சட்ட விரோதக் குடியேறிகளை திருப்பி அனுப்பும் முனைப்பில் டிரம்ப்
பத்தாண்டு ஆட்சி நிர்வாகச் சீர்கேட்டிற்கு பதில் கூறுவாரா மோடி?
அமெரிக்க அதிபர் பதவி ஏற்ற உடன் முதல் வெளியுறவுத்துறை சந்திப்பே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரோடு தான். அவரை சந்திக்க அழைத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலகம் (அங்கே அமைச்சரவை கிடையாது) “உங்கள் நாட்டில் இருந்து நிறைய புலம்பெயர்ந்தோர் சட்டவிரோதமாக வந்துவிட்டனர், இப்போது அவர்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டது.
சட்ட விரோத குடியேறிகள்
ஆனால் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் அந்த சந்திப்பின் ஒளிப்படத்தை ட்வீட் செய்தபோது, அமெரிக்கா சட்டவிரோத குடியேறிகளை (ஜெய்சிறீராம் கோஷ்டிகளை) கூடவே பிடித்துச்செல்லுங்கள் என்று கண்டித்ததைப் பற்றி குறிப்பிடவே இல்லை.
அமெரிக்காவின் அதிபராக டிரம்ப், முதல் நாளிலேயே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் எல்லையில் இருந்து சட்டவிரோத நுழைவைத் தடுப்பது குறித்த உத்தரவுகளை வெளியிட்டார். அடுத்த நாள், அவரது புதிய வெளியுறவுச் செயலாளர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முன்னால் இந்த பிரச்சினையை எழுப்பினார்.
அதிபரின் பதவி ஏற்பு நிகழ்விற்குப் பிறகு வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் நடந்த சந்திப்பின் ஒளிப்படத்தை ஜெய்சங்கர் பகிர்ந்தார். இந்த சந்திப்பில், இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்று எல்லாம் குறிப்பிட்டார். இவை ரெடிமேட் சொற்கள். எந்த நாட்டு வெளியுறவுத்துறையை சந்தித்தாலும் இப்படி ஒரு வார்த்தை வந்து விழும். ஆனால் உண்மை என்னவென்றால், “இந்தியாவில் இருந்து வரும் சட்டவிரோத குடியேறிகளின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” என்று கூறியதை மறைத்துவிட்டார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த தகவலை இந்திய மக்களுக்கு ஏன் தானாகவே தெரிவிக்கவில்லை? அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை வெளியான பின்னரே இது தெரிய வந்தது. பிஜேபி தலைவர்கள் ஒரு காலத்தில் “தாய்மதம் திரும்புங்கள்” என்ற கொள்கையை பரப்பிக் கொண்டே இருந்தனர். இன்றும் உள்ளனர். இப்போது அமெரிக்கா சொல்கிறது, “ஓடுங்கள் உங்கள் தாய்நாட்டிற்கு” என்று.
மோடியின் ஆட்சியில் அதிகம்
சட்டவிரோத குடியேற்றம் மோடியின் ஆட்சியில் மிகவும் அதிகமாக நடந்துள்ளது. உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், அசாமில் என்.ஆர்.சி. என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் வாரி இறைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 20,000 பெயர்கள் கொண்ட பட்டியல் தயாராகிவிட்டது. இது இந்தியத் தூதரகத்திடமும் கையளிக்கப்பட்டது.
இந்த 20,000 பேர் இந்தியா திரும்பும் போது எந்த அமைச்சர் கையில் ரோஜாக்களைக் கொடுத்து வரவேற்க தயராக உள்ளார்? இவர்களும் கப்பலிலோ அல்லது விமானத்திலோ அழைத்து வரப்படும் போது “பாரத மாதா கி ஜெய்” என்றும் “மோடி மோடி” என்றும் முழக்கமிடுவார்களா?
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. நியூ ஜெர்சியில் இந்திய கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ காலத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவமனைகளை நாடுகின்றனர். இதனால் குழந்தை அமெரிக்க குடியுரிமை பெற முடியும்.
அய்தராபாத்தில் இருந்து வெளியான இந்த செய்தியில், ஒரு (இந்திய) பாரம்பரிய கலாச்சாரத்தைச் சேர்ந்த பெண் குழந்தை பிறப்பதற்கான நேரம் மார்ச் மாதம், ஆனால் அவர் இப்போதே குழந்தையைப் பெற விரும்புகிறார்.
காரணம் பிறப்பினால் கிடைக்கும் குடியுரிமை பிப்ரவரிக்குள் முடிவிற்கு வருகிறது. 30 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காது. அப்படி பிறக்கும் குழந்தை நாடற்றவர்களாக கருதப்படும்.
அமெரிக்காவில் 1 கோடி 10 லட்சம் குடியேறிகள் முழுமையான ஆவணங்கள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விரட்டி அடிக்கும் செலவு 315 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமெரிக்காவின் கருவூலத்தில் இருந்து 315 பில்லியன் டாலர்களை எடுக்கமாட்டார். எல்லாம் இந்தியா போன்ற நாடுகளின் தலையில் கட்டுவார்.
7 லட்சம் பேர்
எந்த ஆவணங்களும் இல்லாமல் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மூன்று நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். மெக்ஸிகோ மற்றும் எல் சல்வடோர் ஆகிய நாட்டுமக்களை சட்டவிரோத குடியேறி என்று கூறமுடியாது, காரணம் அது அவர்களுக்கான மண். அரசியல் எல்லைகள் தடுக்கலாம், ஆனால் அவர்கள் அம்மண்ணின் பூர்வீக குடிகள்.
பூர்வீக குடிகள் குறிப்பாக அமெரிக்க கண்டங்களில் வாழும் மக்கள் இடம் பெயர அய்க்கிய நாடுகள் சில
தளர்வுகளைக் கொடுத்துள்ளது. அதனை மாற்ற டிரம்பிடம் பெரும்பான்மை பலம் கிடையாது. அடுத்தபடியாக இந்தியாவின் பெயர் உள்ளது. கள்ளத்தனமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அய்ந்து மடங்கு அதிகரித்துள்ளது.
2022-இல், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவில் நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 3,000 ஆக இருந்தது. ஆனால் மெக்ஸிகன் குடியேற்ற முகமையின் படி, 2023 ஜனவரி முதல் நவம்பர் வரை, 11,000-க்கும் அதிகமான இந்தியர்கள் இந்த வழியில் சென்றுள்ளனர். 30 நவம்பர் 2023 வரை, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் போது, 41,770 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022-இல் இந்த எண்ணிக்கை மாதத்திற்கு 300 பேர் கனடா-அமெரிக்கா எல்லையில் இருந்து நுழையும் போது பிடிக்கப்பட்டனர். இந்த தரவு அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் துறையினுடையது. கல்வி கற்றுப் பெருமதிப்போடு அமெரிக்காவிற்குச் சென்று வாழும் நம் தென் இந்தியர்களின் நற்பெயரும் இந்த சங்கிக் கூட்டங்களால் கெடுகிறது.
அமெரிக்காவை அடைய, இந்தியர்கள் எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அங்கு செல்ல, மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள், லட்சக்கணக்கான ரூபாய் கடன்களை வாங்குகிறார்கள். பின்னர், இரண்டரை மாதங்கள் விமானப் பயணம், நடைப் பயணம் மற்றும் படகுப் பயணம் மூலம் அமெரிக்காவில் நுழைகிறார்கள்.
அமித் குமார் மான் என்பவர் இளைஞர். லட்சக்கணக்கான கடன்களை எடுத்து அமெரிக்காவிற்குச் செல்லும் கனவு கண்டார். ஆனால் எப்படியோ அமெரிக்காவை அடைந்த பிறகு, ஒரு கார் அமித் மானை மோதியது. அமெரிக்க சட்டத்தின்படி சிகிச்சை கிடைத்தது, ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை. பல நாட்கள் அரை ரொட்டியில் தனது நாட்களை கழித்தார், 35 டிகிரி வெப்பத்தில் உள்ள கண்டெயினரில் வாழ்க்கையை ஓட்டுகிறார். ரூ.40 லட்சம் பணம் கொடுத்து அமெரிக்கா சென்றார். தனது விவசாய நிலத்தை விற்றும், மிகவும் அதிக வட்டிக்குக் கடன் வாங்கியும் அமெரிக்கா சென்றார். இந்த அமித்தைத்தான் ராகுல் காந்தி அமெரிக்காவில் சந்தித்தார்.
இன்னல்களைக் கடந்து
அமித் மற்றும் அவரைப் போன்ற இளைஞர்கள், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய கட்டாயப்படுத்தப் பட்டவர்கள். அய்ரோப்பா மற்றும் தென் அமெரிக்கா வழியாக இரண்டரை மாதங்களில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவை அடைந்ததாக கூறினார். பல நாட்கள் மக்கள் கூட்டம் அடங்கிய படகில் பயணித்ததாகவும் கூறினார்.
அவர்கள் செலவழித்தது 55 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை. சிலர் நிலத்தை விற்றனர், சிலர் கடன் வாங்கினர். முதலில் விமானம் மூலம் இஸ்தான்புல் சென்றனர். இஸ்தான்புல்லில் இருந்து மத்திய தரைகடல் வழியாக சரக்கு கப்பலில் 3 மாதம் கடல் வழியாக பயணித்து தென் அமெரிக்காவின் சுரினாம் சென்றனர்.
வழியில் இவர்களோடு சென்றவர்கள் இறந்தனர். அவர்கள் உடலை சிதைத்து கடலில் வீசிவிடுவார்கள். உடலை அப்படியே வீசினால் உடல் எந்த நாட்டின் கரையிலாவது சென்று சேர்ந்துவிடும். உடலை சிதைத்தால் சிறுமீன்கள் முதல் சுறாக்கள் வரை சில மணி நேரத்தில் தின்றுவிடும்.
சுரினாமில் இருந்து வெனிசுலா, கொலம்பியா வழியாக பனாமாவின் காடுகள் மற்றும் மலைகளில் நடந்து போதை கும்பல்களிடமிருந்து தப்பித்து புயல், மழைகளை, எதிர் கொண்டு அமெரிக்காவை அடைந்தனர்.
மோடி ஆட்சியில் வேலை இல்லை
இந்த இளைஞர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்பை விரும்பினாலும் அதைப் பெற முடியாது. அவர்களுக்கு ஒரே ஒரு வழி உள்ளது – அமெரிக்கா. அதே நேரத்தில், நரேந்திர மோடி ஜியின் நண்பர் டிரம்ப், அந்த வழியையும் மூட உத்தரவிட்டுவிட்டார்.
வட இந்தியர்கள் இங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள். அங்கே மோடியின் நண்பர், “நான் இவர்களை உள்ளே வர அனுமதிக்க மாட்டேன்” என்று கூறுகிறார்.
இப்போது, அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது, “சட்டவிரோதமாக இங்கு இருப்பவர்களை இழுத்துச் செல்லுங்கள்” என்று உத்தரவு போட்டுவிட்டது.
விரைவில் மோடி-டிரம்ப் சந்திப்பு நடக்க உள்ளது. அப்போது டிரம்ப் கட்டாயம் சட்டவிரோத இந்தியர்கள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கூறுவார். அத்தகைய சந்திப்பில் இந்தியாவின் நற்பெயருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும்? பிரதமர் மோடி, “அமெரிக்காவில் எந்த இந்தியரும் சட்டவிரோதமாக வாழவில்லை” என்று சொல்ல முடியுமா?
மோடி மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலின்போது கூட சட்டவிரோத நுழைவை தொடர்ந்து தேர்தல் பிரச்சினையாக மாற்றினார்.
முதலில் இந்தப் பிரச்சினை ஏன் வந்தது? மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் சட்டவிரோத குடியேற்றம் இருந்தது. இப்போது ஏன் இவர்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது? காரணம் செல்கின்றவர்கள் சங்கித்தனத்தையும் கூடவே கொண்டு செல்கின்றனர்.
இந்த சங்கிகளால் சட்டபூர்வமாக வாழும் இந்தியர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் “வெளிநாடு செல்லும் பேராசை காரணமாக குஜராத்தைச் சேர்ந்த 950 மாணவர்கள் போலி IELTS சான்றிதழ்களைப் பெற்றனர்.” IELTS என்பது ஆங்கில மொழியின் சான்றிதழ் தேர்வாகும்.
இதை தேர்ச்சி பெற்ற பிறகே அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நுழைய முடியும். ஒரு சான்றிதழைப் பெற, ஒரு மாணவர் 1.44 லட்சம் ரூபாய் செலுத்தினார்” என்ற செய்தி வெளியானது.
மோடியின் குஜராத் மாடல்
குஜராத்தின் பல நகரங்களில் 5 ஆண்டுகளாக இந்த மோசடி நடந்து வருகிறது. இந்த ஊழல் வெளிப்பட்டது, அமெரிக்காவின் ஒரு நீதிமன்றத்தில் ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க தேர்வு வைத்த போது, அவர்களால் ஏ.பி.சி.டி. கூட எழுத முடியவில்லை. ஆனால் அவர்களின் IELTS மதிப்பெண்கள் டாப் ரேங்கில் இருந்தது.
மோடியின் குஜராத்தில் வட இந்தியாவில் சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முன்வருபவர்களை அமெரிக்கா அனுப்ப பெரிய மோசடிக்கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து நாளிதழ்களில் செய்தியாக வந்துகொண்டே இருக்கிறது.
மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த அரசாங்கத்தின் காலத்தில் துவங்கி, அவர் பிரதமர் ஆனபிறகு மேலும் அதிகரித்தது. ஒரு நபருக்கு 5 முதல் 10 லட்சம் வரை வாங்குகின்றனர். இது சிறிய தொகை அல்ல. இந்த பணத்தில் யாரோ பணக்காரர்களாகி வருகிறார்கள், நம்புவது கடினம்.
லட்சக்கணக்கான ரூபாய்க்கு நிலத்தை விற்று, கடன் வாங்கி, போலி சான்றிதழ்களைப் பெறும் நிலைக்கு இந்திய இளைஞர்கள் வந்துவிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா வாழ்வதற்கே தகுதியில்லாத நாடாக மாறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது இவர்களுக்கு.
கனவுகளை நனவாக்க…
இந்தியாவில் நல்ல வாழ்க்கையின் கனவுகள் இனி சாத்தியமில்லையா? இந்த பூமியில் அமெரிக்கா போன்ற சில நாடுகள் உள்ளன, அங்கு யாரும் எங்கிருந்தாவது வந்து தங்கள் கனவுகளை நனவாக்க முடியும். தொழிலதிபராக முடியும், குடியுரிமை பெற்று அதிபர் வரை ஆக முடியும். இதுதான் அமெரிக்காவின் சக்தி.
இந்தியாவில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள், ஏனெனில் அங்குள்ள ஜனநாயகம் மிகவும் பலமானது என்று அவர்களுக்குத் தெரியும். இங்கு அனைவரின் மனித உரிமைகளும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் பாதுகாக்கப்படுகின்றன.
50 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களை தங்கள் நாட்டில் குடியேற அனுமதித்துள்ளது. டிரம்ப் வந்த பிறகும், H1B விசா மேலும் கடுமையாக்கப்படும் என்று பேசப்படுகிறது. டிரம்ப் அமெரிக்கர்களிடம் திறமை உள்ளது என்று கூறிவிட்டார்.
இன்றும், அமெரிக்கா லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நம்பிக்கையின் நாடாக உள்ளது.
2017-இன் கோல்டன் குளோப் விருது விழாவில், நடிகை மெரில் ஸ்ட்ரீப் கூறினார், “ஹாலிவுட் முக்கியமாக குடியேறிகளால் ஆனது. நீங்கள் அனைத்து குடியேறிகளையும் ஹாலிவுட்டில் இருந்து நீக்கினால், அமெரிக்காவில் சிறகைச் சூட்டிக்கொண்ட பழங்குடிகள் மட்டுமே இருப்பார்கள்” என்று கூறினார்.
இது மிகவும் முக்கியமான கருத்து ஆகும். இது குடியேறிகளில்லாமல் அமெரிக்கா ஒன்றுமில்லை என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில், பல இந்திய அறிஞர்கள் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எல்லாவற்றையும் தங்கள் உழைப்பால் அடைந்துள்ளனர். இதற்கு பதிலாக, அவர்கள் டாலர்களை சம்பாதித்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர், இதனால் இந்தியாவின் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதிகரித்து, ரூபாய் வலுப்படுத்தப்பட்டது.
அமெரிக்கா, அய்க்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர். இந்த நான்கு நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுச் செலவானி 77 விழுக்காடு ஆகும்.
உலக வங்கியின் ஒரு அறிக்கையின்படி, இந்தியாவுக்கு ஆண்டுக்கு 12% அதிக வெளிநாட்டுச் செலாவணி கிடைக்கும், இது 2022-இல் 100 பில்லியன் டாலரை எட்டியது. 2017 முதல் 2021 வரை, அமெரிக்கா யுஏஇ-யை முந்தியது.
அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான தென் இந்தியர்கள் வெறுமனே படிக்கச் செல்லவில்லை. மிகத்திறமைசாலிகளால் நிறைந்துள்ளது.
ஏன் இந்த முடிவு?
அமெரிக்கா திடீரென ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்று தெரியுமா? சிந்தியுங்கள்.
இந்தியாவின் தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினர் மோடியின் அளவுகடந்த அதிகாரத்தின் முன் தலையை தாழ்த்தி விட்டனர்.
விளைவு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்வோரின் எண்ணிக்கை பல லட்சங்களைக் கடந்துவிட்டது. இதில் முதல் பட்டியலில் 20 ஆயிரம் பேர் விரைவில் திரும்ப உள்ளனர்.
நிர்வாகத் திறனின்மை
இவர்களை வரவேற்க மோடி செல்லவேண்டும். காரணம், இவர்கள் தான் மோடி அமெரிக்கா சென்ற போது “மோடி மோடி” என்று இந்தியாவிற்கு கேட்கும்வரை காட்டுக் கூச்சலிட்டவர்கள்.
இந்த நன்றிக்காகவாவது குறைந்தபட்சம் பிரதமர் மோடி செல்ல வேண்டும். அவர்களின் வரவேற்புக்கு இந்தியா இதை சமாளிக்க வேண்டியிருக்கும்.
இவர்கள் என்னதான் “மோடி மோடி” என்று கத்தினாலும், ஒரு உண்மை என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு சென்ற பலர் மோடியின் நிர்வாகத்திறனற்ற பின்னடைவால்தான் சென்றனர் என்பதை மறக்கக் கூடாது.