திருப்பதி, ஜன.9 திருப்பதியில் இலவச வழிபாடு டோக்கன் வாங்கும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் நாளை (10.1.2025) முதல் 19 ஆம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசலை வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்தவர்களில் ஒருவராவார்.
அய்யப்பன் கை விட்டானே சபரிமலை கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் இருவர் மரணம்!!
ராணிப்பேட்டை, ஜன. 9 சபரிமலை அய்யப்பனை பார்க்க சென்ற அய்யப்ப பக்தர்கள் இருவர் மரணம் அடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 40. இவர் ‘டிராவல்ஸ் ஏஜென்சி’ நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டையில் உள்ள குழுவினருடன் சபரிமலைக்கு அய்யப்பனை பார்க்க சென்றார். அங்கு பாம்பாவில் குளித்துவிட்டு நீலிமலை வழியாக சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடன் சென்றவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் அப்பகுதியில் இனிப்புப் பலகாரக் கடை நடத்தி வருகிறார். சபரிமலைக்குக் குழுவினருடன் சென்றார். அங்கு மலை ஏறிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு் உயிரிழந்தார்.