மயிலாடுதுறை, பிப். 24- மயிலாடுதுறை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 21-02-2025 அன்று மாலை கொக்கூர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுவரவு இளைஞர் என். ஹரீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கழக காப்பாளர் சா. முருகையன், குத்தாலம் ஒன்றியத் தலைவர் எம். பாலசுந்தரம், குத்தாலம் நகரத் தலைவர் சா. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கு. இளமாறன் வரவேற்புரையாற்றினார்.
இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் கு.இளமாறன் மற்றும் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கலைக்குமார் ஆகியோர் முயற்சியால் கழக இளை ஞரணியில் பத்து இளைஞர்கள் இணைந்து தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். தந்தை பெரியாரின் கொள்கைகள் தத்துவங்கள் தங்களைப் பெரிதும் ஈர்த்த காரணத்தால் தாங்கள் இந்த இயக்கத்தில் இணைகிறோம் என்றும், சிதம்பரம் பொதுக்குழுவிற்கு மாவட்ட செயலாளரோடு வந்த போது ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடியதும், இந்த வயதிலும் அவருடைய பேச்சும் சுறுசுறுப்பும் எங்களை இயக்கத்தில் இணைந்து சமுதாயப் பணி மேற்கொள்ளத் துாண்டியது என்றும் அவர்கள் சொன்னது அனைவரின் தைத்தட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் ஞான. வள்ளுவன், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் அ. சாமிதுரை ஆகியோர் கழகத்தின் கொள்கைகள் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக இணைந்துள்ள இளைஞர்கள் பொது வாழ்வில் கட்டுப்பாடுகளோடும் ஒழுக்கத்தோடும் இருந்து கழகத்தின் நற்பெயரைக் கட்டிக்காக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்கள்.
இறுதியாக மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் இளைஞரணியின் விதிகளையும் நடைமுறைகளையும் எடுத்துச்சொன்னதோடு புதிதாக இணைந்துள்ள இளைஞர்களும் மாணவர்களும் கழக ஏடான விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு ஆகியவற்றில் சந்தாதாரர்களாகி அவற்றைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றும, சிறுகனுாரில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் உலகத்திற்கு இயன்ற நன்கொடைகளைத் திரட்டி அளிக்க வேண்டும் என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.
கழகப் பணிகளில் வேகம் காட்ட முடிவு
கூட்டத்தில் மறைந்த கொக்கூர் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி, கழகத்தோழர் இளஞ்செழியனின் துணைவியார் சாந்தி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தும், 15-02-2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி ஊராட்சிகள் தோறும் கூட்டங்கள் நடத்துவது என்றும், கழக ஏடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற அளவில் அவற்றிற்கு சந்தா சேகரிக்கும் பணியில் இளைஞரணி முழுமையாக ஈடுபடுவது என்றும், பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நன்கொடை திரட்டி அளிப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிதாக இணைந்த இளைஞர்கள் பிரதாப், தமிழ்க்குடியன், நிதீஷ், தனுஷ், தமிழ்மாறன், ஆதித்யா, கபிலன், ராகவேந்தன், தினேஷ்குமார் ஆகியோரோடு சீர்காழி ஒன்றியத் தலைவர் சா. சந்திரசேகரன், மயிலாடுதுறை நகரத் தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் பூ.சி. காமராஜ், குத்தாலம் ஒன்றிய துணைச்செயலாளர் சபாபதி, கொக்கூர் கார்த்திகேயன், பகுத்தறிவாளர் கழக கலைக்குமார், பெரியார் பிஞ்சு தமிழ்நிலவன் ஆகியோரோடு ஏராளமான கிராம மக்கள் ஆண்களும் பெண்களுமாக திரண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இறுதியாக ஹரீஷ் நன்றி கூறினார்.