இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை

viduthalai
2 Min Read

புதுடில்லி, பிப். 8 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் ‘சி-17’ ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

கைகளில் விலங்கு

அரியானா மற்றும் குஜராத் மாநிலங் களை சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 30 பேர், உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த தலா 3 பேர், சண்டிகாரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 104 பேர் விமானத்தில் வந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இதனிடையே இந்தியர்கள் 104 பேரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்டும், கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் விமானத்தில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி முழக்கத்தில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், டில்லியில் செய்தியாளர் களை சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:

பிப்.,10 -12 தேதிகளில் பிரான்சு பய ணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார். டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பிறகு, மோடியின் முதல் அமெரிக்க பயணம் இதுவாகும். அதிபரான பிறகு அவரை சந்திக்கும் வெகு சில தலைவர்களில் மோடியும் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் 487 இந்தியர்கள்

2012இல் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட போது, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரத்தில், இந்தியா தொடர்ந்து தனது கவலையை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக எத்தனை பேர் என கூற முடியாது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால் இந்த முறை நடவடிக்கைகள் சற்று வேறுவிதமாக உள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே 104 இந்தியர்களை கை கால்களை கட்டி அமெரிக்கா அனுப்பி இருந்தநிலையில், வெளியேற்றப்படும் இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *