புதுடில்லி, ஜன. 25- ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
சட்ட திருத்த மசோதாவில் உள்ள சாதகம் மற்றும் பாதகம் ஆகியவற்றை ஆராய்ந்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் மசோதா நிறைவேற வேண்டும் என்பதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற குழு மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகிறது.
ஆட்சேபனைகள்
இந்த நிலையில் நேற்று (24.1.2025) நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தினர். அப்போது எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதனால் ஒவைசி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திருத்தம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம் அல்லாத நபர் மற்றும் குறைந்த பட்சம் இரண்டு பெண் உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தீவிரமான விஷயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர் மிர்வைஸி குழு முன் தனது கருத்துகளை தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் “வக்பு வாரியம் விவகாரம் மிகவும் தீவிரமான விசயம்.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு முக்கியமான விசயம். ஏனென்றால், இது முஸ்லிம் அதிகமாக வாழும் மாநிலம் ஆகும். வக்பு விவகாரங்களில் அரசாங்கம் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என கமிட்டியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “எங்கள் ஆலோசனைகள் கேட்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும், முஸ்லிம்கள் தாங்கள் அதிகாரம் இழந்தவர்கள் என்று உணர வைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இது தொடர்பாக பாஜக எம்.பி. அபரஜிதா சாரங்கி கூறுகையில் “நாங்கள் ஜம்மு-காஷஸ்மீர் அமைப்பு மற்றும் வழக்குரைஞர்கள் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளிடம் ஆலோசனைகள் கேட்டறிய வந்தோம். இரு அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் கல்யாண் பானர்ஜி (திரணாமுல் காங்கிரஸ் எம்.பி.) தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகாவுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர். இரண்டு முறை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது” என்றார்.
இடைநீக்கம்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் கூறுகையில் “21ஆம் தேதி கடைசி செசனுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர், கூட்டம் ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்தார்.
மற்ற உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 அல்லது 31ஆம் தேதி கூட்டத்தை கூட்ட வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், எங்கள் கோரிக்கையை தலைவர் கேட்கவில்லை. அதனால் நாங்கள் எங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து வந்தோம்.
24.01.2025 அன்று இரவு நிகழ்ச்சி நிரலில் மாற்றம் இருப்பதாகவும், தொடர்ந்து விவாதம் இருக்காது என்றும் செய்தி கிடைத்தது. அதேவேளையில் கூட்டம் 24 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெறும், ஆனால் 25-ம் தேதி (ஜனவரி) நடைபெறாது எனத் தெரிவித்தனர்.
உள்ளே அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தலைவருக்கு அழைப்புகள் வந்தன. அதனடிப்படையில் அவர் செயல்பட்டார். அவர் வேறொருவரின் முடிவை செயல்படுத்துகிறார்.
நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது தலைவர் 10 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தார். எந்த எதிர்ப்பும் இல்லாமல் விவாதம் நடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்” என்றார்.