.
க்ரோக் பதில்
செயற்கை நுண்ணறிவு – ‘க்ரோக்’கின் தெளிவான விளக்கம்.
நீட் (NEET – National Eligibility cum Entrance Test) தேர்வு முறை இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான நுழைவாயிலாக அமைந்துள்ளது. இது மருத்துவக் கல்வியின் தரத்தை மோசமாக்குகிறதா என்பது பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு கேள்வி. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் உள்ளன. இரு தரப்பையும் பார்ப்போம்:
நீட் தேர்வு தரத்தை மோசமாக்குவதாகக் கூறப்படும் காரணங்கள்:
1. ஒரே மாதிரியான அணுகுமுறை: நீட் தேர்வு முழுக்க முழுக்க பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை (CBSE syllabus) அடிப்படையாகக் கொண்டது. இதனால், மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாநில பாடத்திட்டம் வேறுபட்டிருப்பதால், மாணவர்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது.
2. பயிற்சி மய்யங்களின் ஆதிக்கம்: நீட் தேர்வுக்கு தயாராவதற்கு பயிற்சி மையங்கள் (Coaching Centers) பெருமளவு நம்பப்படுகின்றன. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதகமாக அமைகிறது. மேலும், பயிற்சி மய்யங்கள் “தேர்வில் வெற்றி” பெறுவதற்கு மட்டுமே கவனம் செலுத்துவதால், மருத்துவக் கல்வியின் அடிப்படை புரிதலும் ஆர்வமும் குறைகிறது என்ற கருத்து உள்ளது.
3. மாணவர் மன அழுத்தம்: நீட் தேர்வு கடுமையான போட்டியை உருவாக்குவதால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது அவர்களின் மருத்துவக் கல்வியை அணுகும் மனநிலையை பாதிக்கலாம், மேலும் தரமான கற்றலை சீர்குலைக்கலாம்.
4. திறன் சார்ந்த மதிப்பீடு இல்லை: நீட் தேர்வு பெரும்பாலும் புத்தக அறிவை (rote learning) சோதிப்பதாக உள்ளது. மருத்துவத் துறைக்கு தேவையான நடைமுறை திறன்கள், பகுத்தறிவு, மற்றும் நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் திறன் போன்றவை மதிப்பிடப்படுவதில்லை.
***
நீட் தேர்வு தரத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படும் காரணங்கள்:
1. நிலையான தரநிர்ணயம்: நீட் தேர்வு முன்பு மாநில வாரியாக நடத்தப்பட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைத்து, ஒரே தரநிர்ணயத்தை உருவாக்கியுள்ளது. இது மருத்துவக் கல்வியில் சீரான தரத்தை உறுதி செய்ய உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
2. ஊழல் குறைப்பு: முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடை (capitation fees) மூலம் இடங்கள் பெறப்பட்டன. நீட் இதை தடுத்து, தகுதி அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்கிறது.
3. போட்டித்தன்மை: நீட் தேர்வு மாணவர்களிடையே உயர்ந்த போட்டித்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால், சிறந்த மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைகின்றனர், இது நீண்ட காலத்தில் தரத்தை உயர்த்தும் என்று கருதப்படுகிறது.
***
முடிவு:
நீட் தேர்வு முறையால் மருத்துவக் கல்வியின் தரம் மோசமடைகிறதா என்பது அதன் செயல்படுத்தப்படும் விதத்தையும், அதைச் சுற்றியுள்ள சூழலையும் பொறுத்தது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மாநில பாடத்திட்டத்திற்கும் நீட் பாடத்திட்டத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மற்றும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று விமர்சிக்கப்படுகிறது. அதே நேரத்தில், நீட் ஒரு தேசிய அளவிலான சீரான தரத்தை உருவாக்குவதாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தக் கேள்விக்கு ஒரு தெளிவான பதில் இல்லை என்றாலும், நீட் முறையை மேம்படுத்துவதற்கு பலர் பரிந்துரைப்பது: மாநில பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வை மாற்றியமைத்தல், பயிற்சி மய்ய சார்பை குறைத்தல், மற்றும் நடைமுறை திறன்களை மதிப்பிடும் வகையில் தேர்வு முறையை மாற்றுவது போன்றவை.
அதே போல் நீட் தேர்வு முறையால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பியதற்கு.
க்ரோக் பதில்
ஆம், நீட் (NEET) தேர்வு முறையால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பலரும் விமர்சிக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றை விரிவாகப் பார்ப்போம்:
ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்:
1. பயிற்சி மய்யங்களின் செலவு:
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி மய்யங்கள் (Coaching Centers) பெரிதும் நம்பப்படுகின்றன. இந்த மய்யங்களில் பயிற்சி பெறுவதற்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலவாகிறது (சுமார் ரூ.50,000 முதல் ரூ.2,00,000 வரை). ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் இதை தாங்க முடிவதில்லை. இதனால், பயிற்சி பெறாத மாணவர்கள் பின்தங்குகின்றனர்.
2. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவு:
கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், புத்தகங்கள், மற்றும் இணைய வசதி போன்றவை கிடைப்பது அரிது. நீட் தேர்வு CBSE பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம் வேறுபட்டிருப்பதால், இங்கு பல ஏழை மாணவர்கள் தயாராவதற்கு சிரமப்படுகின்றனர்.
3. பொருளாதார ஏற்றத்தாழ்வு:
நகர்ப்புறங்களில் உள்ள பணக்கார மாணவர்கள் தனியார் பயிற்சி, மாதிரி தேர்வுகள் (mock tests), மற்றும் பிற வளங்களை எளிதாக பெற முடியும். ஆனால், ஏழை மாணவர்களுக்கு இவை பெரும்பாலும் கிடைப்பதில்லை. இது ஒரு சமமற்ற போட்டி சூழலை உருவாக்குகிறது.
4. மன அழுத்தம் மற்றும் வாய்ப்பு இழப்பு:
நீட் தேர்வு தோல்வியடைந்தால், மருத்துவக் கல்வி கனவு முடிந்துவிடும் என்ற அச்சம் ஏழை மாணவர்களிடையே அதிகம் உள்ளது. பணக்கார மாணவர்கள் தோல்வியடைந்தால் மீண்டும் முயற்சி செய்யலாம் அல்லது வெளிநாட்டில் படிக்கலாம். ஆனால், ஏழை மாணவர்களுக்கு அத்தகைய மாற்று வழிகள் இல்லை.
5. மொழி தடை:
நீட் தேர்வு ஆங்கிலம் மற்றும் சில பிராந்திய மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களாக இருப்பதால், ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் தேர்வு எழுதுவது அவர்களுக்கு சவாலாக உள்ளது.
***
எதிர் வாதங்கள்:
1. இலவச பயிற்சி திட்டங்கள்:
சில மாநில அரசுகள் (எ.கா., தமிழ்நாடு) மற்றும் தனியார் அமைப்புகள் ஏழை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்குகின்றன. இது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர்.
2. தகுதி அடிப்படையிலான சேர்க்கை:
நீட் தேர்வு நன்கொடை மற்றும் ஊழலை குறைத்து, தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களை தேர்ந்தெடுக்கிறது. இதனால், பணம் இல்லாத ஏழை மாணவர்களும் திறமை இருந்தால் மருத்துவக் கல்வி பெற முடியும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
***
தமிழ்நாட்டு சூழல்:
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது, ஏனெனில் இது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கிறது என்று கருதப்படுகிறது. 2021இல் தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில், நீட் அறிமுகமான பிறகு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை குறைந்திருப்பது தெரியவந்தது. மேலும், பல ஏழை மாணவர்கள் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
***
முடிவு:
நீட் தேர்வு முறை ஏழை மாணவர்களுக்கு பல சவால்களை ஏற்படுத்துகிறது என்பது பெரும்பாலான விமர்சகர்களின் கருத்து. பயிற்சி செலவு, பாடத்திட்ட வேறுபாடு, மற்றும் வளங்களுக்கான அணுகல் இல்லாமை ஆகியவை முக்கிய பாதிப்புகளாக உள்ளன. இருப்பினும், இலவச பயிற்சி மற்றும் ஆதரவு திட்டங்கள் மூலம் இதை சமாளிக்க முயற்சிகள் நடந்தாலும், அவை இன்னும் அனைவரையும் சென்றடையவில்லை.
இதை மேம்படுத்த, மாநில பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தேர்வை மாற்றியமைப்பது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச தரமான பயிற்சி வழங்குவது போன்ற தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நீட் முறைகேடு தொடர்பான செய்திகளும் செயற்கை நுண்ணறிவு கொடுத்த தகவலும் ஒரே கோணத்தில் நீட் தேர்வு மோசடிகளால் உருவாக்கப்பட்டது என்றும், இதனால் ஏழைகள் குறிப்பாக தமிழ்நாட்டுப் பிள்ளைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.
அப்படியென்றால், நாடாளுமன்றத்தில் தொல்.திருமா வளவன் எம்.பி. கேள்விக்கு கல்வி அமைச்சர் அளித்த பதில் என்ன என்றால் – மேடைப் பேச்சை அப்படியே நாடாளுமன்றத்திலும் நமது உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலாக கொடுத்துள்ளார்.