‘திராவிட மாடல்’ ஆட்சிமீது அவதூறா? தமிழ்நாட்டு மக்கள் தகர்ப்பார்கள் அமைச்சர் கே.என். நேரு அறிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.24 திமுக-வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக கூறிய மு.க.ஸ்டாலின், தற்போது 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பொய் குற்றச்சாட்டு

முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறிய ’20 சதவீத தேர்தல் வாக்குறுதிகளைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை’ என்ற பொய் குற்றச்சாட்டை ஆதாரத்தோடு மறுத்து, 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என சிவகங்கை விழாவில் புள்ளி விவரத்தோடு பதில் அளித்து பழனிசாமியின் பொய் முகத்தை கிழித்தெறிந்தார்.

தமிழ்நாட்டு மக்கள் முன் பழனி சாமியின் பொய் அம்பலப்பட்டு விட்ட தால் ‘ஆட்சிக்கு வரும் முன் புகார் பெட்டி வைத்து தி.மு.க பெற்ற மனுக்கள் நிலை என்னவென்று தெரியவில்லை’ என புதிய பொய்யை இன்று சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்பது பழனிசாமிக்குத்தான் கச்சிதமாக பொருந்தும்.

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்’ என்ற வழியில் மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பேருந்து பயணம் போன்ற முக்கியமான தேர்தல் அறிவிப்புகளில் பெரும்பான்மையானவற்றை நிறைவேற் றியதோடு மட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் சொல்லாத புதுமை பெண் திட்டம், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்களையும் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் ஆட்சிக்கு வந்தபின் காற்றில் பறக்கவிடுவதையே வாடிக்கையாக கொண்ட அதிமுக-விற்கும் பழனிசாமிக்கும், சொன்னதை செய்வதோடு சொல்லாததையும் செய்து முடிக்கும் முதலமைச்சரை கண்டு வயிற்றெரிச்சல் வரத்தான் செய்யும்.
மக்கள் நலனுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தி வரும் முதலமைச்சர் மீதும் திராவிட மாடல் நல்லாட்சி மீதும் அவதூறு பரப்ப அதிமுக போடும் கணக்குகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் தவிடு பொடியாக்குவார்கள்.”

இவ்வாறு கே.என். நேரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *