மன்மோகன் சிங் மறைவு தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள் ஏழு நாட்கள் ரத்து

viduthalai
2 Min Read

சென்னை, டிச.28- மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலும் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான அறிவிக்கையை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:

மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் கடைப்பிடிக்க ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டிலும் வரும் ஜன.1-ஆம் தேதி வரை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதுவரையிலும் மாநில அரசு சார்பில் அதிகாரபூா்வமாக எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

மேலும், அரசுக் கட்டடங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை கொத்தளம்

சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் தினமும் காலை தேசியக் கொடியேற்றப்படுவது வழக்கம். மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவு காரணமாக, தேசியக் கொடி அரைக் கம்பத்திலேயே பறக்க விடப்பட்டது.

இதேபோன்று, சென்னையில் உள்ள இதர அரசு கட்டடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறந்தது.

நிகழ்ச்சிகள் இல்லை

அரசு முறை துக்கம் கடைப்பிடிப்பதால், மாநில அரசு சார்பில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சி, சென்னை புத்தகக் காட்சி ஆகியவற்றின் துவக்க விழாக்கள் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று (27.12.2024) மாலை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், அரசு முறை துக்கம் காரணமாக, நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. காட்சி அரங்குகளை மட்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். மேடையில் நிகழ்ச்சிகளோ, விருது வழங்கும் நிகழ்வுகளோ நடைபெறவில்லை.

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா

இதனிடையே, கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைக்கப் பட்டதன் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் வரும் 30-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பிதழ்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு முறை துக்கம் காரணமாக, அந்த நிகழ்ச்சிகள் நடைபெறுமா, இல்லையா என்பது குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *