புதுடில்லி, ஜன.24 தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்பதும், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் இந்தத் தொன்மை, நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்தப் பெருமையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்‘ தளத்தில் வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பதில் அளித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
‘‘இந்தியாவின் வளமான பாரம்பரி யம் உலகுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தியதை தமிழ்நாட்டின் சமீபத்திய தொல் பொருள் கண்டுபிடிப்புகள் வெளிப் படுத்துகின்றன. இது இரும்பு யுகத்தில் இந்தியாவின் தொடக்ககால முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன் இந்தியாவின் கண்டுபிடிப்பு மற்றும் ஒருமைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூ கத்திலும், குரலிலும் செழித்து வள ரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டா டுவோம்.’’
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.