பிரயாக்ராஜ் நகரமும் – பார்ப்பனர் சரடும்!

viduthalai
3 Min Read

9 ஆம் நூற்றாண்டுவரை வேதமதம் இந்தியா முழுவதும் பரவவில்லை – அப்படி என்றால் இந்த கும்பமேளா எப்போது துவங்கியது என்ற கேள்வி எழலாம்.

கும்பமேளா நடக்கும் இடத்தின் பெயர் மகாதான் பூமி என்றுதான் 6 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைய சங்கம் இருக்கும் பகுதி.

கொடையளித்தல்

பிரயாக் என்பது அலகாபாத்தின் மிகவும் பழைமையான பெயர் – அசோகரின் காலத்தில் இருந்து இந்த பெயர் இருப்பதாக கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளது. யுவாங் சுவாங் அவருக்கு முன்பு வந்த பாகியான் இதனை பிரயாக் ராஜ் என்று கூறினர். பிரயாக் சமஸ்கிருதப் பெயர் அல்ல, அது பாலி மொழி – பாலிமொழியில் பிரயாகம் என்பதற்கு கொடை என்று பொருள். ஆனால் சமஸ்கிருதத்தில் பிரயாக் என்பது தியாகம் செய்வது என்று மாறிவிட்டது.

கொடையளிக்கும் இடம் தான் மகாதான்பூமி – அதாவது இன்றைய சங்கம், இதை வைத்து இந்த ஊருக்கு பிரயாக் என்று பெயர் வந்தது.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னர்கள் பெரும் செல்வந்தர்கள். பவுத்த துறவிகளுக்கு தங்களின் வாழ்நாள் சொத்துக்களை கொடையளிக்க இந்த இடத்திற்கு வருகின்றனர்.

பெருஞ்செல்வம்

யுவாங் சுவாங் எழுதுகிறார். சங்கம் கரையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் குஷானப் பேரரசு காலத்தில் கட்டிய மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று இருந்தது, அந்த சிலை இருந்த பெரிய அறையில் தங்கம், வைரம், வைடூரியம், என பல செல்வங்களை கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருந்தனர். இவை அனைத்தும் தரித்திரர்கள், ஏழைகள், அநாதைகள், ஆதரவில்லா பெண்கள், கணவனை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத உடல் நிலையைக் கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது, மீதம் நாடு முழுவதும் உள்ள பவுத்த மடம் மற்றும் நாலந்தா, தட்ஷசீலா, காஞ்சீ, நாகப்பட்டினம் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பவுத்த பல்கலைக்கழகங்களுக்கு தானம் கொடுக்கப் பட்டது.

சமணத் துறவி

மவுரியப் பேரரசின் முதல் மன்னரான சந்திரகுப்த மவுரியா தனது மகனான பிந்துசாரருக்கு தனது பதவியை ஒப்படைத்துவிட்டு, தனக்கான செல்வங்களை எல்லாம் கொடையளித்தார். பின்னர் அவர் ஆடைகளைக் களைந்து வைசாலி சென்று அங்கிருந்து விதிஷா வந்து பிறகு இன்றைய கருநாடகாவில் உள்ள பெலகாவியில் வந்து நீண்ட ஆண்டுகள் சமணத்துறவியாக வாழ்ந்து தன்னுடைய 89 ஆவது வயதில் உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார்.

இவர் தனக்கான சொத்துக்கள் அனைத்தையும் மகாதான்பூமியில் அதாவது பிரயாக்ராஜ் வந்து கொடையளித்தார் என்று ஜெயின் நூல்கள் குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்கள் எந்தக் காலத்தில் உண்மையை அல்லது சான்றுகளோடு உள்ள கல்வெட்டு மற்றும் தாமிரப்பட்டய எழுத்துக்களை நம்பினார்கள்.

புதிய கதை

அவர்கள் பிரயாக் என்ற பெயர் தங்களால் வைக்கப்பட்டது என்று ஊரை நம்பவைக்க புதிய கதை ஒன்றை எழுதிவிட்டனர். அந்தக்கதை இதுதான்

16ஆம் நூற்றாண்டில் அக்பர் சங்கம் கரையில் பெரிய கோட்டை ஒன்றை கட்ட முயல்கிறார் – மூன்று முறை முயன்றும் கட்ட முடியாமல் போகவே பிரயாக் என்ற பார்ப்பனன், அக்பரிடம் வந்து இந்த இடத்தில் கோட்டை கட்டவேண்டும் என்றால் 4 வேதம் கற்ற பார்ப்பனரை பலியிடவேண்டும். அதன் பிறகுதான் இங்கு கோட்டை கட்டமுடியும் என்று கூறுகிறார்.

சரடு

முதலில் 4 வேதம் தெரிந்த பார்ப்பானை நான் எங்கு சென்று தேடுவேன் என்று அக்பர் கூறும் போது நானே சங்கம் பகுதியில் நதியில் மூழ்கி எனது உயிரை விடுகிறேன், எனக்கு நீ செய்ய வேண்டியது ஒன்றுதான் – இந்த இடத்தை நான் இறந்த பிறகு பிரயாக் என்று எனது பெயரில் அழைக்க வேண்டும். மேலும் இனிமேல் இங்கு வருபவர்கள் தரும் பொருளை பார்ப்பனர்களுக்கு கொடுத்தது போக மீதியை துறவிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, நதியில் விழுந்து விட்டான் என்று கதைவிடுகிறார்கள்.
எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் தங்களைப் பலி கொடுத்தார்கள் – வரலாற்றில் எங்குமே கிடையாது என்றால் பிரயாக் என்ற பார்ப்பனர் மட்டும் எப்படி தன்னைத்தானே பலி கொடுப்பான். அதாவது பார்ப்பனர்களால் இந்தப்பகுதிக்கு பிரயாக் என்ற பெயர் உருவானது என்பதற்கு புதிய கதை ஒன்றை உருவாக்கி விடுகின்றனர் அவ்வளவே.

கிறிஸ்துவிற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வந்த மிகப் பழைமையான ஊர்ப்பெயரை பார்ப்பனர்கள் 16ஆம் நூற்றாண்டில் தங்களால் சூட்டப்பட்டது என்று புதிய கதை விடுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *