புதுடில்லி, டிச.17 இலங்கை சிறையில் 141 தமிழ்நாட்டு மீனவர்கள் உள்ளதாக ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தகவல் அளித்துள்ளார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சுதா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், “தமிழ்நாட்டு மீனவர்களின் 198 படகுகளை சிறைப்பிடித்து முடக்கி வைத்துள்ளது இலங்கை அரசு. சிறையில் அடைக்கப்பட்ட 141 தமிழ்நாட்டு மீனவர்களில் 96 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ளனர். வங்கதேச சிறையில் 95 இந்திய மீனவர்கள், 6 படகுகள், பாகிஸ்தானில் 214 பேரும், 1472 படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.
2024 ஜூலை 1இல் இந்தியா – பாகிஸ்தான் தகவல் பரிமாற்றத்தின்படி பாகிஸ்தான் சிறையில் 241 பேர் உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் மீனவர்களை அவரவர் நாட்டுக்கு ஒப்படைப்பது பற்றி 2008 மே 21இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தப்படி ஜன.1 மற்றும் ஜூலை 1 அன்று இந்தியா- பாக். மீனவர்கள் மற்றும் கைதிகள் ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது. பஹ்ரைன் சிறையில் 37 இந்திய மீனவர்களும், சவுதி சிறையில் 25 மீனவர்களும், கத்தாரில் 4 மீனவர்களும் உள்ளனர்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.