வட மாநிலங்களில் ஒரே மொழி தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை கிடையாது : ப.சிதம்பரம் பேட்டி

1 Min Read

புதுக்கோட்டை, மார்ச் 14 திருமயத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே மொழி

60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி ஹிந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் ஹிந்தி தான்.
2-ஆவது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் வட மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில ஆசிரி யர்களையே நியமிக்க வில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல் படுத்தப் படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல் படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சினையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு உறுப்பினர்கள் எழுப்பிய கேள் விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *