உடல்களை தேடும் உறவினர்கள்
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் தேடும் சோகக்காட்சி.
பிரயாக்ராஜ், ஜன.29 உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் கங்கை, யமுனை ஆறுகள் கலக்கும் இடத்தில் கும்பமேளாவின் நீராடல் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மவுனி அமாவாசையின் போது நீராடுவது பாவங்களைக் கழுவி, அவர்களுக்கு ‘மோட்சம்’ அல்லது ‘முக்தி’யை அளிக்கும் என்று கூறுகிறார்கள்.
மவுனி அமாவாசை நாளான நேற்று (28.01.2025) மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 30க்கும் மேற் பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. தற்போதுவரை 25 பேர் உயிரிழந் துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் நெரிசலில் சிக்கிய நிலையில் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
அதிகாரிகளும் சிக்கிக் கொண்டனர்
கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பலரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அங்குள்ள கள சூழ்நிலையை அறிந்து கொள்ள நிர்வாக மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகளும் அங்கு வந்தனர். “நாங்கள் இரண்டு பேருந்துகளில் 60 பேர் கொண்ட குழுவாக வந்தோம்.
திடீரென்று கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் நாங்கள் சிக்கிக்கொண்டோம். எங்களில் பலர் கீழே விழுந்தனர், கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. எல்லா பக்கங்களிலிருந்தும் தள்ளு முள்ளு ஏற்பட்டது,” என்று கருநாடகாவைச் சேர்ந்த சரோஜினி கூறினார். அதிகாலை சங்கமத்திலும், மகா கும்பமேளாவிற்காக 12 கிலோ மீட்டர் நீளமுள்ள நதிக் கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மற்ற நீராடல் கரைகளிலும் பக்தர்கள் கூட்டம் குவிந்திருந்த நிலையில், இந்த கோர நிகழ்வு நடந்தது.
புனித நிதி என்றும் கடவுள் சக்தி என்றும் மக்களை நம்ப வைத்து, இப்படி உயிர்ப் பலியா வதற்கு யார் பொறுப்பு!