முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

viduthalai
2 Min Read

புதுடில்லி, பிப்.21 தமிழ்நாடு கேரளா இடையேயான முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம்

முல்லைப் பெரியாறு விவ காரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கேரளா குறுக்கீடாக இருப்பதாக தமிழ்நாடு வழக்கு தொடர்ந்துள்ளது. பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா இடையூறாக இருப்பதாக வழக்கில் தமிழ்நாடு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “முல்லைப்பெரியாறு விவகாரத் தில் புதிய மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வை குழு

அந்தக் குழு தமிழ்நாட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இரு மாநிலங்களும் ஒத்துக் கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும்.

ஒரு வாரத்தில் மேற்பார்வை குழு ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும். அதிலிருந்து இரண்டு வாரத்திற்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இன்றிலிருந்து நான்காவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நான்கு வாரத்திற்கு பிறகு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடும் – கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளிக் குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது. முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கேரளா மேற்கொள்ள விடுவதில்லை, மரத்தை வெட்டவிடுவதில்லை என்று தமிழ்நாடும் ––- கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது பள்ளிக் குழந்தைகள் சண்டை போடுவது போல உள்ளது.

அறிக்கை தாக்கல்

இது போன்ற விவரங்களில் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக் கிறோம். மேற்பார்வை குழு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் மேற்பார்வை குழு உடனடியாக கூடி முடிவெடுக்க உத்தரவிடுவோம் அல்லது அவர்கள் அறிக்கை தாக்கல் செய்து நாங்கள் ஒரு உத்தரவை பிறப்பிப்போம்” என்று கூறியுள்ளனர்.

மேலும், “தமிழ்நாட்டில் ஏதாவது நடந்தால், கேரளா பேரழிவை சந்திக்க வேண்டும் என்கிற கானல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த அணை தொடர்பான வழக்குகள் சிதறி கிடக்கின்றன. எனவே மொத்த வழக்கையும் ஒன்றிணைத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு பட்டியலிடப்பட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கிறோம்” என தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *