அரியானா, டிச.14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேச மற்றும் அரியானாவின் டில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பட்டினிப் போராட்டம்
இந்த வார தொடக்கத்தில் டில்லி நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இருப்பினும் ஒன்றிய அரசு செவி சாய்க்கும் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான கானொலியில் பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவம்பர் 26 முதல் நடத்தும் சாகும் வரை பட்டினிப் போராட்டம் 12.12.2024 அன்று 17ஆவது நாளை எட்டியது. அவர் தற்போது மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
‘‘தாம் நாட்டின் சாதாரண விவசாயி என்றும், பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் கனத்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் நான் இறந்தால் ஒன்றிய அரசுதான் அதற்கு பொறுப்பு. போராட்டங்கள் நடக்கும் இடத்தில் காவல்துறையினர் ஏதாவது செய்தால், அந்த பொறுப்பும் ஒன்றிய அரசின் மீதுதான் விழும்’’ என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.