சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா

Viduthalai
8 Min Read

  பொங்கல்விழா – திராவிடர் திருநாள் விழா நிகழ்ச்சிகள்!
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்த
சிறப்பு அம்சங்கள் பொருந்திய இனவுணர்வுத் திருவிழா!

சென்னை, ஜன.16 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 31ஆம் ஆண்டு விழா, தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு – பொங்கல் விழா, திராவிடர் திருநாள் நிகழ்வுகள் சென்னை பெரியார் திடலில் நேற்று (15.01.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்

காலை 10 மணி முதலே கழகத் தோழர்கள், சுயமரியாதை உணர்வாளர்கள் குடும்பத்துடன் வரத் தொடங்கினர். 11 மணியளவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகளுடன் தொடங்கிய நிகழ்வு, மாலை 4 மணி வரை நீடித்தது. வட சென்னை, தென்சென்னை, திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, தாம்பரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தோழர்கள் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டிகளை பா.சு.ஓவியச் செல்வன், பொன்னேரி செல்வி, மு.கலைவாணன், பகலவன் மற்றும் தோழர்கள் காலை முதலே நடத்தினர். ஓட்டப்பந்தயம் போன்ற வழக்கமான போட்டிகளைத் தாண்டியும், சுவையான விளையாட்டுப் போட்டிகள் பல நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாமல், அனைத்து வயதையும் சேர்ந்த ஆடவர், மகளிர் இப்போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கொருமுறை இத்தகைய வேடிக்கை விளை யாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதும், குடும்பத்துடன் அதில் பங்கேற்பதும் தனி உற்சாகத்தை வழங்குகிறது என்பதை உணர முடிந்தது. அடிக்கிற காற்றுக்கு இடையில் பலூனை விரட்டிச் சென்ற அப்பா, தாத்தாக்களையும், சைக்கிள் டயரை உருட்டி ஓட்டிய அம்மா, பாட்டிகளையும் பார்த்து சிறுவர்களும், இளைஞர்களும் குதூகலித்தனர். விளையாட்டுப் போட்டிகளை நடத்த சீர்த்தி, மகிழ் உள்ளிட்டோர் உதவியாக இருந்தனர்.
மதிய உணவாக அனைவருக்கும் சுவையான பிரியாணி வழங்கப்பட்டது. மதிய உணவுக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தாம்பரம் முத்தையன், பசும்பொன் செந்தில்குமாரி, வி.பன்னீர்செல்வம், புரசை சு.அன்புச்செல்வன் மற்றும் தோழர்கள் மேற்கொண்டனர்.  மதிய உணவுக்குப் பிறகும் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்தன.

கலைநிகழ்ச்சிகள்

மாலை சரியாக 4 மணிக்கு, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் கிராமியக் கலைமணி மதுரை தங்கவேல் குழுவினரின் தப்பட்டை ஆட்டமும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் தொடங்கின. வழக்குரைஞர் தளபதி பாண்டியன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் அனைவரையும் நெறிப்படுத்தி அழைத்துவந்தனர். கலைநிகழ்ச்சிகள் ஈ.வெ.கி.சம்பத் சாலை வழியாக பெரியார் திடலை வந்தடைந்தன.
பறையிசை முழக்கத்துடன் உள்ளே நுழையவும், பொங்கல் பொங்கிடவும் சரியாக இருந்தது. “பொங்கலோ பொங்கல்” என்ற முழக்கமும், பறையும் ஒலிக்க, அரங்கத்தினுள் சென்றனர் அனைவரும்.

நேரலையில்…

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர், நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தோர் மட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கு வர விரும்பாதோரும் கூட பெரிதும் எதிர்பார்த்த நிகழ்வு அடுத்து நடக்க இருந்தது.

சங்கீத கலாநிதி டாக்டர் டி.எம்.கிருஷ்ணா

அனைவரின் கரவொலியுடன் செவ்வியல் இசைஞர், சங்கீத கலாநிதி டாக்டர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் செவ்வியல் மக்களிசை தொடங்கியது. பெரியார் திடலில், இந்த மேடையில் ஆசிரியர் அய்யா முன்னிலையில், இப்பாடல்களைப் பாடுவதில் மகிழ்ந்து, அது தொடர்பான முன்னுரையையும் வழங்கிவிட்டு, எழுத்தாளரும் கவிஞருமான பெருமாள் முருகன் அவர்களின் “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற தந்தை பெரியார் பற்றிய பாடலையும், அண்ணல் அம்பேத்கர் பற்றிய போற்றிப் பாடலையும், “சுதந்திரம் வேண்டும் எதையும் எழுத, எதையும் பேச, எதையும் பாட” என்ற கருத்துரிமைக்கான பாடலையும் பாடப் பாட அரங்கம் அதிர கரவொலி எழுந்தது.

மேடைக்கு வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், டாக்டர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் செவ்வியல் இசையை, மக்களிடம் கொண்டு செல்ல ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டி, வாழ்த்தி உரையாற்றியதுடன், டி.எம்.கிருஷ்ணா அவர்களே எதிர்பாராத வகையில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் “மக்களிசை மாண்பாளர்” என்ற பட்டத்தையும், அதற்கான கேடயத்தையும், புத்தகங்களையும் வழங்கி, சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். டி.எம்.கிருஷ்ணா அவர்கள் சில நிமிடங்கள் ஏற்புரை வழங்கி, அடுத்த நிகழ்ச்சிக்காக விடைபெற்றுச் சென்றார்.

ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

சிந்துவெளி ஆய்வுகளைப் புதிய திக்கில் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்த்துவரும், ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பாராட்டிச் சிறப்புச் சேர்க்கும் வகையில், மேடைக்கு அழைத்து சால்வை அணிவித்து, புத்தகங்கள் வழங்கிப் பாராட்டி உரையாற்றினார் தமிழர் தலைவர். எதிர்பாராத இந்தப் பாராட்டினை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்துச் சில நிமிடங்கள் உரையாற்றிய ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., ‘திராவிடர்களின் பண்பாட்டிலும், இலக்கியங்களிலும் எருமை மாட்டின் சிறப்புகளையும், நம் அடையாளங்களுள் ஒன்றாகவும் இருப்பதை’ எடுத்துக் காட்டினார். அத்தகைய பண்பாட்டு நினைவை, “பேதமற்ற மாட்டுப் பொங்கல் விழா” என்ற தலைப்பில் இந்த விழாவின் ஓர் அங்கமாகச் செய்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, விழாவின் ஒரு பகுதியாக எருமை மாடு, பசு மாடு ஆகியவை பெரியார் திடலின் ஒரு பகுதியில் கட்டப்பட்டு, மாட்டுப் பொங்கல் நடைபெற்றது. அதனைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ்., டாக்டர் டி.எம்.கிருஷ்ணா, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டு, பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர்.

பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் – சிலம்பாட்டம்

செவ்வியல் இசை முடிந்ததும், மீண்டும் பெரியார் திடலில் வெளிப்புற அரங்கில் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் சிலம்பாட்டம் நடைபெற்றது. பறையிசைக்கும், மாடாட்டம், மயிலாட்டத்திற்கும் அனைவரும் மகிழ்ந்து இசைந்து ஆடினர். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அனைவருக்கும் பொங்கலும், வடையும் வழங்கப்பட்டன. உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் விருது வழங்கும் விழா

பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் மாலை 6 மணிக்கு மேல் திராவிடர் திருநாளின் மய்ய நிகழ்ச்சியான பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்வில் பெரியார் சுயமரியாதை திருமண மய்யத்தின் இயக்குநர் பசும்பொன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது வரவேற்புரையில், திராவிடர் திருநாள் நிகழ்ச்சி 31 ஆண்டுகளாக நடைபெற்று வருவதையும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கி

சிறப்பிக்கப்பட்டுள்ளதையும், ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளதையும் குறிப்பிட்டார். விழாவை தலைமையேற்று புலவர் வெற்றியழகன் உரையாற்றினார். அவர் தனது தலைமை உரையில் இது திராவிடர் திருநாள், தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாள், தமிழ்ப்புத்தாண்டு திருநாள், தைத் திருநாள், உழவர் திருநாள், உண்மைத் திருநாள், நன்றித் திருநாள், பண்பாட்டுத் திருநாள், பகுத்தறிவுத் திருநாள் என்று அடுக்கி மக்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார். அதைத் தொடர்ந்து தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன் நிகழ்ச்சியை முறைப்படி தொடங்கி வைத்து உரையாற்றினார். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்வை ஒருங்கிணைத்துச் சிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து பெரியார் வீர விளையாட்டுக்கழகம் சார்பில் யாபேஷ், யுவராஜ் சிங் தலைமையில் பங்கெடுத்துக்கொண்ட தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிறப்பு செய்தார். பிறகு “கிராமியக் கலைமணி” மதுரை கே.பி.தங்கவேல் பறையாட்டம் குழு சார்பில் பறையிசை, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திய குழுவினருக்கு கழகத் தலைவர் மரியாதை செய்தார். இரண்டு குழுவினரும் கழகத் தலைவருடன் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஜெயகோபால் ரவி, மாரிமுத்து அகிலன், கென்னித்ராஜ் அன்பு, தோழர் ரோகிணி!

அனைவரும் எதிர்பார்த்த பெரியார் விருது வழங்கும் விழா தொடங்கியது. முதலில் பெரியார் விருதுக்கான சிறப்புக் காணொலி திரையிடப்பட்டது. முதலில் விசாகப்பட்டனம் ஜெயகோபால், நாத்திக நடிகர் மாரிமுத்து, ரோபோடிக் தலைமை செயல் நிர்வாகி கென்னித்ராஜ் அன்பு, திரைக்கலைஞர் தோழர் ரோகிணி ஆகியோரின் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு, அவர்களுக்கு கழகத் தலைவர் ஆடையணிவித்து மரியாதை செய்து ”பெரியார் விருது” வழங்கி, அத்துடன் புத்தகங்கள், சான்றிதழ் ஆகியவற்றை நினைவுப் பரிசுகளாக வழங்கினார். ஒவ்வொரு விருதாளர்கள் விருது பெறும் போதும் தாங்களே விருது பெற்றது போல் பார்வையாளர்கள் நீண்ட நேரம் கரவொலி செய்து மகிழ்ந்தனர். விருது பெற்றவர்கள் சார்பாக முறையே ஜெயகோபால் ரவி, மாரிமுத்து அகிலன், கென்னித்ராஜ் அன்பு, தோழர் ரோகிணி ஆகியோர் ஏற்புரை நல்கினர்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் விழாப் பேருரை!

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விழா பேருரை ஆற்றினார். அவர் தனது உரையில் விருது பெற்றவர்களின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். ”பெரியாருக்கு இருந்தது மானுடப்பற்று, வளர்ச்சிப்பற்று” என்றார். “அதற்கு குறுக்கே வந்த தடைகளையெல்லாம் எதிர்த்துப் போராடினார்” என்றார். “சமூகத்தின் சரிபாதியாக இருந்த பெண்களை அடிமைப்படுத்தி சமூகத்தின் சரி பகுதி மக்களின் மனித வளத்தை பயன்படுத்தாமல் செய்த ஒரு தத்துவத்தை எதிர்க்க வேண்டுமா? வேண்டாமா? இதை இன்றைய சமூகம் புரிந்து கொள்ள வேண்டுமா? வேண்டாமா?” என்று தொடர் கேள்விகள் எழுப்பினார். இந்த அடிப்படையில் ஜோதிடம், கடவுள் போன்ற மூடநம்பிக்கைகளை பெரியார் எதிர்த்தது ஏன் என்பதை பளிச்சென்று புரியும் வண்ணம் நகைச்சுவையாக சொல்லி பார்வைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் அவர், பெரியார் பொங்கல் வாழ்த்து, குறள் வாழ்த்து பற்றி 1949 இல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை படித்துக்காட்டி தந்தை பெரியார் பற்றிய ஒரு புதிய தகவலை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். இறுதியாக பண்பாட்டைக் காக்க வேண்டும் என்று மூடநம்பிக்கையற்ற, அவதாரத் தேவையற்ற தமிழர் திருநாள் இதுதான்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். பெரியார் விருது நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், குடும்ப விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இறுதி வரையிலும் பார்வையாளர்கள் காத்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

பங்கேற்றோர்

விழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகத்தின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பொருளாளர் சி.தமிழ்ச்செல்வன், மருத்துவரணித் தலைவர் டாக்டர் மீனாம்பாள், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், தமிழறிஞர்கள், பல்துறை பெருமக்கள் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை வை.கலையரசன், மரகதமணி, நா.பார்த்திபன், சோ.சுரேஷ், பவானி, ரங்கநாதன், வஜாஹத், ஆதிலட்சுமி, ஞானதேவி, கலைச்செல்வன், பசும்பொன் செல்வி, உடுமலை வடிவேல், கோவி.கோபால், நிலவன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பா.பார்த்திபன், கவின், வ.வேலவன் உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிரணித் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டு உழைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *