புதுடில்லி, பிப்.7- பிரதமர் மோடி தனது உரைகளில் மேக் இன் இந்தியா என்ற வார்த்தையையே குறிப்பிடவில்லை என்று எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
12.6 சதவீதமாக குறைவு
இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரதமர் மோடி தனது உரைகளில் “மேக் இன் இந்தியா” என குறிப்பிடுவதையே நிறுத்தி விட்டார். மேக் இன் இந்தியா ஒரு நல்ல முயற்சிதான் என்றாலும் அது தோல்வி அடைந்ததை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும். 2014இல் நாட்டின் ஜிடிபியில் 15.3%ஆக இருந்த உற்பத்தி பொருள்களின் பங்கு மதிப்பு தற்போது 12.6%ஆக குறைத்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உற்பத்தி பொருள்களின் பங்கு மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
வேலைவாய்ப்பு
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மிகவும் அவசிய மானவை. அண்மைக் காலங்களில் தேசிய அளவிலான இந்த சவாலை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை. நமது உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுப்பதற்கும் எதிர்கால உலகப் பொருளாதாரத்தை போட்டியுடன் அணுகுவதற்கு உற்பத்தித்துறையை தயார்படுத் தவும் ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. மின் மோட்டார்கள், பேட்டரிகள் மற்றும் ஏஅய் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நாம் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். நமது உற்பத்தித் துறையை மீட்டெடுக்கவும், அதிநவீன உற்பத்தித் திறனை வளர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இதுமட்டுமே ஒரே வழி. வலுவான தொழில்துறை கட்டமைப்புடன் நம்மை விட சீனா முன்னணியில் உள்ளது,” இவ்வாறு தெரிவித்துள்ளார்.