தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக செயல்படும் பிஜேபி ராகுல் குற்றச்சாட்டு

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 2- சமூக வலை தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பு சட்ட அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதன்மூலம் ஆணையம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது.

சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்காக எஸ்.சி. தேசிய ஆணையமே குரல் கொடுக்க வேண்டும். இப்போது தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அளிக்கும் புகார்கள் குறித்து யார் நடவடிக்கை எடுப்பார்கள்? இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஒன்றியத்தில் ஆளும் பாஜக, தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான மனநிலையில் செயல்படுகிறது. ஆணையத்தின் முக்கிய பதவிகள் உட்பட அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மய்ய வழக்கு
புது கட்டுமானத்திற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும்
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடில்லி,மார்ச் 2- ஈஷா யோக மய்யத்திற்கு பிறப்பிக்கப்பட்ட தாக்கீதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த விவகாரத்தில் 600 நாட்களுக்கு பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனால் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் காப்புக்காடு அருகில் இருக்கும் ஈஷா யோகா மய்யத்தின் கட்டுமான விதி மீறலை கண்டும் காணாமல் இருக்க முடியாது. எனவே தான் மேல்முறையீட்டு மனுவை நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

இருப்பினும் சட்ட விதிகளுக்கு எதிராக இருக்கும் கட்டடங்களை இடிப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்பப்போவது இல்லை. முதலில் முறையாக ஆய்வு செய்யப்படும். ஏனெனில் தவறு செய்யும் எவருக்கும் சலுகை காட்டக் கூடாது என்பதே அரசின் கொள்கையாகும்’ என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமமானவர்கள் ஆவர். எனவே எந்த விதி மீறலுக்கும் சலுகை அளிக்க முடியாது. சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உரிய கருத்துகளை தெரிவித்துள்ளது. அதில் நாங்கள் தலையிட வேண்டியது இல்லை. ஈஷா யோகா மய்யம் வரும் காலத்தில் எந்த கட்டுமானம் கட்டினாலும், முன்கூட்டியே மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *